செவ்வாய், 16 டிசம்பர், 2014

அப்பா சாப்பிட்டீங்களா, போய் தூங்குங்க:(Jyothi Sing) நிர்பயாவை நினைவு கூர்ந்த தந்தை

டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து தாக்கப்பட்டதால் உயிர் இழந்த நிர்பயாவை அவரது பெற்றோர் நினைவு கூர்ந்தனர். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதில் பலியானவர் மாணவி நிர்பயா. அவருக்கு அந்த கொடுமை நடந்த பிறகு டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தும் பெண்களின் நிலை அப்படியே தான் உள்ளது என்று நிர்பயாவின் பெற்றோர் கருதுகிறார்கள். அப்பா சாப்பிட்டீங்களா, போய் தூங்குங்க: ஒன்இந்தியாவிடம் நிர்பயாவை நினைவு கூர்ந்த தந்தை இது குறித்து நிர்பயாவின் பெற்றோர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டி, கேள்வி: டிசம்பர் 16 சம்பவத்திற்கு பிறகு உங்கள் வாழ்வு மாறியிருக்கும். இதற்கு நீங்கள் யாரை குறைகூறுகிறீர்கள்? தாய்: நிர்பயாவுக்கு நடந்தது இந்த உலகில் வேறு எந்த பெண்ணுக்குமே நடக்கக் கூடாது. மக்கள் தற்போது விழித்துக் கொண்டு அரசை மாத்தி யோசிக்க வைத்துள்ளனர். விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. என் மகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
இந்த நிர்வாக முறையை நான் வெறுக்கிறேன்.
கேள்வி: இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளது பற்றி? தந்தை: என் மகளின் நிலைக்கு நிர்வாக முறை தான் காரணம். என் மகள் பலாத்காரம் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த குற்றவாளிகள் இன்னும் சிறையில் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகளால் குற்றவாளிகள் இன்னும் தூக்கிலிடப்படவில்லை. அறிவிப்பு மட்டும் தான் வெளியிடப்பட்டதே தவிர எதுவும் நடக்கவில்லை. சில காரணங்களுக்காக மக்கள் சட்டத்தை பார்த்து பயப்படுவதை நிறுத்திவிட்டனர். அதனால் தான் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கேள்வி: இது போன்ற சம்பவங்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்று நினைக்கிறீர்கள்? தாய்: மக்கள் சட்டத்திற்கு அஞ்சும் வரை இது தொடரத் தான் செய்யும்.
பெண்களை தாக்கினால் சட்டம் தங்களை தண்டிக்கும் என்பதை மக்கள் உணரும் வரை இது நடக்கத் தான் செய்யும். தண்டனை கடுமையாக இருந்தால் தான் பெண்களை பலாத்காரம் செய்யும் முன்பு பயம் ஏற்படும். என்ன செய்தாலும் தங்களுக்கு எதுவும் நடந்துவிடாது என்ற தைரியத்தில் தான் பாலியல் குற்றவாளிகள் உள்ளனர்.

கேள்வி: நிர்பயாவை தாக்கியவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? தாய்: தண்டனை அறிவித்தது என்னவோ உண்மை தான். ஆனால் அவர்கள் இன்னும் அரசு செலவில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சட்டம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள் என்ற செய்தியை கேட்கும்போது தான் என் மகளுக்கு நீதி கிடைக்கும்.

கேள்வி: நிர்பயா சம்பவத்தை அடுத்து பெற்றோர்கள் தங்கள் மகள்களை டெல்லிக்கு அனுப்ப அஞ்சுகிறார்கள். அது பற்றி? தந்தை: நிர்பயாவுக்கு நடந்ததை பார்த்து நானே பயந்துவிட்டேன். ஆனால் அரசு தான் எனக்கு நம்பிக்கை அளித்தது. டெல்லியில் அதிகரித்து வரும் பலாத்கார சம்பவங்களால் எந்த ஒரு தந்தையும் தங்களின் மகளை அங்கு அனுப்ப பயப்படத் தான் செய்வார்கள்.

கேள்வி: பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் தவிர்த்து அவர்களின் குடும்பத்தாரும் அவதிப்படுகிறார்கள் என்பதை நம்புகிறீர்களா? தந்தை: பெண் பலாத்காரம் செய்யப்படும்போதிலும் அந்த வலியை அவரது குடும்பமே தாங்குகிறது. பலாத்காரத்தை அடுத்து நடக்கும் போலீஸ் விசாரணை தான் குடும்பத்தாரை அவதிப்பட வைக்கிறது. வழக்கு நீதிமன்றத்திற்கு செல்கையில் வழக்கறிஞரின் கேள்விகள் பெண்ணின் மனதை பாதிக்கிறது. எனவே ஒரு பெண் பல்வேறு இடங்களில் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.

கேள்வி: சமூகத்தின் இந்த குறுகிய புத்தியை மாற்ற என்ன செய்யலாம்? தந்தை: மக்களுக்கு அவர்களின் குறுகிய புத்தியை உணர வைக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தேவை.

கேள்வி: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் போலீசார் எவ்வளவு பொறுப்புடன் செயல்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? தந்தை: பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு போலீசார் பொறுப்பல்ல. அவர்கள் தங்களின் கடமையை செய்கிறார்கள். நீதிமன்றங்கள் தான் வழக்கை இழுத்து நேரத்தை வீணடிக்கின்றன. தாமதமாக வழங்கப்படும் நீதி குற்றவாளிகளுக்கு பயத்தை அளிக்காது.

கேள்வி: ஒரு பெண் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? தந்தை: சேலை, சுடிதார் அணியும் பெண்களும் கூட பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். பெண்களின் உடையால் தான் அவர்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்பதை நான் ஏற்க மாட்டேன். மக்களின் குறுகிய புத்தி தான் காரணம்.

கேள்வி: நிர்பயா பற்றி நீங்கள் அதிகம் நினைப்பது? தந்தை: கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் நிர்பயா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது நான் அவருக்காக கேக் வாங்கிச் சென்று கதவுக்கு வெளியே நின்றேன். அவர் என்னை பார்த்துவிட்டு உள்ளே வருமாறு சைகை செய்தார். மிக மெல்லிய குரலில், அப்பா சாப்பிட்டீங்களா, மிகவும் சோர்வாக இருக்குமே. தயவு செய்து போய் தூங்குங்கள் என்றார். இதை கூறிவிட்டு நிர்பயா தூங்கிவிட்டார், அதன் பிறகு அவர் கண்விழிக்கவே இல்லை. இதை நானே நினைத்தாலும் மறக்க முடியாது. டிசம்பர் 29ம் தேதி அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: