புதன், 25 டிசம்பர், 2013

நாடு முழுவதும் 3.2 கோடி வழக்குகள் தேக்கம்: விரைவு கோர்ட்டுகள் இருந்தும் பயன் இல்லை

புதுடில்லி : நாடு முழுவதும், 1,000க்கும் மேற்பட்ட விரைவு கோர்ட்டுகள் இருந்தும், மூன்று கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள், இன்னும் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது 11வது நிதிக்குழு:நீண்ட காலமாக, தீர்வு காணப்படாமல், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, விரைந்து தீர்வு காண்பதற்காக, 11வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, 2000ம் ஆண்டில், நாடு முழுவதும், விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டன.இதன்படி, கடந்த, 11 ஆண்டுகளில், 1, 192 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த விரைவு கோர்ட்டுகள் மூலம், 11 ஆண்டுகளில், 32 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனாலும், 3.2 கோடி வழக்குகளுக்கு, இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்த தகவலை, மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், சமீபத்தில், பார்லிமென்ட்டில் தெரிவித்தார்.
நான்கு லட்சம் வழக்குகள்:
அதிகபட்சமாக, குஜராத் மாநிலத்தில் உள்ள, 61 விரைவு கோர்ட்டுகளில், 4.3 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உ.பி.,யில், 153 கோர்ட்டுகள் மூலம், நான்கு லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, 49 விரைவு கோர்ட்டுகள் மூலம், 3.7 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


பணியாளர்கள் இல்லை:

இதுகுறித்து, டில்லி ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி, எஸ்.என்.திங்காரா கூறுகையில், ''நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டுமெனில், நீதிபதிகளை அதிக அளவில் நியமிக்க வேண்டும். கோர்ட்டுகளில், போதிய அளவில் பணியாளர்கள் இல்லாததும், வழக்குகள் தேக்கமடைவதற்கு முக்கிய காரணம்,'' என்றார்.

டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர், சுஷில் குமார் கூறுகையில், ''ஏராளமான வழக்குகளில், ஒரே நேரத்தில் பங்கேற்க வேண்டியிருப்பதால், அரசு வழக்கறிஞர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. அரசு வழக்கறிஞர்கள், ஒரே நேரத்தில், இரண்டு வழக்குகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் போது, அவற்றில் ஏதாவது ஒரு வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டியுள்ளது,'' என்றார்.

மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், ''வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக, கடந்த, 11 ஆண்டுகளில், 870 கோடி ரூபாயை, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது,'' என்றார்.
dinamalar.com

கருத்துகள் இல்லை: