செவ்வாய், 27 மார்ச், 2018

திமுக அவசர செயற்குழு!,, மார்ச் 30

மின்னம்பலம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அவகாசம் வரும் 29ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் இரண்டு நாள்களே அவகாசம் உள்ளது. ஆனால், மத்திய அரசு அதற்கான முயற்சிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து ஈரோட்டில் நடந்த திமுக மண்டல மாநாட்டில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்’ என்று அறிவித்தார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 26) திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய திமுகவின் அவசர தலைமைச் செயற்குழுக் கூட்டம் வரும் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.
செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மாநாட்டை முடித்துவிட்டு ஈரோட்டிலிருந்து ஸ்டாலின் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று கூறியவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

காவிரி விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்டாலின், “சட்டமன்றத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வமே வெளிப்படையாகக் கூறினார். வரும் 29ஆம் தேதி வரை காத்திருங்கள். மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால், நாம் நிச்சயமாக ஒரு முடிவெடுப்போம் என்று உறுதியளித்துள்ளார். ஆனால், நான் கூறுகிறேன் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடப் போவதில்லை.
ஆகவே, சட்டமன்றத்தில் பன்னீர்செல்வம் குறிப்பிட்டபோதுபோல, இந்த குதிரை பேர ஆட்சி மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் டெல்லிக்கே சென்று போராட்டம் நடத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். நம்புகிறேன்” என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: