புதன், 28 மார்ச், 2018

கதை திருட்டு ..அபூர்வ ராகங்கள்’ என். ஆர். தாசன் எழுதிய கதை ..


Karundhel Rajesh :என் கதையை குறிப்பிட்ட இயக்குநர் திருடிவிட்டார்’ என்று புலம்பியவர்களை ஏறத்தாழ பைத்தியக்காரர்கள் போலவே பார்க்கவைத்த சினிமா நம் தமிழ் சினிமாவாக மட்டுமே இருக்கும்.... அப்படி நொந்த உள்ளங்களுக்கு இத்தொடர் சமர்ப்பணம் !!!!!!!!!
@@@@@@@@@@@@@@
'அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் என். ஆர். தாசன் என்ற எழுத்தாளரின் கதை. எழுபது எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கிய எழுத்தாளர் அவர். அபூர்வ ராகங்கள்’ படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநரை தொடர்பு கொண்டபோது முறையான பதில் கூறப்படவில்லை. இத்தனைக்கும் என்.ஆர். தாசன் அரசுத்துறையில் உயரதிகாரி. பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு நெடுநாள் நடந்தது.
இடையில் இதுதொடர்பாக இருதரப்புக்குமிடையில் பேச்சு வார்த்தை நடத்த முயன்றவர் மறைந்த நாடக இயக்குநர் கோமல் சுவாமிநாதன். என். ஆர். தாசனுக்குச் சார்பாகவே தீர்ப்பு வந்தது. ஏற்கனவே வெளியான புத்தகத்தில் வந்த கதையைப் படமாக்கினால் தப்பிக்கவா முடியும்? வழக்கு முடிவில் எதிர்த்தரப்புக்கு அபராதம் ஆயிரம். படத்தில் அவர் பெயரைச் சேர்க்க வேண்டும். பணத்தையோ பெயரையோ அவர் எதிர்பார்க்கவில்லை, நீதிக்காக அந்த வழக்கை நடத்தினார்.

- கவிஞர் மகுடேஸ்வரன் தனது முகநூலில் எழுதியது
@@@@@@@@@@@@@@@@
'பம்பாயிலிருந்து வரும் பத்திரிக்கை ஒன்றில் நான் படித்த கட்டுரை ஒன்று இந்தப் படத்தை எடுக்கத் தூண்டுகோலாக அமைந்தது. மொபைல் பீடாக்கடை வைத்திருக்கும் பட்டதாரி ஒருவர், சொந்தமாக வேலை செய்து சந்தோஷமாக இருக்கிறேன் என்று பேட்டியில் சொல்லியிருந்தார்'
- கே. பாலசந்தர் , ஆனந்த விகடன்-16.8.81.
படம்- வறுமையின் நிறம் சிவப்பு.
இது பாலசந்தரின் பேட்டி. இப்போது இதைப்பற்றி அப்போது ஒரு விமர்சகர் எழுதியிருப்பதைப் பார்க்கலாம்.
'ராஜபாளையம் கதைப்பித்தன் என்பவர் தாமரை பத்திரிக்கையில், படித்துவிட்டு வேலை கிடைக்காத பிராமண இளைஞன் கடைசியில் நண்பனின் முடிதிருத்தும் கடையில் வேலைக்குச் சேர்வதாகக் கதை எழுதியிருந்தார். ராஜபாளையம் கதைப்பித்தனை சென்னைக்கு வரச்சொன்ன பாலசந்தர், ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கையெழுத்துப் பெற்று அந்தக் கதையை வாங்கியிருந்தார். படம் வெற்றிபெற்றதும் பம்பாய் பத்திரிக்கையில் கட்டுரை படித்தேன் என்று சொல்லி ஒரு எழுத்தாளனை இருட்டடிப்பு செய்திருக்கத் தேவையில்லை'.
அந்த விமர்சகர், அறந்தை நாராயணன். சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று அறுபதுகளிலேயே விமர்சித்து எழுதியவர். இவரது பல புத்தகங்கள் இப்போதும் உள்ளன. அவசியம் வாங்கிப் படித்துப் பாருங்கள். குறிப்பாக தமிழ் சினிமாவின் கதை(நியூ செஞ்சுரி வெளியீடு. 350/-). மறக்க முடியாத புத்தகம். அதில்தான் பாலசந்தரின் சம்பவம் வருகிறது. புத்தகத்தில் யாருமே அறந்தையின் விமர்சனங்களுக்குத் தப்பவில்லை.
பாலசந்தர் உருவிய பல படங்களை வெளிப்படையாக எழுதியிருக்கிறார் அறந்தை
@@@@@@@@@@@@@@@@
ரித்விக் கட்டக். வங்காளத்தில் பிறந்த ஒரு திரைப்பட மேதை. தமிழகமும் இன்னபிற மாநிலங்களும், பத்தி பத்தியாக எதுகை மோனை நிரம்பிய அலங்கார வசனங்கள் அடங்கிய செயற்கையான திரைப்படங்களை எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்த அறுபதுகளில், பல அருமையான திரைப்படங்களை இயக்கியவர். ஆயினும், இவரது புரட்சிகர மனநிலையினால், திரையுலகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்.
இவர் எடுத்த படமே ‘மேகே தக்க தாரா’. மேகங்களினால் சூழப்பட்டிருக்கும் நட்சத்திரம் என்று பொருள். 1960 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். அதிகமான சர்வதேச திரைப்பட விழா மேடைகளை கண்ட இந்திய திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்று.
இந்த திரைப்படத்தில் வயதான அம்மா அப்பா வயது வந்த தங்கை, சிறு வயது தம்பி, பொறுப்பிலாத அண்ணன் என்று இருக்கும் ஒரு குடும்பத்தில் எல்லா பொறுப்புகளையும் சுமந்து வேலைக்கு செல்லும் நீதா என்ற பெண் ஒரு கட்டத்தில் தன்னால் முடியாத நிலையில் தன் காதலனை கூட தன் தங்கைக்கே கட்டி வைக்கிறாள். இப்படி குடும்பத்துக்காக தன்னையே அற்பணிக்கும் இந்த பெண் முடிவில் TB வந்து இறந்து போவது போல திரைப்படத்தை சோகத்துடன் முடித்து இருப்பார் இயக்குனர் ரித்விக் கடக்.
படத்தின் கதையைப் படிக்கப் படிக்க உங்களுக்கு இக்கதை வெகுவாகப் பரிச்சயமுள்ள கதையாகத் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், இந்தப்படம் வெளியான 14 ஆண்டுகள் கழித்து 1974 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த கே.பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் இந்த படத்தின் அப்பட்டமான சாயலில் இருந்தது!
ஆனால் “ இந்தப்படம் எனது படத்துக்கு ஆதர்சமாக இருந்தது..” என்று கூட இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இதுவரை குறிப்பிடவே இல்லை என்பது ஆச்சர்யம்!
ஒரு அழகான உலகப் படத்தைக் காப்பி அடிப்பது அப்போதே ஆரம்பித்துவிட்டது போலும். அவர் ஆரம்பித்து வைத்ததை, அவரது சிஷ்யர்கள் பலரும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
நன்றி: "கருந்தேள்" ராஜேஷ் —
2 April 2015

கருத்துகள் இல்லை: