புதன், 28 மார்ச், 2018

திருப்பதி உற்சவர் சிலை கீழே விழுந்து சேதம்: மூடி மறைத்தது தேவஸ்தானம்!

தினமலர்:தினமலர் :திருப்பதி: திருமலையில், உற்சவமூர்த்தி சிலை, கீழே விழுந்ததில் சேதம் அடைந்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தை தேவஸ்தானம் மூடி மறைத்து வருகிறது. திருப்பதி, திருமலையில், தினசரி காலை, 10:00 மணிக்கு, கல்யாணோற்சவ சேவை நடப்பது வழக்கம். அதற்காக, ஏழுமலையான் கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி சிலைகள், அருகில் உள்ள கல்யாணோற்சவ மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த சிலைகளை, அர்ச்சகர்கள், தங்கள் கைகளால் சுமந்து செல்வர்; பின், இரவில், இந்த சிலைகள் மீண்டும் ஏழுமலையான் கருவறைக்குள் வைக்கப்படும்.
 நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலைப்பஸ்வாமி சிலை, கல்யாணோற்சவத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. கல்யாணோற்சவம் முடிந்த பின் சிலைகள் மீண்டும் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, பூதேவி சிலை, அர்ச்சகர் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து, சிலையின் கிரீடம் சேதமடைந்தது.


இதைத் தொடர்ந்து, அர்ச்சகர்கள், சிலையை தனியே எடுத்துச் சென்று, சிலைக்கு சாந்தி ஹோமம், புன்னியாவசனம் உள்ளிட்டவற்றை யாருக்கும் தெரியாமல் நடத்தி உள்ளனர். இந்த தகவல்கள், நேற்று காலை தாமதமாக வெளிவந்துள்ளன. ஆனால், தேவஸ்தான அதிகாரிகள் யாரும், இதற்கு விளக்கமளிக்க முன்வரவில்லை. இது குறித்து, வெளியில் தெரிவிக்காமல் தேவஸ்தானம் மூடி மறைத்து வருகிறது.

'திருமலை தேவஸ்தானம், வயதான அர்ச்சகர்களை பணியில் நியமிக்கும் போது, இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. 'அதனால், அர்ச்சகர்களின் வயதுக்கேற்ப, அவர்களுக்கு பணிகளை வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால், இது போன்ற சங்கடங்கள் தவிர்க்கப்படும்' என, பக்தர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: