புதன், 28 மார்ச், 2018

தோழர் கோவன் மீது பாஜகவினர் போலீசில் புகார் .. எதுக்குடா ரத யாத்திரை – பாடலுக்காக போலீசிடம் ..


கருத்தை கருத்தால் எதிர் கொள்ளத் தெரியாத பாஜக கும்பல் தோழர் கோவன் மீது புகார் கொடுத்துள்ளது. பாசிஸ்டுகள் என்றுமே கோழைகள் என்பதற்கு மீண்டும் ஒரு சாட்சி!
வினவு :ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் ரத யாத்திரையின் உண்மை முகம் ‘ரத்த யாத்திரை’ என்று தமிழகம் எதிர்த்து நின்றது. இந்த போராட்டத்தை ஒட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் பாடல் வீடியோ தயாரிக்கப்பட்டு வினவு தளத்தில் வெளியிடப்பட்டது. வினவு யூ டியூப்பிலும், ஃபேஸ்புக் பக்கத்திலும் இன்றளவும் பாராட்டி மறுமொழிகள் வந்த வண்ணம் உள்ளன. வைரலான வீடியோவை இலட்சக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளனர். இது போதாதா? உடனே பா.ஜ.க கும்பலுக்கு வெறியேறி விட்டது.
“இராமாயணத்தையும் இராமனையும் இராம ராஜ்யத்தையும் இழிவு படுத்துகிறது. இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துகிறது. பிரதமர் மோடியை தரக்குறைவாக விமரிசிக்கிறது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக இருக்கிறது. நாட்டில் மதக்கலவரத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது. எனவே உரிய குற்றப்பிரிவுகளின் கீழ் கோவனைக் கைது செய்ய வேண்டும். தொடர்ந்து இத்தகைய பாடல்களை வெளியிட்டு தேச விரோதமாக செயல்பட்டு வரும் ம.க.இ.க -வை தடை செய்ய வேண்டும்” என்று, திருச்சி மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கவுதம் நாகராஜன் திருச்சி காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
திருச்சி நகரத்திலேயே பல காவல் நிலையங்களிலும், குமரி, கோவை மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்கள் மற்றும் அவுட் போஸ்ட்கள் என அங்கிங்கெனாதபடி எங்கும் “சங்கிகள்” புகார் கொடுத்துள்ளனர். இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பாஜக-வினர்

இந்த தகவல் இன்றைய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளிலிருந்து நமக்கு தெரிய வந்துள்ளது.

கலப்படமற்ற தூய உண்மை விவரங்களின் அடிப்படையிலேயே இந்தப் பாடல் அமைந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். பாடல் பல இலட்சம் ஹிந்துக்களையும், இந்தியர்களையும் சென்று சேர்ந்திருக்கிறது. ஆனால் பாஜக ‘ஹிந்துக்களை’ மட்டும் இது பெரிதும் பாதித்திருப்பது தெரிகிறது. இது ஏன் என்று புரியவில்லை.
பாடலின் எந்த வரி அவர்களைப் பாதித்திருக்கும், ஏன் பாதித்திருக்கும், எப்படி பாதித்திருக்கும் என்று வாசகர்களுக்குத் தெரிந்தால், எங்களுடனும் தமிழ் கூறும் நல்லுலகுடனும் அதனைப் பகிர்ந்து கொள்ளுமாறு கோருகிறோம்.
மற்றப்படி பாஜக -வினருக்கு ஒரு வேண்டுகோள்
கம்பன் எழுதிய ராமாயணத்தின் மீது தீ பரவட்டும் என்று பொது அரங்கில் விவாதம் நடத்தியவர் அண்ணா. இந்தப் பாடலும் மக்கள் அரங்கில்தான் பகிரங்கமாகத்தான் பாடப்பட்டிருக்கிறது.
அதன் கருத்துகளை கருத்தால் எதிர்கொள்ளத் துணிவில்லாமல், போலீசுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்களே, வெட்கமாக இல்லை?

கருத்துகள் இல்லை: