விகடன் :இ.கார்த்திகேயன் ஏ.சிதம்பரம் : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க அனுமதியை தடை செய்யவேண்டும். தற்போது செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் 'வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது. ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆலைக்கு எதிராக போராடிய இக்கிராம மக்கள், தங்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல், தங்கள் குழந்தைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளுடன் போராட்டக்காரர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதேபோல் போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்த பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும், கடந்த 41 நாட்களாக கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
கிராம மக்களுடன் தமிழ்நாடு வணிகர் சங்கமும் இணைந்தால் கண்டன பொதுக்கூட்டம் வலுப்பெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் வெள்ளையன், "மண்ணை மலடாக்கி மக்களின் உடல் நலத்தை பாதிக்கின்ற நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இந்த அரசு இன்னமும் அரசு மெளனம் காத்து வந்தால் இதை மாநிலம் தழுவிய மிகப் பெரும் போராட்டமாக முன்னெடுத்து செல்வோம். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை ஓயமாட்டோம்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக