மின்னம்பலம்: தேவிபாரதி
தகுதிநீக்கம்
செய்யப்பட்டுள்ள தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் விதியை
நீதிமன்றம் வேறுவிதமாகத் தீர்மானித்துவிட்டால் எடப்பாடி தலைமையிலான
‘அம்மாவின் அரசு’ உடனடியாகக் கவிழ்வது தவிர்க்க முடியாததாகிவிடும். இரட்டை
இலைச் சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் காற்று தினகரனுக்கு ஆதரவாக
வீசாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நீதிமன்றத்தின் அழுத்தம்
காரணமாக சீக்கிரத்திலேயே உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள
வேண்டியிருக்கிறது. அடுத்த கோடையில் மக்களவைத் தேர்தல். ஆர்.கே நகர்
இடைத்தேர்தலில் தினகரனிடம் தோற்றுப்போன ஒரு கட்சி எதையாவது செய்தாக
வேண்டும். ஆனால் உருப்படியாக எதையும் செய்வதற்கான செயல் திட்டங்களோ,
தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல் திணறிக்கொண்டிருக்கிறது அம்மாவின் அரசு.
மாறிவரும் சமூக, அரசியல், பொருளாதாரச் சூழலை எதிர்கொள்வதற்கான தலைமை
இல்லாததுதான் அதிமுகவைப் பொறுத்தவரை உண்மையான வெற்றிடமாக இருக்க முடியும்.
காலாவதியான ‘இலவச’ அரசியல்
கருணாநிதி, ஜெயலலிதாவால் கட்டமைக்கப்பட்டிருந்த அரசியல் அடையாளங்கள் தற்போது தேய்ந்து போனவையாக மாறியிருக்கின்றன. திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் வெற்றிச் சூத்திரங்களாக விளங்கிய இலவசங்கள் சார்ந்த அரசியல் தற்போது காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. அல்லது வெற்றியைத் தீர்மானிப்பதில் இலவசங்களுக்குரிய பங்கு குறைந்துகொண்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் சந்தித்துவரும் மக்கள் போராட்டங்களையும் அரசியல் விவாதங்களையும் கவனித்தால் தமிழக மக்கள் அரசு தங்களுடைய மரபான அடையாளங்களையும் பொருளாதார, சூழலியல் நலத்தையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டங்கள் இதற்கு உதாரணம். மெரினாவில் தொடங்கித் தமிழகத்தின் மூலை, முடுக்குகள்வரை ஆவேசமாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டங்களில் தமிழ் அடையாளம் சார்ந்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் கூடங்குளம் அணுஉலைக்கெதிராக நடந்த போராட்டங்களின்போது உருவான சூழலியல் சார்ந்த விவாதங்கள் தற்போது விரிவடைந்திருக்கின்றன. கோகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்கள் மத்திய மாநில அரசுகளின் பொருளாதாரத் திட்டங்களுக்கு ஆதரவானவை அல்ல. பல ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் இருந்துவரும் விவசாயப் பிரச்சினைகளுக்காகவும் நதிநீர்ப் பங்கீடு சார்ந்து தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கிடையே உருவாகியுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காணக் கோரியும் விவசாய சங்கங்கள் நடத்திவரும் போராட்டங்களை எளிதில் கடந்து செல்ல முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறிக்கொண்டிருக்கின்றன.
தற்போதைய நெருக்கடிகள் அரசியல் கட்சிகள் பின்பற்றிவரும் அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகளோடு நேரடியான தொடர்புகொண்டவை என்பதால் அவை பற்றிய விவாதங்கள் கூர்மையடைந்திருக்கின்றன. இந்த நெருக்கடிகள் தமிழர்களின் இறையாண்மை சார்ந்த பிரச்சினையாக மட்டுமல்லாமல், தமிழ்ச் சமூகத்தின் வாழ்வாதாரங்களோடு நேரடித் தொடர்புகொண்ட பிரச்சினையாக மாறியிருக்கின்றன. அரசியல் இயக்கம் அல்லது கட்சியின் கொள்கை அல்லது கோட்பாடு சமூக நீதி சார்ந்ததாக, மனித உரிமைகளை மதிப்பதாக, அவற்றைப் பாதுகாப்பதாக, ஒரு பன்மைத்துவச் சமூகத்தின் தனித்த அடையாளங்களை அங்கீகரிப்பதாக, சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள், மாற்றுப்பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் முதலான அடித்தட்டுப் பிரிவினரின் வாழும் உரிமைகளுக்காகப் போராடுவதாக இருக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்புகள் கூடியிருக்கின்றன.
திமுகவின் போர் முழக்கம்
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கான தகுதியுள்ள கோட்பாட்டுப் பின்னணிகொண்ட ஒரே இயக்கமாகத் தன்னை முன்னுறுத்திக்கொள்வதற்கான முனைப்புகளை மேற்கொள்ள முற்பட்டிருக்கிறது திமுக. மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை லட்சியமாகக்கொண்டு மண்டல மாநாடுகளை நடத்திவரும் திமுக கடந்த காலங்களில் பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளோடு கொண்டிருந்த அரசியல் கூட்டணிகளின்போது சமரச அரசியலை முன்னெடுத்தது பற்றிய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. திமுக தனது அடிப்படையான அரசியல் கொள்கைகளைக் கைவிடத் துணிந்த ஒவ்வொரு முறையும் மோசமான தோல்விகளைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சினையில் அப்போது காங்கிரஸின் அரசியல் கூட்டாளியாக இருந்த திமுக எடுத்த நிலைபாடுகள் காரணமாகத் தொடர் தோல்விகளைச் சந்திக்க நேர்ந்ததை திமுக புரிந்துகொண்டிருப்பதுபோல் தெரியவில்லை.
கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தற்போதைய செயல்பாடுகள் அதன் பூர்வீக அரசியல் அடையாளங்களை மீட்டெடுப்பதற்கான முனைப்புகளைக் கொண்டவைபோல் தோன்றினாலும் அவை மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு உதவவில்லை என்பதற்குக் கடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அக்கட்சி பெற்ற அவமானகரமான தோல்வி உதாரணம். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள விழையும்போது திமுக கோட்பாடுகளுக்கு முக்கியத்துவமளிக்கும் அரசியலை முன்னெடுக்கிறது. திராவிட இயக்கத்தின் அடிப்படையான கோட்பாடுகளாகக் கருதப்படும் மாநில சுயாட்சி, சமூக நீதி, சிறுபான்மையினர் நலன், ஒடுக்கப்பட்டோர் நலன் என திமுகவின் தற்போதைய தலைமை முன்னெடுத்திருக்கும் கோட்பாட்டு அரசியல், அக்கட்சி தனது மரபான அடையாளங்களை மீட்டெடுத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே கருதப்பட வேண்டும். ஆனால், கோட்பாடு சார்ந்த புரிதல்களைக்கொண்ட ஆற்றல்மிக்க தலைமையோ இல்லாமல் அந்தக் கட்சி திணறிக்கொண்டிருக்கிறது.
பாஜக தந்திருக்கும் வாய்ப்பு
திராவிட அடையாளம், தமிழ் அடையாளம், மதச்சார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை ஆகிய எல்லாவற்றையும் பாதுகாப்பதற்கு இப்போதைக்கு பாஜக எதிர்ப்பு என்னும் ஒற்றை அரசியல் திட்டம்கூடப் போதுமானது எனக் கருதுவதுபோல் தோன்றுகிறது. பாஜகவின் மூர்க்கமான இந்து மீட்புவாத அரசியல் திமுகவை, அதன் அரசியல் அடையாளங்களை மீட்டெடுப்பதற்கு வழிவகுத்துத் தந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஹெச்.ராஜா போன்ற பாஜகவின் முன்னணித் தலைவர்களால் திமுகவின் வேலை எளிதானதாக மாறியிருக்கிறது.
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் பெரியார் சிலை உடைப்பு பற்றிய பேச்சால் தமிழக அரசியல் கட்சிகளின் ஆத்திரத்தைத் தூண்டிவிட்ட பாஜக, அது சார்ந்து உருவான ஆத்திரம் அடங்குவதற்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையின் மூலம் தமிழக அரசியல் சூழலைப் பதற்றத்துக்குள்ளாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறது. ராம ராஜ்ஜியம் பற்றிய பாஜகவின் கற்பிதங்கள் அதன் இந்துத்துவ அரசியல் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது. அயோத்தியை மீண்டும் இந்திய அரசியலின் மையப் புள்ளியாக்க மாற்றுவதற்கு பாஜகவும் சங்க பரிவாரங்களும் மேற்கொண்டுவரும் முயற்சிகள் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான முனைப்புகளை உருவாக்கியுள்ளன. ஆனால் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி பற்றிய கற்பனைகள் பாஜகவுக்கு அரசியல் ரீதியில் சாதகமானவை.
பாஜகவின் கனவு
கடந்த மக்களவைத் தேர்தலில் தனது கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து 300 இடங்களைப் பெற்ற பாஜக நான்காண்டுகளுக்குள் நாட்டின் 19 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அரசியல் ரீதியில் உச்சபட்ச செல்வாக்குப் பெற்றிருந்த 1980களில் காங்கிரஸ் 17 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. அதையும் தாண்டியிருக்கிறது பாஜக. இந்தியாவின் பன்முகத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியும் என பாஜக நம்புவதற்கு இது முக்கியமான காரணம்.
அரசியல் ரீதியில் தனக்குப் போட்டியாக வலுவான தேசிய கட்சி எதுவும் இல்லாததை பாஜக பயன்படுத்திக்கொள்ள முற்பட்டிருக்கிறது. மோடியைத் தன் நாயக பிம்பமாக இன்னும் சில வருடங்களுக்காவது நீடித்திருக்கச் செய்ய முடியும் என அது நம்புவதுபோல் தோன்றுகிறது. 2019 கோடையில் மக்களவைத் தேர்தலைப் போட்டியே இல்லாமல் எதிர்கொள்ள முடியும் எனக் கனவு காண முயல்கிறது.
பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக உருவாகியிருக்கும் எதிர்ப்புக் குரல்கள் அக்கட்சியின் ஒற்றை அடையாளம் சார்ந்த அரசியலுக்கு எதிரான அரசியலை வலுப்படுத்தியிருக்கின்றன. தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக உருவாகியிருக்கும் மனநிலை அக்கட்சிக்குத் தேசிய அளவில் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். பன்முக அடையாளம் என்பது இந்தியாவின் வரலாற்றோடு தொடர்புடைய ஒரு நடைமுறை என்பதை பாஜக ஏற்க மறுக்கிறது. ஒற்றை அரசியல், ஒற்றைப் பண்பாடு சார்ந்த தன் கனவுகளை ஈடேற்ற இது சரியான தருணம் என மோடியும் அமித் ஷாவும் நினைப்பதுபோல் தெரிகிறது. அந்த நம்பிக்கை நமது ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடிய ஒன்று என்பதை அக்கட்சி உணராததின் விளைவே சமீபத்திய இடைத் தேர்தல்களில் அக்கட்சி அடைந்த தோல்விகள்.
இந்தியாவின் பன்முகத் தன்மையை, சமூக நீதியை, மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும் குறைந்தபட்ச ஆசைகளைக் கொண்டுள்ள காங்கிரஸ், சமஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் அடையாளங்களை மீட்டெடுத்துக்கொள்வதற்கும் மாற்று அரசியல் களம் ஒன்றை உருவாக்குவதற்கும் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அடுத்த ஆண்டு கோடையில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்திய அரசியலில் ஏதாவது மாற்றத்தை உருவாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. அது நல்ல செய்தியாக இல்லாமல் போனாலும்கூட இந்திய அரசியலின் எதிர்காலத்தின் மீது பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்பதுதான் இன்றைய செய்தி.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிது காலம் செயல்பட்டவர். 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என்.கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் Horper Perinial வெளியீடாக Farewell Mahatma என்னும் தலைப்பில் வெளிவந்தது. காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். மின்னஞ்சல் முகவரி: devibharathi.n@gmail.com)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக