இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை. இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.
1962 ஆம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவத்து மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போதுகூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது. குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம்.
அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அண்மையில் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்த போது, இந்த பிரச்சனையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.
வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது. 27 ஆண்டு கால இனப் போர் பல உயிர்களை பலி வாங்கியுள்ளது. பெரும்பாலான ஆண்கள் இந்த இனப் போரில் உயிரிழந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக்கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும்.
இந்தப் பிரச்சனையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும்; கடினமாக நடந்து கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர், தமிழ்நாட்டின் பாதுகாப்பு மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் இனத்தின் பாதுகாப்பு ஆகிய பிரச்சனைகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்க முடியாத காரணத்தினால், இந்திய அரசாங்கத்திற்கு இந்த வேண்டுகோளினை நான் விடுக்கின்றேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
செல்வி ஜெயலலிதா அவர்கள் புலிகள் விடயத்தில் மிகவும் துணிகரமாக நடவடிக்கைகள் எடுத்து சட்டம் ஒழுங்கை தமிழகத்தில் நிலை நாட்டியவர்.வைகோ போன்றவர்களுடன் சந்தர்ப்பவாத கூட்டினை மேற்கொண்ட போதும் புலிகள் பயங்கரவாதிகளே என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர்.
தற்போது அவர் சினிமா பாணியில் சீன ஆபத்து பற்றிய தனது அதீத கற்பனைகளை அவிழ்த்து விடுவது நகைப்புக்கு உரியது.நலிந்தது கொண்டிருக்கும் தமிழ் திரை உலகத்தினருக்கு இது போன்ற அம்புலிமாமா கதைகள் பெரும் உதவியாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக