ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வந்த 37 பள்ளிகள் திடீரென மூடப்பட்டுள்ளன. இதனால், அதில் பயின்று வந்த 5,000 இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.இந்தியர்களின் மீதான நிறவெறி தாக்குதலை தொடர்ந்து, வெளிநாட்டவருக்கு விசா மற்றும் குடியுரிமை வழங்குவதற்கான விதிகளை, ஆஸ்திரேலிய அரசு கடுமையாக்கியுள்ளது.
இதன்படி, ஆஸ்திரேலியாவின் குடியுரிமை பெறுவதற்கு, அந்நாட்டைச் சேர்ந்தவரின் உறவினராக இருத்தல் வேண்டும். தவிர, ஆஸ்திரேலிய அரசு நடத்தும் ஆங்கில அறிவுத்திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டன.இதனால், அங்கு வேலை செய்து வரும் இந்தியாவைச் சேர்ந்த தோட்ட வேலை செய்பவர்கள், சமையல் கலைஞர்கள், பிட்டர்கள், பத்திரிகையாளர்கள், பேஷன் டிசைனர், முடி திருத்துபவர்கள் மற்றும் நர்சுகள் ஆகியோர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.மேலும், இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் ஆஸ்திரேலியாவிலுள்ள பள்ளிகளில் கல்வி கற்க செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், ஆஸ்திரேலிய அரசின் புதிய விதிகளால் அங்கு பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வந்த 37 பள்ளிகள் திடீரென மூடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, லோக்சபாவில், மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நல விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது:ஆஸ்திரேலிய பள்ளி, கல்லூரிகளில் பயிலும் வெளிநாட்டவருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த வேலைவாய்ப்பு முன்னுரிமைகளை, அந்நாட்டு அரசு கணிசமாகக் குறைத்துள்ளது. இதன் காரணமாக வெளிநாட்டு மாணவர்கள், அங்கு வேலைவாய்ப்பு பெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வெளிநாட்டவர் பயின்று வந்த 37 பள்ளிகள் திடீரென மூடப்பட்டுள்ளன.அதில் பயின்று வந்த 5,000 இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வாறு வயலார் ரவி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக