வியாழன், 17 ஜூன், 2010

தண்டவாளம் தகர்த்த பிறகு ரயில் கடந்ததா?ரயில்வே புதுவிளக்கம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி கிராமத்தில் சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் கடப்பதற்கு முன்னதாக தண்டவாளம் தகர்த்ததாகக் கூறும் கருத்துக்களுக்கு ரயில்வேத் துறையினர் பலமான மறுப்பு தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே கடந்த 12ம் தேதி ரயில் பாதை வெடி வைத்து தகர்க்கப்பட்டது. ரயில் தண்டவாளம் 3.5 அடி நீளத்திற்கு இணைப்பு துண்டித்து, நான்கு துண்டுகளாக சிதறி கிடந்தன. 300 கிலோ எடையுள்ள சிமென்ட் ஸ்லிப்பர் கட்டைகள் துண்டாகி சிதறின. அங்கு 2.5 அடி ஆழம் மற்றும் 3 அடி விட்டத்திற்கு பள்ளம் ஏற்பட்டது."தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவத்தின் போது, ரயில் பாதையின் ஒரு பகுதி வெடித்து சிதறிய பிறகே அவ்வழியாக சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இந்த அதிர்வுகளை வைத்தே டிரைவர் எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதனால் பின்னால் வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியதாக போலீஸ் தரப்பில் சந்தேகம் தெரிவித்துள்ளனர்!'தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்திற்கு முன்பாக சேலம் ரயில் சென்றதாக கூறும் கருத்திற்கு ரயில்வே தரப்பில் மறுப்பு கூறுகின்றனர்.

ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:தண்டவாளத்தில் சிறிய விரிசல் இருந்தால் ரயில் மெதுவாக செல்ல முடியும். 20 செ.மீ., வரை விரிசல் இருந்தால் வேகமாக செல்லும் போது ரயிலின் சக்கரம் அந்த இடத்தை கடந்து செல்ல வாய்ப்பு உள்ளது. விரிசல் அதிகம் இருந்தால் ரயிலை அவ்வழியே எப்படியும் இயக்க முடியாது.தற்போது நடந்த சம்பவத்தை பொறுத்தவரை 1.2 மீட்டர் நீளத்திற்கு தண்டவாளம் காணாமல் போனது. இரண்டு அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் எப்படி ரயிலை இயக்க முடியும். கடைசி, "கோச்' கடக்கும் போது தண்டவாளத்தை தகர்த்தால் கூட அந்த "கோச்' கண்டிப்பாக கவிழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் சம்பவ இடத்தை கடந்த பிறகு தான் தண்டவாளம் தகர்க்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்த ரயில் கார்டு ராஜசேகரன் தான், சம்பவம் குறித்து அருகிலிருந்த பேரணி ரயில் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இப்படி இருக்கும் போது ரயில் கடப்பதற்கு முன்னதாக எப்படி தண்டவாளத்தை தகர்க்க முடியும், என்றார்.

ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை: ரயில்வே தண்டவாள குண்டு வெடிப்பில் தமிழ்த் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளது, போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, கியூ பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் களம் இறங்கியுள்ளனர். தீவிரவாதிகள் மேலும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்க, போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தீவிரவாதிகள் தொடர்பு கொண்டுள்ள மாவட்டங்கள் குறித்தும், அவர்கள் தொடர்பு வைத்துள்ள நபர்கள் குறித்தும் உளவுத்துறை போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் மற்றும் அதன் பின்னணியில் செயல்படும் இயக்கங்கள் குறித்து, உளவுத்துறை போலீசார் தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக, சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்றுள்ளது. ரயில் கடந்து செல்வதற்கு முன்னதாக கேங்மேன்கள் அந்த பகுதியில் தண்டவாள சரிபார்ப்பு பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து "கியூ' பிரிவு எஸ்.பி., அசோக்குமார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார். சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர்கள், விழுப்புரம் பகுதியை கடந்து சென்ற போது, சந்தேகப்படும்படியான நபர்கள் தண்டவாளம் பகுதியில் நின்று இருந்தனரா என்பது குறித்து எஸ்.பி., விசாரணை நடத்தினார்.தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, மாநிலம் முழுவதும் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் தண்டவாள பகுதியில், தீவிர பாதுகாப்பு பணியில் ரயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து உள்ளூர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரிக்கப்பட்டவர்கள் விடுவிப்பு : இச் சம்பவம் தொடர்பாக தமிழ் தேசிய இயக்க விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், தமிழ் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜோதிநரசிம்மன், பாபு, ஏழுமலை, இளங்கோ, கணேசன், கொத்தமங்கலம் ஜெயராமன், சிவராமன் உட்பட 33 பேரை சந்தேகத்தின் பேரில் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு போலீசார் அழைத்துச் சென்று தொடர் விசாரணை செய்தனர். இலங்கை தமிழர் ஆதரவு அமைப்பினர் எட்டு பேரைத் தவிர மற்ற அனைவரையும் இரண்டு தினங்களுக்கு முன்னதாக போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் இவ்வழக்கு முறையாக கியூ பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதில் பாலமுருகன், ஜோதிநரசிம்மன் உள்ளிட்ட எட்டு பேரையும் வளவனூர், கஞ்சனூர், காணை, கெடார், திருவெண்ணெய் நல்லூர் போலீஸ் நிலையங்களில் தனித் தனியே வைத்து தீவிர விசாரணை செய்தனர். தொடர்ந்து மூன்று தினங்களாக எந்த அறிவிப்புமின்றி அழைத்து சென்று எங்கு வைத்து விசாரிக்கிறோம் என்பதை அவர்களின் உறவினர்களுக்குக் கூட போலீசார் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட எட்டு பேரின் மனைவியர் மற்றும் பெற்றோர் சார்பில் நேற்று முன் தினம் காலை சென்னை ஐகோர்ட்டில் "ஹேபியஸ் கார்ப்பஸ்' (ஆட்கொணர்வு) மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நேற்று காலை விசாரணைக்கு வர இருந்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட கியூ பிரிவு போலீசார் விசாரணையில் இருந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு அமைப்பினர் எட்டு பேரும் நேற்று முன்தினம் இரவு விடுவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: