இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியாகேட்டுக்கொண்டதனை விடவும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலதிகமாகவே வழங்கவுள்ளார். இந்தியாவில் நாம் சந்தித்த தலைவர்கள் அனைவரும் 13 ஆவது திருத்தச் சட்டலத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்றே ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், எமது ஜனாதிபதியோ அதற்கு மேலாக 13 பிளஸ் கொடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார் என பாரம்பரிய கைத்தொழில், சிறுகைத்தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அண்மையில் இந்தியாவுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த போது தமக்கு எதிராக தமிழ்நாட்டில் சிலரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் இந்திய விஜயம் தொடர்பில் நேற்றுக் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான இந்திய விஜயம் பாரிய வெற்றியை அளித்துள்ளது. இனப்பிரச்சினை தொடர்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறே நாம் சந்தித்த இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர். ஆனால், எமது ஜனாதிபதி அதற்கு மேலாக 13 பிளஸ் வரை வழங்கப்படுமென அங்கு உறுதியளித்தார்.
எங்களைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாகக் கூறி வந்த ஒரு விடயம் இன்று கைகூடியுள்ளது. நாம் கண்ட கனவு, எமது கொள்கை இன்று யதார்த்தமாகியுள்ளது. புதியதொரு அரசியல் யாப்பு என்பது இன்றைய நிலையில் சாத்தியமானதொன்றல்ல. அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. அத்துடன் சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும். மக்களின் அபிலாஷைகளைப் பிரதி பலிக்கக் கூடிய ஓர் அரசியல் யாப்பினை உருவாக்குவது இன்றைய நிலையில் கடினமான காரியம்.
ஆகவே, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஆரம்பத் தீர்வாக இருக்கும் ஒன்றை அமுல்படுத்துவதில் பிரச்சினை இல்லை. 13 ஆவது திருத்தச் சட்டலம் இந்தியாவின் அனுசரணை பெற்றது. எமது அரசியல் யாப்பில் உள்ளது. தென்னிலங்கையில் நடைறையில் இருப்பது. இன்றைய ஜனாதிபதியும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் சில தமிழ்த் தலைவர்கள் இந்தியா தமும்டன் இருப்பதாகவே கூறி வருகின்றனர். ஆனால், அது உண்மையல்லவென்பது இந்தியாவின் நிலைப்பாட்டிலிருந்து விளங்கிக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டமூலம் செத்துவிட்ட ஒன்று எனக் கூறுகிறார்கள். அது அப்படிச் செத்துவிடவில்லை. அப்படிச்செத்திருந்தாலும் அதற்கு உயிர் கொடுக்க முடியும்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு இந்தியா பல உதவிகளைச் செய்யவுள்ளது. விசேடமாக தமிழ்ப் பிரதேச அபிவிருத்திக்கும் கூடிய உதவிகளை வழங்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்காக சுமார் 1000 கோடி ரூபாவை இந்தியா வழங்கவுள்ளது. இது ஒருபாரிய தொகையாகும். இந்தியா இலங்கையை ஒரு நட்புறவுமிக்க நாடாகவே கருதுகிறது. இருநாடுகளுக்குமிடையிலான உறவுகள் இன்று வலுப்பெற்றுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளுடனான சந்திப்பும் திருப்தியாகவே இருந்தன. அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அவர்கள் அதிக அக்கறை கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள். இந்த விடயத்தில் அவர்கள் மட்டுமின்றி ஏனையவர்களும் அதிக அக்கறை கொண்டுள்ளதனைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது.
என்மீதான குற்றச்சாட்டு
நான் ஒரு குற்றவாளி என்றும் என்னைக் கைது செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாட்டில் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட் டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினையும் தாங்கியிருந்ததனைக் காணக்கூடியதாகவிருந்தது. தடை செய்யப்பட்ட இயக்கமொன்றின் தேடப்படும் தலைவரின் படத்தைத் தாங்கியபடி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு என்னைக் கைது செய்யுமாறு கோரிக்கை விடுப்பது ஒரு கேலிக்கூத்தான விடயமே. பிரபாகரன் என்பவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் ஒரு நபர். இதனை என்மீதான காழ்ப் புணர்ச்சியாகவே கருதவேண்டியுள்ளது.
தமிழ்நாட்டு சூளைமேட்டில் இடம்பெற்ற சம்பவத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்தப் பகுதியில் இடம்பெற்ற பிரச்சினையொன்று முற்றிவிட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து அதனைத் தீர்த்து வைப்பதற்காகவே அந்த இடத்துக்குச் சென்றேனே தவிர பிரச்சினையுடன் எனக்குத் தொடர்பில்லை.
நான் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் முக்கிய பொறுப்புகளிலிருந்தபோது இவ்வாறான சம்பவங்களுக்கோ கொலைகளுக்கோ இடமளிக்கவில்லை. அந்தக் கட்சியிலிருந்து நான் வெளியேறியதற்கு சிலரின் விருப்பத்துக்கு ஏற்ப என்னால் செயற்பட முடியாமையே காரணமாகும். வரதராஜப் பெருமாளும் சுரேஷ் பிரேமச்சந்திரனும சில விடயங்களில் திட்டமிட்டுச் செயற்பட்டனர்.
1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நான் பல தடவைகள் இந்தியா சென்றுள்ளேன். தமிழ்நாட்டுக்குக் கூடச் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் என்மீது சுமத்தப்படாத குற்றச்சாட்டுகள் இம்முறை ஏன் சுமத்தப்படவேண்டும்?
இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் என்னைப்போன்ற பலர் மன்னிக்கப் பட்டுவிட்டனர். இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்த அதிகாரிகள் கூட இதனை என்னிடம் உறுதிபடத் தெரிவித்திருந்தனர். ஆனால், நான் சம்பந்தப்படாத சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் வழக்கு ஒன்று இப்போது தொடரப்பட்டுள்ளது. இதனை நான் வரவேற்கிறேன். ஏனெனில் இந்த வழக்கின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படலாம். சில வேளைகளில் என்னைக் கைது செய்யுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டால் விசாரணைகளை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன் எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக