திங்கள், 14 ஜூன், 2010

திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது திராவகம் வீசிய நடிகை

ஹைதராபாத்: திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது திராவகம் வீசிய நடிகை கைது செய்யப்பட்டார்.

தெலுங்கு டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருபவர் நடிகை டிம்பிள். இவர் ஆராதனா உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கும் தெலுங்கு டெலிவிஷன் தொடர்களில் நடித்து வரும் ஸ்ரீதர் வர்மா என்ற நடிகருக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் ஸ்ரீதர் வர்மா ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டிக்கு படப்பிடிப்புக்காக சென்ற போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் திராவகத்தை வீசி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீதர் வர்மா சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பாக ஸ்ரீதர் வர்மா போலீசில் அளித்த புகாரில், இந்த தாக்குதலை நடிகை டிம்பிளின் உதவியாளர் நாகராஜு என்பவர் நடத்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, ஸ்ரீதர் வர்மா தாக்கப்பட்ட மறு நாள், தன்னை சிலர் பிளேடால் தாக்கியதாகக் கூறி நடிகை டிம்பிள் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, நடிகர் ஸ்ரீதர் வர்மா மீது திராவகம் வீசியதாக நாகராஜுவை கைது செய்தனர்.

அவரிடம் போலீசாரிடம் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதலின் பின்னணியில் நடிகை டிம்பிள், அவரது உதவியாளர் மணி ஆகியோர் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தனக்கும் ஸ்ரீதர் வர்மாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்ததாகவும், ஆனால் அவர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதால் ஆத்திரத்தில் அவர் மீது திராவகம் வீச ஏற்பாடு செய்ததாகவும் நடிகை டிம்பிள் தனது வாக்குமூலத்தில் தெரிவித்து இருப்பதாக போலீசார் கூறினார்கள்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் டிம்பிள் மீது சந்தேகம் வராமல் இருக்கவும், போலீசாரை திசை திருப்பவும் அவர் தன் மீது லேசாக பிளேடு மூலம் தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்த திடுக்கிடும் தகவலும் விசாரணையில் தெரிய வந்தது.

நடிகை டிம்பிள், அவரது உதவியாளர்கள் மணி, நாகராஜு ஆகியோர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தான் தாக்கப்பட்டதாக கூறி போலீசை திசை திருப்ப முயன்றதாக டிம்பிள் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

கருத்துகள் இல்லை: