புதன், 28 மார்ச், 2018

கிரிக்கெட் மைதானத்தில் ஆண் பெண் தனி இருக்கைகள் கிடையாது,... பெண்கள் வெட்கம்,அச்சம் தொலைத்தவர்களாக...

Shalin Maria Lawrence : Fully Filmy என்கிற ஒரு youtube சேனல் ஒரு காணொளி வெளியிட்டு இருக்கிறது. அதில் வீட்டில் கட்டுப்பெட்டியாக வளர்க்கப்பட்ட பெண் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் பார்க்க சென்று எப்படி தன் வாழ்க்கை மாறியது என்று கூறுவதுபோல் உள்ளது அந்த காணொளி.
அந்த காணொளி முதலில் அபத்தமாக தோன்றினாலும் அதில் ஒரு அசைக்கமுடியாத உண்மை இருக்கதான் செய்கிறது என்பதனை மறுக்க முடியாது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச்சை பார்த்தால் பெண்கள் முன்னேற்றம் அடைவார்கள் என்பது அபத்தம் ஆனால் கிரிக்கெட் என்கிற விளையாட்டு இந்திய பெண்களின் வாழ்க்கையை பாதிக்கவில்லை என்பது அறியாமையின் வெளிப்பாடு.
இந்த மாநிலத்தில் உள்ள அனைவர்களுக்கும் பெரியாரும் அம்பேத்கரும் படிக்க வாய்பிருந்திருக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.அப்படி இருக்க பெண் விடுதலை ,பெண் விடுதலைக்கான தூண்டுதல் வேறு இடங்களில் இருந்து தாராளமாய் கிடைக்கலாம்.
பெரியாரை படித்தால் பெண் விடுதலை நிச்சயம் அதில் துளியும் மறுப்பில்லை ஆனால் அவரை படிக்க வாய்ப்புகிடைக்காதோர் வேறு வழிகளில் தங்களுக்கான தனிமனித விடுதலையை நோக்கி பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
போராளிகளுக்கு இது தவறாக தோன்றலாம் ஆனால் சாமானியர்களுக்கு இது நன்றாக புரியும்.
எப்பேர்ப்பட்ட பழமைவாத குடும்பமாக இருந்தாலும் சரி கிரிகெட் என்று வரும்போது பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வந்து தான் ஆகிறார்கள்.

எந்த நடுத்தர வர்க்க குடும்பமாக இருந்தாலும் அம்மா ,அப்பா,அண்ணன் தங்கை என்று குடும்பமே ஒன்றித்து போய் பார்ப்பது கிரிக்கெட்தான்.
அண்ணனின் ஆண் நண்பர்களோடு பெண்கள் இயல்பாக உட்காரவிடபட்டது கிரிக்கெட் பார்க்கும்போதுதான்.
மற்ற இடங்களில் தடவும் காமுகன்கள் கூட கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது பெண்களை தீண்டக்கூட மாட்டார்கள்.கிரிக்கெட் வெறி அப்படி.
பெண்கள் இந்திய அளவில் கிரிக்கெட் ஆடினார்களா என்று தெரியாது ஆனால் பல பெண்கள் ஆண்களோடு வித்தியாசம் இல்லாமல் கலந்தது தெரு கிரிக்கெட் விளையாடும்போதுதான். பெண்கள் பள்ளிக்கூடத்தில் படித்த எனக்கெல்லாம் நல்ல ஆண் நண்பர்கள் கிடைத்ததெல்லாம் நான் அவர்களோடு தெரு கிரிக்கெட் ஆடும்போதுதான்.
என் அம்மா சொல்லுவார்கள் 80 களிலே காதலிக்கும் ஆண்களும் பெண்களும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டதே கிரிக்கெட்டை வாய்ப்பாக வைத்துதான்.
மைதானத்தில் கிரிக்கெட் பார்க்கும்போது ஆண் பெண் தனி இருக்கைகள் கிடையாது,ஆண்களை போல பெண்களும் குதிக்கலாம்,நடனமாடலாம்...பிடித்ததை செய்யலாம். பாகிஸ்தான் போன்ற conservative நாட்டில்கூட பெண்கள் கிரிக்கெட் மைதானத்தில் வெட்கம்,அச்சம் தொலைத்தவர்களாக இருக்கிறார்கள்.கிரிக்கெட் மைதானங்களை பொறுத்தவரை அவை தனி நாடுகள்.கிரிக்கெட் ஒரு தனி மதம்.
இன்னும் கூட ஒருபடி மேலே போய் சொல்கிறேன்.கிரிக்கெட் பார்க்கும் பெண்கள் வயது வித்தியாசம் கடந்து தைரியசாலிகளாக இருக்கிறார்கள்.தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்.பேச்சில் கூட ஒரு boldness இருக்கும்.
இது எல்லாவற்றிற்கும் பின்னே உளவியல் காரணங்கள் உண்டு.
சில சமயம் போராளிகளாக இருப்பதை நிறுத்திவிட்டு சாமானிய மனிதர்களின் மனதை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
இங்கே எல்லாமே கருப்பு வெள்ளை கிடையாது.
இரண்டிற்கும் நடுவே சாதாரண மனிதர்களும் அவர்களின் உணர்வுகளும் உள்ளது.கொஞ்ச நேரம் பேசுவதை நிறுத்துவிட்டு மற்றவர்கள் உணருவதை காது கொடுத்து கேட்போம்.
பெண் விடுதலை பெண் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும்.
ஷாலின்

கருத்துகள் இல்லை: