வியாழன், 26 டிசம்பர், 2013

மும்பை பெண்ணை தாக்கிய பஹ்ரெயின் துணை தூதர்! ராஜதந்திர பாதுகாப்பு காரணமாக கைது இல்லை!!


இந்தியாவுக்கான பஹ்ரெயின் துணை தூதர் மீது பெண் ஒருவரை தாக்கியதாக கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. பஹ்ரெயின் துணை தூதருக்கு வெளிநாட்டு ராஜதந்திரி என்ற பாதுகாப்பு (diplomatic immunity) உள்ளதால், மும்பை போலீஸ் இன்னமும் அவரை கைது செய்யவில்லை.
மும்பையில் உள்ள பஹ்ரெயின் தூதரகத்தில் துணை தூதராக பணிபுரியும் அப்துல் அசீஸ் அல்-காஜா, மல்பார்ஹில் (மும்பை) பகுதியில் உள்ள சில்வர் ஆர்ச் ஹவுஸிங் சொசைட்டி அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறார். அந்த பில்டிங்கில் புதிதாக அமைக்கப்பட்ட லிஃப்ட் சரியாக இயங்காத காரணத்தால், லிஃப்டின் கதவுகளை உதைத்துக் கொண்டிருந்தார் துணைத் தூதர் காஜா.

இதனால் ஏற்பட்ட பெரிய சத்தம் கேட்டு அங்கு வந்த ஹவுசிங் சொசைட்டியின் பெண் மேனேஜர், “எதற்காக லிஃப்டை உதைக்கிறீர்கள்” என்று கேட்டதால் கோபமடைந்த பஹ்ரெயின் துணை தூதர், லிஃப்டை உதைப்பதை நிறுத்திவிட்டு, பெண் மேனேஜரை உதைக்க தொடங்கிவிட்டார் என்பதே, மல்பார்ஹில் போலீஸில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு.
பெண் ஒருவரை தாக்கியது, மற்றும் தாக்கப்பட்ட பெண்ணை தொடக்கூடாத இடங்களில் தொட்டது ஆகிய குற்றங்களுக்காக, பஹ்ரெயின் துணை தூதர் மீது ஐ.பி.சி. குற்றப் பிரிவுகள் 354, 509 மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. இந்த விபரம், டில்லியில் உள்ள பஹ்ரெயின் பிரதான தூதரகத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய துணைத்தூதர் தேவயானி அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையில் உள்ள நிலையில், மும்பையில் உதை கொடுத்த பஹ்ரெயின் துணைத் தூதர் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ!
viruvirupu.com

கருத்துகள் இல்லை: