புதன், 16 ஜூன், 2010

தண்டவாளம் தகர்ப்பு தொடர்பான விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற ஏழுமலை உள்பட 9

விழுப்புரம் குண்டுவெடிப்பில் விசாரணைக்கு அழைத்து சென்ற 9 பேர் நிலை என்ன?ஐகோர்ட் கேள்வி


விழுப்புரம் அருகே கடந்த 11-ந் தேதி நள்ளிரவு ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இது குறித்து விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் இது கியூ பிராஞ்ச் போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த 9 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் விழுப்புரம் பி.வில்லியனூரை சேர்ந்த ஏழுமலை உள்பட 9 பேர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ‘’தண்டவாளம் தகர்ப்பு தொடர்பான விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற ஏழுமலை உள்பட 9 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. இது பற்றிய உண்மையை தெரிவிக்கப்பட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு ஐகோர்ட் நீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஏழுமலை தரப்பில் வக்கீல்கள் சந்திரசேகரன், ரூபன், மகாலட்சுமி உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அரசு தரப்பில் வக்கீல்கள் குமரேசன், ஜின்னா ஆகியோர் வாதிட்டனர்.

ஏழுமலை தரப்பு வக்கீல்கள், போலீசார் அப்பாவிகளை பிடித்துச் சென்று விசாரணை செய்கிறார்கள். அவர்கள் கதி என்ன வென்று தெரியவில்லை என்று வாதாடினார்கள்.

அரசு தரப்பு வக்கீல்கள், விசாரணை நடத்திய அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். தவறு செய்யாதவர்களை போலீசார் கைது செய்ய மாட்டார்கள் என்று தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நடந்த சம்பவம் தீவிரவாத சதி செயல். இதில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும், என்றாலும் அப்பாவிகளை சட்ட வழிகளை பின்பற்றாமல் கைது செய்யக் கூடாது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற 9 பேர் நிலை என்ன என்பது குறித்து அவர்களை அழைத்துச் சென்ற போலீசார் விரிவான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: