உங்கள் பகுதியில் இருக்கும் ஆயிரம் படகுகளைப் பார்த்து எங்களுக்கு வருத்தமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. இப்போதே இங்கு மீன் வளம் நீர்த்துவிட்டது,இலங்கை மீனவர.்
தமிழக மீனவர்களால் தங்களுக்கு இடையூறுகள் ஏற்படாமல் இருக்கும் வழிவகை குறித்து ஆலோசிக்க இலங்கைத் தமிழ் மீனவர் குழு ஒன்று, கடந்த 17-ம் தேதி ராமேஸ்வரம் வந்தது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க யாழ்ப்பாணம், வடமராச்சி, வன்னி, மன்னார் பகுதிகளைச் சேர்ந்த மீனவ அமைப்பு களின் நிர்வாகிகள், பேசாலை பங்குத் தந்தை புஷ்பராஜ், இலங்கை மீன் துறை இணை இயக்குநர் லால் டிசில்வா மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட 21 பேர் வந்தனர்.
ராமேஸ்வரம் தீவு மீனவர்களால் வரவேற்கப்பட்ட இவர்கள், மறுநாள் காலை பாம்பன், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகங்களுக்கு சென்று, அங்கு இருந்த நம் மீனவர்களின் படகுகளைப் பார்த்து வியந்ததுடன், மீன்பிடி முறைகளையும் கேட்டனர். அன்று மாலை தங்கச்சிமடத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு முன், இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட 'நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு' நிர்வாகி களான விவேகானந்தன், யு.அருளானந்தம் ஆகியோரிடம் பேசினோம்.
''83-ம் ஆண்டில் இருந்தே இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே மீன் பிடிப்பதில் பிரச்னைகள் உள்ளன. அங்கே போர் முடிவுக்கு வந்த நிலையில், இனி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என நம்புகிறோம். மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியவை, இந்தப் பிரச்னையில் இரு நாட்டு மீனவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை எட்ட வேண்டும். மீனவர்கள் ஏற்றுக் கொள்ளாத திட்டத்தால் அரசுகளால் ஏதும் செய்ய முடியாது. தற்போது, மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இலங்கை மீனவர்கள் நம்மால் பாதிக்கப்படாமல் இருக்கவும், நமது மீனவர்களும் பாதிக்கப்படாத வகையிலும் இருக்க இந்தப் பேச்சுவார்த்தை வழி வகுக்கும்!'' என்றனர்.
கலந்தாய்வுக் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய இலங்கை மீனவர் குழுத் தலைவர் சூரியகுமரன், ''பரஸ்பரமாக மீன் பிடித்த நமக்குள் கால மாற்றமும், தொழில் மாற்றமும் பிரச்னைகளை ஏற்படுத்தி விட்டன!
உங்கள் பகுதியில் இருக்கும் ஆயிரம் படகுகளைப் பார்த்து எங்களுக்கு வருத்தமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. இப்போதே இங்கு மீன் வளம் நீர்த்துவிட்டது. இனி எதிர்கால சந்ததிகளின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற நிலையில் நீங்கள் எங்கள் பிரதேசத்துக்குள் மீன் பிடிக்க வருகிறீர்கள். நீங்கள் வரும் டிராலர்கள் எங்கள் மக்களின் சிறு வலைகளை நாசப்படுத்துகிறது. எங்கள் கரையில் இருந்து பார்த்தால், உங்கள் டிராலர்களின் வெளிச்சம் தெரியும் அளவுக்கு எல்லை தாண்டி வருகிறீர்கள். மீன் வளத்தை அழிக்கும் தங்கூசி (நைலான்) வலைகளைப் பயன்படுத்தித் தொழில் செய்கிறீர்கள். இதனால் எங்கள் பிரதேசமும் மீன் இல்லாப் பிரதேசமாக மாறிவிடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. ஏற்கெனவே, எல்லாம் இழந்து தவித்து எஞ்சி இருக்கும் மக்களின் வாழ்க்கைக்கு ஊறு ஏற்படுத்த வேண்டாம் என முறையிடவே வந்துள்ளோம். எங்கள் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள். எல்லை தாண்டி வந்தாலும் எங்கள் கட்டுப்பாட்டை மீறாதீர்கள்!'' என தாங்கள் வந்த நோக்கத்தை விவரித்தார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர்கள் என்.ஜே.போஸ், அந்தோணி ஆகியோர், ''குறைந்த கடல் பரப்பைக்கொண்ட நாங்கள் எல்லை தாண்டுவது தவிர்க்க முடியாதது. மீனுக்கும் மீனவனுக்கும் எல்லைகள் கிடையாது. எங்களை நவீன மீன் பிடிப்புக்குத் தள்ளியது எங்கள் அரசுதான். அதன்படி ஆண்டுக்கு 70 நாட்கள் மட்டுமே நாங்கள் தொழில் செய்கிறோம். இதை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஆண்டு முழுவதும் உயிர் வாழ்கின்றன. அதனால்தான் 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் துவங்கிய இந்தத் தொழில் இப்போது 50 லட்சம் வரை உயர்ந்துவிட்டது. இந்த நிலையில், உடனடியாக எங்கள் தொழிலை மாற்றச் சொல்லி முறையிடுவது ஏற்கக்கூடியதாக இல்லை. ஆனாலும், உங்கள் கஷ்டங்களையும் நாங்கள் புரிந்துகொண்டு, காலப்போக்கில் எங்கள் மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்வோம்'' என உறுதியளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக