புதுடில்லி : மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய
குற்றவாளியும், மத்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியுமான தாவூத்
இப்ராகிமை, பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரு ஆண்டுக்கு முன் தீர்த்துக்
கட்ட, உளவு நிறுவனம் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கை, கடைசி நேரத்தில்
கைவிடப்பட்டது தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக, மத்திய அரசின் உளவு நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:
பாகிஸ்தானின் கராச்சி நகரில் தங்கியிருக்கும் தாவூத் இப்ராகிமை,
இந்தியாவுக்கு பிடித்துக் கொண்டு வர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள்
தோல்வி அடைந்து விட்டன. அதனால், பாகிஸ்தானிலேயே தாவூத்தை ஒழித்துக் கட்ட,
2013ல் ரகசிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.இதற்காக, உளவு அமைப்பான,
'ரா'வால், ஒன்பது ஏஜன்ட்டுகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு,
பாகிஸ்தான் செல்ல சூடான், வங்கதேசம் மற்றும் நேபாள நாடுகளின்
பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன. 'சூப்பர் பாய்ஸ்' என, அழைக்கப்பட்ட இந்த கமாண்டோ குழுவினர், தங்களின் பணியை வெற்றிகரமாக முடிக்க, சரியான நாளாக, 2013 செப்., 13ம் தேதி தேர்வு செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவையானதை செய்ய, இஸ்ரேல் உளவு அமைப்பான, 'மோசாத்'தின் உதவி யும் நாடப்பட்டது.கராச்சியில் தங்கி இருக்கும் தாவூத், ஒவ்வொரு நாளும் கிளிப்டன் ரோட்டில் உள்ள தன் வீட்டிலிருந்து, ராணுவ வீட்டு வசதி சங்கத்திற்கு செல்வது வழக்கம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 'சூப்பர் பாய்ஸ்'கள், அவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்யப்பட்டது. தாவூத் செல்லும் வழியில் உள்ள வழிபாட்டு தலம் ஒன்று, தாக்குதலுக்கான இடமாக தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் திட்டப்படி, குறிப்பிட்ட நாளன்று, சூப்பர் பாய்ஸ்கள் ஒன்பது பேரும், தாவூத் செல்லும் வழியில் தாக்குதல் நடத்த காத்திருந்தனர். தாவூத்தின் கார் பற்றி, அந்த சூப்பர் பாய்ஸ்களுக்கு தெரியாது. இருந்தாலும், அவனின் சமீபத்திய வீடியோ காட்சியும், அதில் உள்ள தாவூத்தின் படமும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.சூப்பர் பாய்ஸ் கள், தாக்குதல் நடத்த தயாராக இருந்த சில நிமிடங்களுக்கு முன், ஒரு இடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியவர், தாவூத்தை கொல்லும் முடிவை கைவிட வேண்டும் என, தெரிவித்ததால், அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.தாவூத்தை கொல்லும் நடவடிக்கையை கைவிடும்படி, சூப்பர் பாய்ஸ்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தது யார்? எதற்காக அப்படி தெரிவிக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்களை நாங்கள் சொல்ல முடியாது. இவ்வாறு, உளவு நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
*மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில், 1993 மார்ச், 12ல், 13 இடங்களில் கார் குண்டுகள் வெடித்தன.
*இந்திய வரலாற்றில் நடந்த மிக மோசமான இந்தத்தாக்குதலில், 350 பேர் பலியாயினர்; 1,200 பேர் காயம் அடைந்தனர்.
*இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான முக்கியபயங்கரவாதி தாவூத் இப்ராகிம், மும்பையில் இருந்து தப்பி, பாகிஸ்தான் கராச்சி நகர் சென்று, அங்கு பதுங்கி உள்ளான். அவனுக்கு பாக்., அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது.
*இந்த தாக்குதல் வழக்கில், 20 ஆண்டுகளுக்குப் பின், 2013 மார்ச், 21ல் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், தாவூத் இப்ராகிமும், டைகர் மேமனும், இன்னும் தலைமறைவு
குற்றவாளிகளாகவேஉள்ளனர். தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக