ஞாயிறு, 25 மார்ச், 2018

துரைமுருகன் : தமிழக அரசை கவிழ்ப்பது கடினமில்லை .. அது ஒரு சின்ன வேலை

ஆட்சியைக் கவிழ்ப்பது கடினமில்லை: துரைமுருகன்மின்னம்பலம்: ஆட்சியைக் கவிழ்ப்பது எங்களுக்கு கடினமில்லை. அது ஒரு சின்ன வேலை என்று ஈரோட்டில் நடைபெற்று வரும் திமுக மண்டல மாநாட்டில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார்.
மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் உள்ளிட்ட முழக்கங்களை முன்னிறுத்தி திமுக மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகிலுள்ள சரளை என்ற இடத்தில் நேற்று துவங்கியது. இரண்டாம் நாளான இன்று காவிரி மேற்பார்வை ஆணையம் என்னும் குழு எங்களுக்குத் தேவையில்லை, காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள், விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி பேசுகையில், "திமுக ஈரோடு மண்டல மாநாட்டு மேடையில் திமுக தலைவர் கருணாநிதி இல்லையென்றாலும் அவர் ஒவ்வொரு தமிழன் இதயத்திலும் இருக்கிறார்"என்று குறிப்பிட்டார்.


மாநாட்டில் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உரையாற்றியபோது, "காவிரி பிரச்சினைக்கு மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், சட்டமன்றத்தையும் கூட்ட வேண்டும் என்று செயல்தலைவர் ஸ்டாலின் கூறினார். ஆனால் ஆட்சியாளர்கள் எதையும் செய்யவில்லை. எனவே காவிரி பிரச்னையில் கனிமொழி, சிவா உள்பட அனைத்துத் தமிழக எம்.பி.க்களும் ராஜினாமா செய்வதுதான் நமக்குத் தீர்வைக் கொடுக்கும் என்றும் கூறினார். அதனையும் ஒப்புக்கொள்ளவில்லை" என்று கூறிய அவர், இந்த ஆட்சியைக் கவிழ்ப்பது அவ்வளவு கடினம் என்று நினைக்காதீர்கள். அது ஒரு சின்ன வேலை" என்றும் கூறினார்.
தொடர்ந்து அவர் ஒரு உரையாடலையும் நினைவுகூர்ந்தார். கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் ஆட்சியைக் கவிழ்த்திருப்பார் என்று நிறைய பேர் கூறுகிறார்கள். முன்பு கருணாநிதியுடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் என்னிடம், "தொர, ஜெயலலிதா அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு சொல்றாங்க. அவங்க ரொம்ப நாள் வாழணும்கிறதுதான் நம்ம எண்ணம். ஆனால் இடையில் ஏதாவது நடந்துதுன்னா அதிமுக ரெண்டா உடையும். ரெண்டு தரப்புல இருந்தும் நம்மகிட்ட வந்து எங்களை ஆதரிங்கன்னு கேப்பாங்க. எம்.ஜி.ஆர் இறந்தப்பவும் அதுதான் நடந்துது. நாம யாரையும் ஆதரிக்கல. அப்படிப்பட்ட சமயத்துல நீங்க யார் கூடவாவது சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி பண்ணீங்கன்னா தொலஞ்சீங்க" என்று அப்போதே கூறினார். அவர் ஒரு தீர்க்கதரிசி, ஜெயலலிதா - ஜானகி அணி இருந்த போதே அந்த விவகாரத்தில் தலையிட மறுத்தவர் கருணாநிதி என்றும் கூறிய துரைமுருகன், மேலும் அழிந்து போகும் அதிமுகவுக்கு ஆதரவு தருகிறோம் என்ற பெயரில் உயிர் கொடுக்கக் கூடாது. ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றால் நேர்வழியில் ராஜாபாட்டையிலே நடந்து வந்து அமரவேண்டுமே தவிர, கருணாநிதியின் மகன் புறக்கடை வழியாகப் பதவியில் அமரக் கூடாது என்றும் எங்களிடம் கூறினார். அதைத்தான் ஸ்டாலினும் ஆமோதிக்கிறார்" என்று கூறினார்.

தொண்டர்களை நோக்கி துரைமுருகன், "நீங்கள் தற்போது 'தளபதி செயல்தலைவர் ஸ்டாலின்' என்று அழைக்கிறீர்கள். ஆனால் அவர் தற்போது தளபதியைத் தாண்டி செயல்தலைவர் ஆகிவிட்டார். எனவே இனி நீங்கள் போஸ்டர்களில் , பேனர்களின் போடும்போது செயல்தலைவர் என்றே போடுங்கள்" என்றும் வலியுறுத்தினார்.
மாலை நிகழ்வுகள் 3.30 மணிக்கு நாகூர் இ.எம்.ஹனிபா நெளஷாத் அலி குழுவினர் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மாநாட்டில் 50 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தீர்மானங்களை வாசித்தார்.
"லோக்பால் அமைப்பை அமைக்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற நோக்குடன் செயல்படும் மத்திய அரசுக்குக் கண்டனம், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தீர்மானம், பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்குக் கண்டனம், மாநில உரிமைகளை மீட்டு பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜிஎஸ்டியில் மத்திய அரசு தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும், டெல்டா பகுதிகளை பெட்ரோகெமிக்கல் மண்டலமாக மாற்றும் திட்டத்திற்கு கண்டனம் , உள்ளாட்சி அமைப்புகளின் வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும், திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட தமிழக நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும், பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும், கெயில் திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை உடனே தடுக்க வேண்டும், கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்" உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

மாநாட்டுத் துளிகள்
மாநாட்டிற்கு அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்தான் தொகுப்பாளராக இருக்கிறார். ஒவ்வொரு முறையும் செயல் தலைவர் ஸ்டாலினிடம் சென்று பேச்சாளர்களின் பட்டியலைக் காட்டுவார். அவர் டிக் செய்யும் பெயரையே பேசுவதற்கு அழைப்பார்.
மேடையில் கனிமொழி அமைதியாக ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது அருகிலிருக்கும் ஐ.பெரியசாமி அவரிடம் பேச்சுக் கொடுத்து சிரிக்கவைத்தார்.
மாநாட்டின் முதல் நாளான நேற்று மாநாடு துவங்கிய 1 ½ மணி நேரத்தில் டி.கே.எஸ், மைக்கை பிடித்து, நடிகர் உதயநிதி ஸ்டாலின் மேடைக்கு வந்து பேராசிரியர் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துவார் என்றார். அவர் அப்படிக் கூறியவுடன், கீழே முன் வரிசையில் தயாராக இருந்த உதயநிதி ஸ்டாலின் புள்ளி மான் போல் துள்ளிக் குதித்து மேடைக்கு ஓடிவந்தார். பேராசிரியருக்கு பொன்னாடை போற்றி காலில் விழுந்து ஆசிபெற்றார். அடுத்தபடியாக யாரும் எதிர்பார்க்காத விதமாக அப்பா ஸ்டாலினுக்கும் பொன்னாடை போர்த்தி காலில் விழுந்து ஆசிபெற்றார். துரைமுருகனுக்கும் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார். பொன்னாடை போர்த்தி காலில் விழுந்து ஆசிபெறச் சொல்லியவர் துர்கா ஸ்டாலின்தான் என்றும் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: