திங்கள், 23 ஆகஸ்ட், 2010

23இலங்கைமாலுமிகளைக் கொண்ட கப்பலை கடற்கொள்ளையர்கள்

இலங்கையைச் சேர்ந்தவர்கள் உட்பட 23 மாலுமிகளைக் கொண்ட எகிப்திய வணிகக் கப்பலை பிடித்துவைத்திருக்கும் சோமாலியக் கடற்கொள்ளையர்கள்  கப்பலை விடுவிப்பதாயின் 4 மில்லியன் டொலரைக் கப்பமாகத் தரவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
எகிப்திய பத்திரிகையான அல் ஆரம் இதனை  நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.   ஆகஸ்ட் 2 இல் செங்கடலில் வைத்து  சீமெந்துப் பொதிகளை ஏற்றிச் சென்ற எம்.வி.சுயஸ் என்ற சரக்குக் கப்பல் கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது. சோமாலியாவின் வடக்குக் கரையிலுள்ள இடத்திற்குக் கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலைக் கொண்டு சென்றுள்ளனர்.
11 எகிப்தியர்கள் உட்பட இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 23 மாலுமிகள் அக்கப்பலில் உள்ளனர். இடைத்தரகர்கள் ஊடாக எகிப்திய கம்பனியான ரெட் சீ நெவிக்கேஷல் கோ கம்பனி பேச்சுவார்த்தைகளைக் கடற்கொள்ளையர்களுடன் மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கம்பனியானது இந்தளவு பெரிய தொகையைக் கப்பமாகக் கொடுப்பதற்கு மறுத்துவருவதாகவும் தொகையை குறைக்குமாறு கடற்கொள்ளையர்களிடம் வேண்டுகோள் விடுத்து வருவதாகவும் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
2008 இல் தனது கப்பலொன்றை விடுவிப்பதற்கு கப்பஞ்செலுத்திய அனுபவத்தை ஏற்கனவே ரெட் சீ நெவிகேஷன் கோ நிறுவனம் பெற்றிருக்கிறது. அச்சமயம் 10 மில்லியன் டொலர் கப்பம் கோரிய இடத்தில் அத்தொகையை 6 இலட்சம் டொலராக இந்த நிறுவனம் குறைத்திருந்தது.
சோமாலியா கடற்பகுதியில் அந்நாட்டுக் கடற்கொள்ளையர்கள் செயற்பட்டு வருகின்றனர். 2 தசாப்த காலங்களாக அந்த நாட்டில் மத்திய அரசாங்கம் செயற்படுவதில்லை.

கருத்துகள் இல்லை: