சனி, 19 ஜூன், 2010

சிரஞ்சீவி மாஸ்டர் கைது,பொட்டு அம்மான் நேரடி தொடர்பில் இவர் இருந்துள்ளார்.


தூத்துக்குடியில் சிகிச்சை பெற்றுவந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிரஞ்சீவி மாஸ்டரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். பிரபாகரன் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப்பிரிவில் தமிழக பொறுப்பாளராக செயல்படுபவர் சிரஞ்சீவி மாஸ்டர். தமிழகத்திலேயே வசித்துவந்து, இங்குள்ள பல்வேறு தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் சிலர் இலங்கைக்கு சென்று பிரபாகரனைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்து வந்தார். இலங்கை வன்னி பகுதியில் நிகழ்ந்த இறுதிக்கட்டப் போரின்போது, இவரும் களத்தில் இருந்து போராடி உள்ளார். பொட்டு அம்மான் படையில் அவரது நேரடி தொடர்பில் இவர் இருந்துள்ளார்.
பின்னர் படுகாயமடைந்த இவர், முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இதன்பிறகு, அங்கிருந்து தப்பிவந்து தூத்துக்குடியில் ரகசிய இடத்தில் தங்கி, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இவரை தமிழக போலீசார் நான்கு தினங்களுக்கு முன்பு கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக தலைவர்களுடனான தொடர்புகள் குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பிரபாகரன் மற்றும் பொட்டுஅம்மான் உயிருடன் இருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்தும் மாஸ்டரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், இறுதிக்கட்டப் போரின்போது, போராளிகள் அனைவருக்கும் இடையேயான தொடர்புகள் முற்றிலும் தடைப்பட்டுப் போனதாகவும், படுகாயமடைந்த நிலையில் முகாம் ஒன்றில் தான் அடைக்கப்பட்டிருந்ததாகவும் சிரஞ்சீவி மாஸ்டர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் குறித்து எந்த தகவலும் தனக்கு தெரியாது என்று அவர் கூறியதாகவும் தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: