வியாழன், 18 டிசம்பர், 2014

அரவிந்தர் ஆஷ்ரமவாசிகள் தற்கொலை! 5 சகோதரிகள் பெற்றோருடன் கடலில் குதித்து தாயும் இரு சகோதரிகளும் பலி!

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த 5 சகோதரிகள் பெற்றோருடன் கடலில் குதித்தனர். இதில் 2 சகோதரிகள் மற்றும் அவர்களின் தாய் பலியானார்கள். புதுச்சேரியில் உள்ள பிரபல அரவிந்தர் ஆசிரம குடியிருப்பில் சிறு வயது முதல் இருந்து வந்தவர்கள் பீகாரைச் சேர்ந்த ஹேமலதா, ஜெயஸ்ரீ, அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ மற்றும் நிவேதிதா ஆகிய சகோதரிகள். இதில் ஹேமலதா மீது கடந்த 2002ம் ஆண்டு ஆசிரம நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. ஹேமலதா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும் சகோதரிகள் ஆசிரமம் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். ஆனால் இது பொய் புகார் என ஆசிரமம் தெரிவித்தது. புதுச்சேரி ஆசிரம சகோதரிகள் ஏன் கடலில் குதித்தனர்? இந்நிலையில் சகோதரிகளை வெளியேற்றுவது குறித்து ஆசிரமம் உயர் நீதிமன்றத்தை அணுகியது. உயர் நீதிமன்றம் சகோதரிகளை ஆசிரமத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சகோதரிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சகோதரிகள் 5 பேரும் ஆறு மாத காலத்திற்குள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அதுவரை ஆசிரம விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது. நேற்றுடன் உச்ச நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்தது. ஆனால் சகோதரிகள் ஆசிரமத்தை விட்டு வெளியேற மறுத்தனர். இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் ஹேமலதா ஆசிரம குடியிருப்பின் 4வது மாடியில் ஏறிக் கொண்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்கள் ஹேமலதாவை கீழே இறங்கி வருமாறு கூறியும் அவர் கேட்கவில்லை. யாராவது மேலே வந்தால் குதித்துவிடுவேன் என மிரட்டினார். அப்போது எஸ்.ஐ. சஜீத் சாதாரண உடையில் பத்திரிக்கையாளர்களுடன் சேர்ந்து நிருபர் போன்று சென்று ஹேமலதாவிடம் பேசினார். பேசிக் கொண்டிருக்கையில் அவர் ஹேமலதாவை பிடித்து கீழே இறக்கி அழைத்து வந்தார். இதற்கிடையே மீதமுள்ள 4 சகோதரிகளும் மாடி மேல் ஏறி அங்கிருந்து குதிக்க ஓடினர். போலீசார் அவர்களை பிடித்து கைது செய்தனர். சகோதரிகளை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேற சம்மதித்தனர். அதன் பிறகு போலீசார் சகோதரிகளை விடுதலை செய்தனர். நேராக ஆசிரமம் சென்ற அவர்கள் தங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினர். இதையடுத்து சகோதரிகள் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பிறகு சகோதரிகள் பெற்றோருடன் சேர்ந்து சின்னகாலான்பட்டு கடலில் குதித்துவிட்டனர். அதில் அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ மற்றும் அவரது தாய் பலியாகினர். அவர்களின் உடல்கள் விழுப்புரம் அருகே உள்ள தந்திராயன்குப்பம் கடற்கரையில் ஒதுங்கியது. மற்ற 3 சகோதரிகள் மற்றும் அவர்களின் தந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

//tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: