ஞாயிறு, 13 ஜூன், 2010

மனோ கணேசன் , ரணில் விக்ரமசிங்கவே அடிக்கடி இந்தியாவிற்கு ஓடோடி சென்று அந்நாட்டு தலைவர்களை

இந்திய அரசாங்கம் தமிழ் முஸ்லிம் கட்சிகளுடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்த முனைவது ஏன் என கேள்வி எழுப்புவதன் மூலம் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இந்நாட்டிலே வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் சமாதான எதிர்பார்ப்புகளை சிதறடிக்க முயல்கின்றார். இலங்கை தொடர்பில் இன்று தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட இந்தியா தமிழ் முஸ்லிம் கட்சி தலைவர்களுடன் மாத்திரம் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை. அரசாங்கத் தலைவர்களுடனும், ஐதேக தலைவருடனும் இந்தியத் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரச தலைவர்களைவிட, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவே அடிக்கடி இந்தியாவிற்கு ஓடோடி சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்துவருவது கருணாநாயக்க அறியாதது அல்ல என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரவி கருணாநாயக்க ஐதேகவின் தலைமைப்போட்டியில் ஈடுபட்டுள்ளது பற்றி எமக்கு அக்கறை கிடையாது. ஆனால் அதற்காக அவர் இனவாத கருத்துகளை வெளியிட்டு தம்மை தேசிய தலைவராக அடையாளப்படுத்திக்கொள்ள முயலக்கூடாது. இந்தியா இலங்கையில் வாழும் சிங்களவர்களுக்கோ, தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தமான நாடு அல்ல. அது மகாத்மாக்களால் மாத்திரம் நிரம்பிவழியும் நாடும் அல்ல. இந்நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்கும்கூட இந்தியாவுடன் பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன. இந்தியா தனது நலன்களின் அடிப்படையிலேயே செயற்படுகிறது.

ஒரு பாரிய நாடு என்ற முறையில் இது தவிர்க்க முடியாததாகும். ஆனால் இந்தியாவின் நலன்கள் காரணமாகத்தான் இலங்கை இரண்டாக பிரிவது தவிர்க்கப்பட்டது என்பது அடிப்படை உண்மையை ரவி கருணாநாயக்க போன்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். யுத்தத்தின் காரணமாக இன்று பாரிய நெருக்கடியான நிலைமையிலே வாழும் தமிழ் மக்கள் இந்தியா மட்டும் அல்ல, எந்தவொரு வெளிநாட்டுச் சக்தியும் தமக்கு உதவிடாதா என ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் தேசியக் கட்சிகளுடன் பேச்சுவாத்தை நடத்தும் இந்தியா தமிழ் முஸ்லிம் கட்சிகளுடன் பேசக்கூடாது என்பது ரவி கருணாநாயக்கவின் கொள்கையாக இருக்கின்றது.

தமிழர்கள் யாரும் இல்லாத அநாதைகளாகிவிட வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தமாகும். இதனால்தான் தமிழ் முஸ்லிம் கட்சிகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவது என்ற கருத்து ரவி கருணாநாயக்கவிற்கு பிரச்சினையாக இருக்கின்றது. இதற்காக அவர் முதலில் தனது கட்சி உட்பட இந்நாட்டை தொடர்ந்து ஆண்டுவந்துள்ள கட்சிகளைத்தான் குற்றம் கூறவேண்டும். கடந்தகாலங்களில் இந்நாட்டை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சி, பொது ஜன ஐக்கிய முன்னணி ஆகிய இரண்டு கட்சி அரசாங்கங்களிலும் ரவி கருணாநாயக்க அங்கம் வகித்துள்ளார்.

தேசியக் கட்சிகள் என தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் கட்சிகளின் கொள்கைகளையும், இந்நாட்டை மாறி, மாறி ஆண்ட அரசாங்கங்கள் தமிழ் பேசும் மக்களை நடத்திவருகின்ற முறைகளையும் நாம் அறிவோம். இவைத்தான் தமிழ் தலைவர்களை வெளிநாட்டு உதவிகளை நாடச்செய்தது. இவைத்தான் தமிழ், முஸ்லிம் இன அடிப்படையிலான கட்சிகளை உருவாக்கின. இந்தியா இலங்கையின் தமிழ் குழுக்களுக்கு ஆயுதம் வழங்கியது என்ற குற்றச்சாட்டை புதிதாக கண்டுபிடித்து கூறுகின்ற ரவி கருணாநாயக்க கடந்தகால சரித்திரத்தை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்திலே சட்டங்களை இயற்றியும், பேரினவாத கொள்கைகளை முன்னெடுத்தும் தமிழ் தலைவர்களையும், கட்சிகளையும், குழுக்களையும் இந்தியாவை நோக்கி தள்ளியது யார் என்பதை ரவி கருணாநாயக்க தெரிந்துகொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை: