சென்னை!
இந்த பெயரைக் கேட்டதுமே சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை,
கிண்டி சிறுவர் பூங்கா.. இவற்றுக்கு முன்பாக எல்லோருக்கும் 'கூவம்'தான்
ஞாபகம் வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்து, சென்னை மாநகரின்
பிரதான பகுதிகளைக் கடந்து வங்கக் கடலில் சங்கமமாகும் இந்த கூவம் ஒரு பக்கம்
என்றால், அதற்குப் போட்டியாக நகரில் திரும்பிய பக்கமெல்லாம் மினி
கூவங்கள். அனிச்சையாகக்கூட மூக்கை மூடாத அளவுக்கு பழகிவிட்டது
சென்னைவாசிகளுக்கு.
1978-ல் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம்
உருவாக்கப்பட்டபோது, சென்னையின் கழிவுநீர் மேலாண்மைக்கான திட்டக் கொள்கை
(மாஸ்டர் பிளான்) வகுக்கப்பட்டது. அடுத்த 30 ஆண்டுகள் அதாவது 2008-ல்
சென்னையின் மக்கள்தொகை என்னவாக இருக்கும் என கணக்கிட்டு, திட்டங்கள்
வகுக்கப்பட்டன. பல பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய்கள்
இப்போது வரை மாற்றப்படாமல் உள்ளன.
நாடு சுதந்திரம் அடையும் முன்பு சென்னையின் மக்கள்தொகை 7 லட்சம். இப்போது
70 லட்சத்துக்கு மேல். இதற்கேற்ப, கழிவுநீர்க் கால்வாய் வசதி 10 மடங்கு
அதிகரித்திருக்கிறதா? நிச்சயமாக இல்லை.
ஏமாற்றும் 'கட்டிடங்கள்'.. திண்டாடும் சிஎம்டிஏ
சென்னையில் தினமும் சுமார் 650 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தி
யாகிறது. இது சுமார் 12 சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம்
சுத்திகரிக்கப்பட்டு, குழாய் மூலம் கடலில் விடப்படுகிறது. மழைக்காலம்
மட்டுமின்றி சென்னையில் தினமும் சுமார் 25 சதவீதப் பகுதிகளில் ஏதாவது ஒரு
இடத்தில் வடிகால் திறப்புகளின் வழியே கழிவுநீர் வெளி யேறி, சாலையில்
தேங்கும் அவலம் ஏற்படுகிறது. 1978-ம் ஆண்டு முதல் சென்னையில் தரைக்கு கீழ்
புதை சாக்கடை குழாய்கள் பதித்துதான் பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன.
ஆனாலும், கழிவுநீர்த் தேக்கத்தை மட்டும் இன்னும் நிறுத்தவே முடியவில்லை.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், கழிவுநீர் அகற்று வாரியத்தை
கைகாட்டுகின்றனர். அவர்களைக் கேட்டால், மாநகராட்சியின் குப்பை அகற்றம்
மற்றும் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் திட்டமிடலைக் குறை கூறுகின்றனர்.
இதுகுறித்து கேட்டபோது, மூன்று துறைகளின் பொறியாளர்கள் சிலர்
தெரிவித்ததாவது:
கழிவுநீர் தேக்கத்துக்கும், குழாய் களில் கழிவுநீர் ஓட்டம் தடைபடுவதற்கும்
முழுக் காரணம் திடக்கழிவுகள். கழிவுநீர் குழாய்களை தூர்வாரும் ஊழியர்கள்,
சேறு உள்ளிட்ட திடக்கழிவுகளை, கால்வாய் திறப்பின் அருகிலேயே
குவிக்கின்றனர். இவை காய்ந்து, மண் துகளாகவும், குப்பைகளாகவும் மாறி
திரும்பவும் வடிகால்வாய்களை அடைத்துக்கொள்கின்றன. பல உணவகங்கள்,
விடுதிகளில் உணவுக் கழிவுகள், கட்டிடக் கழிவுகளை நேரடி யாகக் கழிவுநீர்க்
குழாய்க்குள் நீருடன் செலுத்திவிடுகின்றனர். இது மட்டுமின்றி, பிளாஸ்டிக்
பை, குழந்தைகள், பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் போன்றவையும் கால்வாய்களில்
விழுகின்றன.
கட்டிட அனுமதி வழங்குதல், புதிய கட்டிடங்களை ஆய்வு செய்வது ஆகியவற்றில்
பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ)மற்றும் மாநகராட்சி விதிமுறைகள்
முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால், முறைப்படி அனுமதி பெறாமல்
குடியிருப்புகள், கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அவற்றில் இருந்து
வெளியேறும் கழிவுநீரை, அதிகாரிகளுக்குத் தெரியாமல் நேரடியாக கழிவுநீர்க்
கால்வாயில் இணைத்துவிடுகின்றனர். இதனால் உண்மை நிலவரம் தெரியாமலேயே
சிஎம்டிஏ சார்பில் நகரமைப்புத் திட்டம் உருவாக்கப்படுகிறது.
மாநகராட்சி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், பெருநகர
வளர்ச்சிக் குழுமம் ஆகியவை ஒன்றுக்கொன்று இணைந்து, ஒரே துறையாக அல்லது
ஒருங்கிணைக் கப்பட்ட துறையாக செயல்படாத வரை, துல்லியமாக திட்டமிட்டு
கழிவுநீர் பிரச்சினைகளைப் போக்குவது கடினம்.
இவ்வாறு பொறியாளர்கள் கூறுகின்றனர்.
விரிவாகும் சென்னை.. 'சுருங்கும்' வடிகால் வசதி
1978-ல் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம்
உருவாக்கப்பட்டபோது, சென்னையின் கழிவுநீர் மேலாண்மைக்கான திட்டக் கொள்கை
(மாஸ்டர் பிளான்) வகுக்கப்பட்டது. அடுத்த 30 ஆண்டுகள் அதாவது 2008-ல்
சென்னையின் மக்கள்தொகை என்னவாக இருக்கும் என கணக்கிட்டு, திட்டங்கள்
வகுக்கப்பட்டன. பல பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய்கள்
இப்போது வரை மாற்றப்படாமல் உள்ளன.
70 லட்சம் மக்கள் கொண்ட சென்னையில் 5,86,359 குடியிருப்புகளுக்கு மட்டுமே
கழிவுநீர் வசதி உள்ளது. இன்னும் 15 சதவீத மக்களுக்கு கழிவுநீர் குழாய்களை
அமைத்து தரவில்லை என்று வாரியமே ஒப்புக் கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பட்ட பிறகு, சென்னை குடிநீர் மற்றும்
கழிவுநீர் அகற்று வாரியத்தின் எல்லையும் விரிவடைந்துவிட்டது. 21 லட்சம்
பேர் புதிதாக மாநகராட்சி எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால்,
அதற்கேற்ற கழிவுநீர் வசதி அமைத்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
விரிவாக்கம் செய்வதற்கு முன்பு 2010-ல், 2,670 கி.மீ. நீளத்துக்கு இருந்த
கழிவுநீர் குழாய்களின் நீளம், 2014-ல் 3,640 கி.மீ. என உயர்ந்துள்ளது.
2010-ல் 196 ஆக இருந்த கழிவுநீர் அகற்று நிலையங்கள் எண்ணிக்கை 2014-ல் 219
ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1300 கோடியில்
2012-ல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவை முழுமையாக அமல்படுத்தப்படாமலே
2014 செப்டம்பரில் புதிதாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19
உள்ளாட்சிகளுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 23 உள்ளாட்சிகளுக்கும்
கடந்த செப்டம்பரில் கழிவுநீர் வசதி அமைக்க புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதில் திருவொற்றியூர், அம்பத்தூரில் கழிவுநீர் வசதிகள் உடனே அமைத்து
தரப்படும். மற்ற பகுதிகளில் மார்ச்சுக்குள் அமைக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டது. அவையும் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன.
மாநகர சாக்கடையாக மாறிவிட்ட கூவம், அடையாறு
திருவள்ளூர் மாவட்டம் கூவம் கிராமத்தில் இருந்து புறப்படும் கூவம் ஆறு
சென்னை மாநகரப் பகுதியில் அண்ணா நகர், அரும்பாக்கம், அமைந்த கரை, பழைய
மத்திய சிறை, நேப்பியர் பாலம் வழியாக கடலில் கலக்கிறது. இது 72 கி.மீ.
நீளம் கொண்டது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து புறப்படும் அடையாறு ஆறு நந்தம் பாக்கம்,
ஈக்காட்டுத்தாங்கல், ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம் பாலம், போட் கிளப்
வழியாக வங்கக்கடலில் கலக்கிறது. இது 42 கி.மீ. நீளம் கொண்டது. ஓட்டேரி
நல்லா, பக்கிங்ஹாம் கால்வாய்களும் சென்னைக்கான நீர்வழிப் போக்கிகளாக
இருந்தன. மக்கள்தொகை, தொழிற்சாலைகள் எண்ணிக்கை அதிகரிப்பால், வெளி
யேற்றப்படும் கழிவுநீர் அளவும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
சென்னையில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர், ஆறுகளில் திறந்து
விடப்படுகிறது. நாடு முழுவதும் முக்கிய நீர் ஆதாரங் களாக விளங்கும்
ஆறுகளில் ஓடும் நீரின் தன்மையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த
2002-2008 காலகட்டத்தில் தொடர்ந்து ஆய்வு செய்தது. தமிழகத்தில் 3 முக்கிய
ஆறுகள் மாசுபட்டிருப்பதாக அறிவித்தது. அதில் முதல் 2 இடங்களை
பிடித்திருப்பது சென்னையின் அடையாளமாக மாறி வரும் துர்நாற்ற நதிகளான கூவம்
மற்றும் அடையாறு!
நீரின் தன்மையை அறியும் ரசாயன சோதனையான பிஓடி சோதனையின்படி, சுத்தமான 1
லிட்டர் நீரில் 1 மி.கி. அளவைவிட குறைவாகவே மாசு இருக்கும். 8 மி.கி.
வரையிலான மாசு, அனுமதிக்கப்பட்ட அளவாக உள்ளது. அடையாறு ஆற்று நீரில் 43
மி.கி., கூவம் ஆற்று நீரில் 105 மி.கி. இருப்பதாக மத்திய மாசுக்
கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 1200 மி.மீ. ஆகும். மழை
நீர் வெளியேற 1660 கி.மீ நீளம் கொண்ட மழைநீர் வடிகாலை மாநகராட்சி
அமைத்துள்ளது. இவற்றை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால்,
வடிகால் வழியாக செல்லாமல் பல்வேறு இடங்களிலும் மழைநீர் வழிந்தோடுகிறது.
ஆறுகளில் கலந்து வீணாக கடலில் கலக்கிறது.
கழிவுநீர் கலப்பதை தவிர்க்க கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில்
மொத்தம் 337 இடங்களில் ரூ.300 கோடி செலவில் திட்டம் நிறைவேற்ற 2012-ல்
அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இத்திட்டமும் முறையாக
செயல்படுத்தப்படவில்லை.
சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ''சென்னை நிலப்பரப்பு சம
தளமானது. கழிவுநீரையோ, குடிநீரையோ ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு
கொண்டு செல்ல, குழாய்களை 10 மீட்டர் வரை சரித்து அமைக்கவேண்டியுள்ளது.
அப்போது தான், குழாய்களில் நீர் பாய்ந்து செல்லும். குழாய்களை ஆழத்தில்
அமைப்பதால், பழுதைக் கண்டறிவது சவாலானது. அதை சீரமைப்பது மேலும் சவாலானது''
என்கின்றனர். பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப போதிய வடிகால் வசதிகளை
செய்துகொடுக்கும் அதே நேரத்தில், விதிமீறல் நிறுவனங்கள் மீதான பிடியை
இறுக்குவதிலும் அரசு இயந்திரங்கள் முனைப்பு காட்டவேண்டும். அப்படிச்
செய்வது மட்டுமே சென்னையின் கழிவுநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும்!
http://tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக