வியாழன், 17 ஜூன், 2010

மூன்று பிச்சைக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு பிச்சைக்காரரின்



கொழும்பில் கடந்த மாதம் மூன்று பிச்சைக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு பிச்சைக்காரரின் சடலமொன்று கொம்பனி வீதி பகுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை அல்ல என்று பொலிஸார்   தெரிவிக்கின்றனர்.காரணம், ஆரம்பத்தில் இடம்பெற்ற மூன்று பேரது படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாக அவர்கள் கூறினர்.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற படுகொலை சம்பவம் குறித்த விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
இனந்தெரியாத நபரொருவரினால் தலையில் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கொம்பனி வீதி, கங்காராம எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலிருந்து பிச்சைக்காரரொரிவரின் சடலமொன்று நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த மாதம் கொழும்பு – கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி மற்றும் பம்பலப்பிட்டி போன்ற பிரதேசங்களிலிருந்து பிச்சைக்காரர்கள் மூவரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.
இந்த படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: