திங்கள், 26 மார்ச், 2018

காவிரிக்காக திருச்சியை அதிர வைத்த மக்கள் அதிகாரம் முற்றுகைப் போராட்டம் ! படங்கள்


வினவு :காவிரி உரிமையை நிலைநாட்ட களத்தில் இறங்குவோம்!” என்று தமிழகம் முழவதும் தீவிரப் பிரச்சாரம் செய்த மக்கள் அதிகாரம், 24.03.2018 சனிக்கிழமை அன்று திருச்சியில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டது.

போராட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 11:00 மணியளவில் திருச்சி தலைமை தபால் நிலையம் நோக்கி பறையிசை முழங்க முன் வரிசையில் மக்கள் அதிகாரம் தோழர்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், பல்வேறு கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள்  என பேரணியாக சென்றனர்.
கொடிகளும் பதாகைகளும் சமீபத்தில் நடந்த மராட்டிய விவசாயிகளின் “செங்கடல்” பேரணியின் நினைவை கண்முன் காண்பித்தன. பேரணி முன்னேறி செல்லும் நேரத்திலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த விவசாயிகளும், மக்கள் அதிகாரம் தோழர்களும் தங்களை பேரணியில் இணைத்து கொண்டிருந்தனர்.

மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளில் பேரணியை நிறுத்தி இந்த போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் உரையாற்றினர். போராட்டக் களத்திலேயே புதிய பாடல் ஒன்றை தோழர் கோவன் பாடினார். பல்வேறு தொலைக்காட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் நேர்காணல் அளித்தனர்.
பின் தபால் நிலையம் வந்த பேரணி முற்றுகையாக மாறியது. கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயதானோர் என எந்த வித்தியாசமும் இன்றி அனைவரும் கொதிக்கும் சாலை அமர்ந்து முழக்கமிடத் துவங்கினர். முழக்கமிடும் தோழர்கள் களைப்படையாத வகையில் தண்ணீர் பாக்கெட்டுக்கள், உப்பு, குளுக்கோஸ் ஆகியவை வினியோகிக்கப்பட்டது.
முற்றுகை தீவிரமடைவதைக் கண்டு பீதியடைந்த போலீசு பதறியடித்துக் கொண்டு போராட்டத்தை முடித்துக் கொள்ளச் சொன்னது. இது அடையாளப் போராட்டம் அல்ல, தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட நடத்தப்படும் போராட்டம் என அறிவித்தனர் தோழர்கள்.
என்ன பேசினாலும் இந்தப் போராட்டத்தை முடிக்க முடியாது என்பதால், போராடும் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்தது போலீசு.
கைதாக மறுத்து தோழர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் போலீசார் அனைவரையும் குண்டுக் கட்டாக தூக்கி பேருந்துகளில் அடைத்து ஏற்றிச் சென்றது. திருச்சி நகரின் பல்வேறு மண்டபங்களில் தோழர்கள் அடைக்கப்பட்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
____________

கருத்துகள் இல்லை: