மதுரையைச் சேர்ந்தவர் தீப்பொறி ஆறுமுகம். பல காலமாக திமுகவின் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தவர் தீப்பொறி ஆறுமுகம். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவர் திடீரென அதிமுகவில் இணைந்து அனைவரையும் அதிர வைத்தார்.
காரணம் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் இவரைப் போல கடுமையாக விமர்சித்தவர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு சூடு பறக்கப் பேசியவர் தீப்பொறி ஆறுமுகம். இவரது கூட்டங்களுக்கு பெண்களை விட ஆண்கள்தான் பொதுவாக வருவார்கள். அந்த அளவுக்கு இவரது பேச்சில் நெடி அதிகம்.
பச்சை பச்சையாக பேசும் தீப்பொறி ஆறுமுகம், தான் கூட்டங்களில் பேசத் தொடங்குவதற்கு முன்பு பெண்களை போகச் சொல்லி விடுவார். அந்த அளவுக்கு அவரது பேச்சில் ஆபாச அனல் பறக்கும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதியிடம் மருத்துவ உதவி கேட்டு அது கிடைக்காமல்போனதால் விரக்தியில் இருந்த தீப்பொறியாரை, ரூ. 5 லட்சம் நிதியுதவி கொடுத்து அதிமுகவுக்கு இழுத்துக் கொண்டவர் ஜெயலலிதா.
அதிமுகவில் தலைமைக்கழக பேச்சாளராக இருந்து வந்தவரான தீப்பொறி ஆறுமுகம், இன்று மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
திமுகவில் மீண்டும் இணைந்த பின்னர் தீப்பொறி ஆறுமுகம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,அதிமுக.வில் சிறை கைதியாக இருந்தேன். தற்போது விடுதலை ஆனதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆரம்ப காலம் முதல் அதிமுக.,வில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர்கள் தற்போது திமுக.வில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே இங்கிருந்து போன நானும் மீண்டும் இணைவதில் பெருமை அடைகிறேன்.
முதல்வர் கருணாநிதியின் சாதனைகளில் ஒன்றாக இடைத்தேர்தல் வெற்றியை குறிப்பிடலாம். இப்போது மட்டுமல்ல அதிமுக என்றுமே ஆட்சிக்கு வர முடியாது. 25 மாவட்டங்களில் என்னை பேச விடாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். அதனால் திமுக.வில் இணைய முடிவு செய்தேன்.
இனி இறுதி வரை திமுக.,வில் தான் இருப்பேன். கருணாநிதி பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் தேர்தல் பிரசாரங்களின் போது மக்களிடையே பேசுவேன் என்றார் தீப்பொறியார்.
2005ம் ஆண்டு, ஜூலை மாதம் 26ம் தேதி மதுரையில் தீப்பொறி ஆறுமுகம் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசியவற்றிலிருந்து சில...
கருணாநிதிக்கு முதலில் அவரது கூட்டணியிலேயே மரியாதை கிடையாது. அவர் சொல்வதை கூட்டணிக் கட்சித்தலைவர்களே மதிப்பதில்லை, கேட்பதில்லை. பிறகு எப்படி மக்கள் கேட்பார்கள்? வெறும் கூட்டணி பலத்தில் தான் திமுக வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
கூட்டணி இருந்தால் தான் கருணாநிதி எடுபடுவார். ஆனால் அம்மா அப்படி அல்ல, மக்களை நம்பி இருக்கிறார் அவர்.மக்களின் கூட்டணியுடன் தான் ஆட்சியில் இருக்கிறார். இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும்,அம்மாதான் முதல்வர் ஆவார்
[ Read All Comments ] [ Post Comments ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக