திங்கள், 26 மார்ச், 2018

4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் உளுந்தூர்ப்பேட்டைக்கு அருகில் கண்டுபிடிப்பு

priyaநக்கீரன் :உளுந்தூர் பேட்டை அருகே உள்ள சிறுபாக்கம் என்னும் ஊரின் நடுவே காணப்படும் குகைகளில் பண்டைய மனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்களை பேராசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் பிரியா கிருஷ்னன் , தொல்லியல் ஆர்வலர்கள் சி.பழனிசாமி, ஏ.கோவிந்தன், ஆய்வு மாணவர்(பில்க்) செ.சுபாஷ் ஆகியோரால் கள ஆய்வின் போது கண்டறியப்பட்டது.
இது குறித்து தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் முனைவர் பிரியா கிருஷ்ணன் கூறியதாவது: ’’எழுத்துகள் உருவாக்குவதற்கு முன் ஓவியங்கள்தாம் மனிதனின் எண்ணங்களைப் பிரதிப்பலித்தது. செங்காவி நிறத்தில் காணப்படும் இவ்வோவியங்கள் காலத்தால் முந்தையன. இங்கு காணப்பட்ட ஓவியங்கள் தொல் பழங்காலத்தைச் சேர்ந்தவை., இவை சுமார்  4000 ஆண்டுகள் வரை பழமையானவயாக கருதப்படுகிறது.   இப்பகுதியில் காணப்படும் ஓவியம், அன்றைய மனித இனத்தின் எண்ணம் மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. குகையின் ஒரு புறத்தில் கைகள் எட்டும் தொலைவில் சிவப்பு வண்ணத்தில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

 வடிவியல் (geometrical) முறையில் செவ்வக வ்டிவில் நான்கு சதுரங்களாக பிரிக்கப்பட்ட வடிவத்தில் ஒரு ஓவியம் காணப்படுகிறது.
இது வளமையை குறிக்கும் அல்லது நிலத்தை பங்கீடு செய்யும் தாய முறையினை குறிப்பதாகவும் கொள்ளலாம். இதே அமைப்பில் சிந்துவெளி சமவெளியிலும் கிடைத்திருக்கின்றன. அவை நகரத்தை குறிப்பன.அதாவது இது கட்டுமானத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம். இன்னொரு உருவம் மனிதனைக் குறிக்கிறது. அது நான்கு கைகளை கொண்டதாக இருப்பதால் பலசாலி என்பதாகவோ கடவுள் நிலையில் உள்ள சாகச மனிதனாகவோ கருதலாம். அடுத்து இன்னொரு மனிதனின் உருவம் வரையப்பட்டுள்ளது. அடுத்து ஆயுதம் தாங்கிய மனிதன் போன்ற ஓவியங்கள் என சில தெளிவாக உள்ளன. பத்திற்கும் மேற்பட்ட ஓவியங்கள் காணப்பட்டாலும் சில ஓவியங்கள் அழிந்தும், மறைந்தும் உள்ளன.
இது போன்ற தொல்லியல் பகுதிகளை பாதுகாப்பது மட்டுமன்றி , இது போன்ற தொன்மை சார்ந்த பகுதிகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

கருத்துகள் இல்லை: