திங்கள், 23 ஆகஸ்ட், 2010

கடும் மழையினால் வன்னிப்பகுதியில் மீள்குடியேறிய மக்கள் பாதிப்பு

கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் உட்பட வன்னிப்பெரு நிலப்பரப்பில் மீள்குடியேறிய மக்கள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளனர். கூரை விரிப்புக்களின் கீழும் தகர கொட்டகைகளிலும் வாழும் மீளக்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் மழை வெள்ளம் காரணமாகப் பெரும் அவல நிலைக்காளாகியுள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் போடப்பட்ட மண் அணைகள் பொதுமக்களது காணிகளில் இருந்தும் வீதிகளிலிருந்தும் அகற்றப்படாததால் மக்கள் வாழ்விடங்களில் இருந்து வெள்ளம் வெளியேற முடியாத நிலை காணப்பட்டது. இதேவேளை வன்னி வீதிகள் சரிவரத் திருத்தம் செய்யப்படாமையால் பல இடங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனையிறவுக்கும் உமையாள்புரத்திற்கும் இடையில் ஏ9 வீதியில் கன்டர் ரக லொறி ஒன்றும் குடை சாய்ந்து பாரிய விபத்துக்குள்ளாகியது.மழை காரணமாக ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் எழுதிய மாணவர்களும் பெரிதும் பாதிப்படைந்தனர். மாங்குளம், முல்லைத்தீவு வீதி மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரம் வீதி, முறிகண்டி பூநகரி, ஜெயபுரம் வீதி ஆகியன கிரவல் மண் வீதியாக காணப்படுவதால் போக்குவரத்து இடையூறு அதிகரித்துள்ளதுடன் இவ்வீதிகள் யாவும் தார் வீதிகளாக மாற்றப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வன்னியில் மழை காரணமாக நலன்புரி முகாம்கள் மற்றும் இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் இடைத்தங்கல் நிலையங்களில் உள்ளவர்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வன்னிப் பகுதியில் வீடமைப்புத் திட்டங்களும் மழை காரணமாகப் பாதிப்படைந்துள்ளன

கருத்துகள் இல்லை: