செவ்வாய், 15 ஜூன், 2010

சதி... சதி... சதி... தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தலையங்கம்:சதி... சதி... சதி...
- தினமணி தலையங்கம்
அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இருக்க வழியில்லை.

 விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் 1 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இது நிச்சயமாகத் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல.

 சனிக்கிழமையன்று இந்த ரயில் தடத்தில் சென்ற மலைக்கோட்டை விரைவு ரயில் அதிர்ஷ்டவசத்தால் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பியது. விபத்தைத் தடுத்த ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் தினமணி பாராட்டுகிறது.

 தண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்த இடத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர்கள் என்று குறிப்பிட்டு இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய விஜயத்தைக் கண்டிப்பதாக அந்தத் துண்டுப் பிரசுரங்கள் தெரிவிப்பதாகக் காவல்துறை கூறுகிறது.

 இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்றால் அவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படக் கூடாது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பக் கூடாது. மேலும் பல அப்பாவி உயிர்களைப் பலி கொண்டு தங்களது பழியைத் தீர்த்துக்கொள்ள முயலும் யாரையும் ் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

கருத்துகள் இல்லை: