புதன், 25 டிசம்பர், 2013

TN 40 தொகுதிகளில் 36ல் தி.மு.க., போட்டியிட முடிவு !

லோக்சபா தேர்தலை சந்திக்கத் தயாராகி விட்ட, தி.மு.க., தலைமை, அதற்கான வேலைத் திட்டங்களை வகுத்துள்ளது. பிப்ரவரியில் நடக்கும் திருச்சி மாநாட்டில், வேட்பாளர் அறிவிப்பை வெளியிடும் வகையில், கூட்டணி பேச்சு, தொகுதிப் பங்கீட்டை முடிக்க வேண்டும் என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், 36ல் தி.மு.க., போட்டியிட முடிவு செய்துள்ளது. மேலும், தற்போதைய கூட்டணியை விரிவுப்படுத்தும் திட்டமும், தி.மு.க.,விடம் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை அறிவாலயத்தில் நேற்று, கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். பொருளாளர் ஸ்டாலின், முதன்மை செயலர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஏ.வ.வேலு போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை போன்ற விஷயங்கள் குறித்து, விவாதிக்கப்பட்டது.

இதில், எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து, அறிவாலய வட்டாரம் கூறியதாவது:அறிவாலயம் வரும் கருணாநிதியுடன், வழக்கமாக நிர்வாகிகள் சந்தித்துப் பேசுவது உண்டு. தூத்துக்குடி மாவட்ட தி.மு.க.,வில், மாவட்ட செயலர் பெரியசாமிக்கும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் இடையே நடந்த மோதல் குறித்து, நேற்று, விசாரணை நடத்தப்பட்டது. எனவே, முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வந்திருந்தனர்.விசாரணை முடிந்ததும், அவர்களுடன், தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கலாம் என, திடீரென முடிவு செய்யப்பட்டது. எனவே, இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆலோசனை கூட்டம் அல்ல. ஆனால், அதிகாரப்பூர்வமாக, சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில், தேர்தல் அறிக்கை தயாரிக்க, ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த குழுவில்,டி.ஆர்.பாலு, கனிமொழி, ராஜா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர்.கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, ஸ்டாலின் தலைமையி"ல் குழு அமைப்பது என, தீர்மானிக்கப்பட்டது. அதி"ல், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு இடம்பெறுவர் எனத் தெரியவந்துள்ளது.

இக்குழுவினர், தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளுடன், பொங்கல் திருநாள் முதல் பேச்சு வார்த்தையை துவங்க உள்ளனர். தி.மு.க.,வை பொறுத்த வரையில், தை முதல் நாள் தான், தமிழ் புத்தாண்டு. எனவே, அன்றைக்கே கூட்டணி பேச்சு துவக்கப்படலாம்.தற்போது, தி.மு.க., அணியில் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகள் உள்ளன. இக்கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 36 தொகுதிகளில் போட்டியிட
வேண்டும் என்பது தான் தி.மு.க.,வின் இலக்கு.ஒருவேளை கூட்டணி விரிவடைந்தால், அந்த கணக்கு மாறலாம். ஆனால், இப்போதுள்ள கூட்டணியை வைத்தே, தேர்தல் பணிகளை திட்டமிடுமாறு, தலைமை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு ஆகியவை, பொங்கலில் துவங்கி, பிப்ரவரி,10ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளன. பிப்ரவரி, 10 முதல், வேட்பாளர் தேர்வு துவங்குகிறது. பிப்ரவரி, 15, 16 ஆகிய நாட்களில், திருச்சியில், மாநில மாநாடு நடத்தப்படுகிறது. அந்த மாநாட்டில், கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பது கருணாநிதி விருப்பம். எனவே, அதற்கு முன்பாக, எல்லா பேச்சு வார்த்தையும் முடிக்கப்பட்டு விடும். மாநாட்டுக்கு பிறகு, கட்சியின் வாக்குறுதிகள் அடங்கிய, தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். தேசிய பிரச்னைகள், மாநில, மாவட்ட பிரச்னைகள் என, மூன்று விதமாக பிரித்து, அதற்கேற்ப தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என, நேற்றைய கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிவாலய வட்டாரம் தெரிவித்தது.

நமது சிறப்பு நிருபர் தினமலர்.கம 

கருத்துகள் இல்லை: