செவ்வாய், 27 மார்ச், 2018

அமித் ஷா தடுமாற்றம் .. நாட்டின் மிகப்பெரிய ஊழல்வாதி எடியுரப்பா


tamilthehindu :காங்கிரஸ் ஊடகபிரிவு நிர்வாகி திவ்யா ஸ்பந்தனா வெளியிட்டுள்ள ட்விட் ;படம் உதவி: ட்விட்டர் கால்பந்துப் போட்டியில் சொந்த அணிக்கு எதிராகவே சில நேரங்களில் வீரர்கள் ‘சேம்சைட்’ கோல் அடிக்கும் காட்சிகள் அரங்கேறும். அதேபோல் அரசியலில் நடந்தால் எப்படி இருக்கும்.
அதுபோன்ற காட்சிதான் கர்நாடகத்தில் தேவநாகரே இடத்தில் இன்று நடந்தது. பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ள எடியூரப்பாதான் உண்மையிலேயே மிகப்பெரிய ஊழல்வாதி என்று பாஜக தலைவர் அமித் ஷா நாக்குத் தவறி பேசியது அங்கிருந்தவர்களை டென்ஷனாக்கிவிட்டது.
கர்நாடகத்தில் வரும் மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

கர்நாடக மாநிலத்தில் 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவர் அமித் ஷா தேவநாகரி இடத்தில் இன்று கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, நிருபர்களுக்கு அமித் ஷா அளித்த பேட்டியின்போது, முதல் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். அப்போது அமித் ஷா பேசுகையில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் சமீபத்தில் பேசுகையில், கர்நாடகத்தில் யாருடைய அரசு அதிகமான ஊழல் நிறைந்தது என்று போட்டி வைத்தால், அது எடியூரப்பா தலைமையில் இருந்த அரசுதான் என்று கூறினார் என்று தெரிவித்தார்.
இந்த வார்த்தையைக் கேட்டதும், அமித் ஷாவுக்கு அருகே அமர்ந்திருந்த முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு தூக்கிவாரிப்போட்டு, முகமெல்லாம் வியர்த்துவிட்டது.
அதற்குள் அமித்ஷாவின் இடது புறம் அமர்ந்திர பாஜக நிர்வாகி ஒருவர் , பெயரை தப்பாக கூறுகிறீர்கள், எடியூரப்பா அல்ல, சித்தராமையா என்று கூறுங்கள் என்று அமித் ஷாவிடம் மெல்லக் கூறினார்.
தான் ஊழல்வாதியின் பெயரை தவறாகக் கூறிவிட்டேன் என்று உணர்ந்த அமித் ஷா, அதை திருத்தி, சித்தராமையா என்று பேசினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவேகமாகப் பரவியது குறிப்பாக காங்கிரஸ் தொண்டர்கள் தங்களால் எவ்வளவு வேகமாக பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு பகிர்ந்தனர்.
இந்த வீடியோ குறித்து முதல்வர் சித்தராமையா ட்விட்டரில் கூறுகையில், ‘கடைசியில் பாஜக தலைவர் அமித் ஷா உண்மையை பேசிவிட்டார். நன்றி அமித் ஷா ஜி’ எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கிண்டல்
காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் கூறுகையில், யாருக்கு தெரியும் பாஜக தலைவர் அமித் ஷா கூட உண்மையை பேசலாம். நாங்கள் உங்கள் கருத்தை ஆதரிக்கிறோம். உண்மையில் பாஜகதான் ஊழல் நிறைந்தகட்சி. எடியூரப்பாவை குறித்து தான் என்ன நினைக்கிறேன் என்று அமித் ஷா சொல்லிவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பலரும் பலவாறு பாஜக தலைவரின் பேச்சை கிண்டல் செய்து, விமர்சனம் செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் 2008ம் ஆண்டு முதல் 2011ம்ஆண்டு வரை முதல்வராக எடியூரப்பா இருந்தார். ஆனால், பெல்லாரியில் சுரங்க ஊழல் ஒதுக்கீட்டில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டதையடுத்து, மாநில லோக் ஆயுக்தா எடியூரப்பாவை பதவி விலகக் கூறியது. இதையடுத்து எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இந்த வழக்கில் இருந்து 2016-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: