ஞாயிறு, 14 டிசம்பர், 2014

EVKS.இளங்கோவன் :அவருக்கும் (வைகோ) எங்களுக்கும் பெரிய இடைவெளி கிடையாது !

ஊட்டியில் இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உருவச்சிலை திறக்கப்படுகிறது. கேரள முதல்வர் உம்மன்சாண்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராஜீவ்காந்தி உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.>விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று மேட்டுப்பாளையம் சென்றார்.  அவருக்கு மேட்டுப் பாளையம் நகர காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர்,   ‘’தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 17–ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சில இடங்களில் 18–ந் தேதி நடைபெறும். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னரும் மின்கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டமாக மின் கட்டணம் செலுத்துவது தவிர்க்கப்படும்.அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மோடியின் கொத்தடிமைகளாக உள்ளனர். அவர்கள் சொல்வதில் எதுவும் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.


அ.தி.மு.க. மந்திரிகள் கண்ணீர் விடாமல் அழுவது எப்படி என்பதை பதவி ஏற்பு விழாவில் செய்து காட்டினார்கள். நிறையபேர் மொட்டை அடித்துக்கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். அதற்கு காசு கொடுத்தார்கள். தமிழ் நாட்டில் மாரடைப்பால் இறந்தவர்களுக்கும் காசு கொடுத்தார்கள்.

அ.தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால் மக்களை பல்வேறு வகையில் மொட்டை அடித்தார்கள். மொட்டை அடித்தால் ரூ.1000, மீசையை எடுத்தால் ரூ.500 என வருமானம் வர ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

காங்கிரஸ் கட்சி நல்ல திட்டங்கள் எதைக்கொண்டு வந்தாலும் அதனை எதிர்ப்பது தான் பாரதீய ஜனதாவின் லட்சியம். ஆனால் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நல்ல திட்டங்களை அவர்களும் செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.  இதன் மூலம் காங்கிரஸ் கட்சியும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்பதை அவர்கள் உணர்வார்கள்.

முல்லைப் பெரியார் அணைக்கு மாற்றாக புதிய அணைகட்ட ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ஆய்வு செய்ய அனுமதி உண்டு. ஆனால் அணை கட்ட அனுமதி தரவில்லை.

புதிய அணைகட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது. அப்படி அனுமதி கொடுத்தால் காங்கிரஸ் கட்சியும், ஒட்டு மொத்த தமிழகமும் அதனை எதிர்த்து போராடும்.

தமிழக அரசு ஊழியர்கள் முல்லைப்பெரியார் அணையில் வேலை செய்வதை கேரள அரசு தடுக்கிறது. இதுகுறித்து இன்று கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டியிடம் பேசுவேன்.

அணைப்பகுதியில் மத்திய காவல் படையினரை நிறுத்தவது வரவேற்கத்தக்கது. மதமாற்றம் கண்டிக்கத்தக்கது. வைகோ காங்கிரசை நன்கு புரிந்துள்ளார். இலங்கை பிரச்சினையில் நாங்கள் உறுதியாக அவரோடு இருக்கிறோம். ஆனால் வைகோ தொடர்ந்து ஒரே ஒரு தவறை மட்டும் செய்து வருகிறார். பிரபாகரன் விஷயத்தில் அவர் தனது கருத்தை மாற்றிக்கொண்டால் அவருக்கும் எங்களுக்கும் பெரிய இடைவெளி கிடையாது. தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்ப்போம்’’என்று கூறினார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: