திங்கள், 15 டிசம்பர், 2014

பிராமணர்கள் Victimised சமுகமாம்! அப்ப தலித்கள்? சூத்திரர்கள் ? பஞ்சமர்கள் ? மனுஷபுத்த்ரன் சாடல்!

தமிழ் நாட்டில் பிராமண துவேஷம் பற்றிய விவாதம் 2014 ல் மீண்டும் எழுப்பப்படுவது தற்செயலான விஷயம் அல்ல. திராவிட இயக்க அரசியலை தமிழகத்தில் காலி செய்வதற்கு செய்யப்படும் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று. மேலும் பிராமணர்களை அரசியல் ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் வலுவாக ஒருங்கிணைப்பதும் தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றுவதும் ஒன்றோடொன்று தொடர்புடைய நிகழ்வுகள். அதனால்தன் பிராமணர்களை Victimised சமூகமாக சித்தரிக்கும் இதுபோன்ற முயற்சிகள் திடீரெனெ முன்னிறுத்தப்படுகின்றன. ஜெயமோகன் தனது சொந்த அனுபவங்கள் சிலவற்றின் வழியே பிராமணர்கள் மற்றவர்களால் துன்புறுத்தப்ப்படுகிறார்கள் என்ற சித்திரத்தை எழுப்ப முயற்சிக்கிறார். ஜெயமோகன் மிகத்திறமையான ஒரு கதைசொல்லி என்ற மதிப்பு எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் சமூகவியல் தொடர்பான தனது தர்க்கங்களில் அவர் நுழைக்கும் புனைவுகளை வைத்துக்கொண்டு எப்படி இவ்வளவு பேர் இவ்வளவு சீரியஸாக விவாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. சமூக ஆய்வியல் நோக்கில் இந்த அனுபவப் புனைவுகளுக்கு ஏதாவது அர்த்தமோ ஆதாரமோ இருக்கிறதா? நாளைக்கு வேறொரு எழுத்தாளர் ‘ ஒரு பிரமாணர் என்னை சாதி வெறியால் சவுக்கால் அடித்தார் ‘ என்று சொன்னால் அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பிராமணர்கள் அனைவரையும் பற்றி நாம் ஒரு பொது முடிவுக்கு வந்துவிடுவோமா? தனிபட்ட அனுபவங்களை ஒட்டுமொத்த சமூக எதார்த்தமாக விரிப்பது கேலிக்கூத்தானதாகும்
தமிழகத்தில் பிராமண ஏதிர்ப்பு என்பதை எப்போது திராவிட இயக்கம் மைய நீரோட்ட அரசியலுக்கு வந்துவிட்டதோ அப்போதே அது கைவிட்டுவிட்டது. திராவிட கட்சிகளின் அரசியல் மேடைகளில் அந்தப் பேச்சுகள ஒலித்த்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. பண்பாட்டுத் தளத்தில் பிராமணர்கள் இன்றும் மேல்நிலையான அதிகாரத்தைகொண்டவர்களாகவே இருக்கிறார்கள். பிராமணர்களின் இந்த பண்பாட்டு மேல் நிலையை பிற சாதியினர் உளவியல் ரீதியாக இன்றும் ஏற்றுகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

என் சிறுவயதில் என் வீட்டுக்கு வரும் நண்பர்களில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களையும் பிராமணரல்லாத சமூக நண்பர்களையும் வீட்டில் இருப்பவர்கள் அணுகும் விதத்தில் ஒரு வித்தியாசத்தை பார்த்திருக்கிறேன். சமூக அந்தஸ்தில் தொடங்கி சடங்கு சம்பிரதாயங்கள் வரை ‘ ஐயர்’ களுக்கு உள்ள மதிப்பு எந்தவிதத்தில் இன்றும் பாழபட்டு விடவில்லை. அவர்களிடம்தான் உயர்ந்த சங்கீதம் இருக்கிறது, அவர்களிடம்தான் சுத்தம் இருக்கிறது, அவர்களிடதான் ஞானம் இருக்கிறது, அவர்கள்தான் கடவுளிடம் தங்களை அழைத்துச் செல்லும் ஏஜெண்ட்டுகள் என்றெல்லாம் இன்றும் பெரும்பாலான பிரமாணரல்லாத தமிழர்கள் உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எங்கே பிராமணர்கள் அவமதிக்கப்பட்டார்கள்?
இந்த சமூகத்தில் தலித்துகள், பிராமணர்கள் உட்பட எல்லா சாதியினரிடமும் அடைந்த இழிவில் கோடியில் ஒரு பங்கையேனும் பிராமணர்கள் அனுபவித்திருப்பார்களா? ஏன் இந்த மனசாட்சியற்ற பேச்சு?

இடைநிலை சாதிகளின் சாதி வெறி என்பது நிலவுடமை அமைப்போடு தொடர்புடைய விஷயம். யாரிடமெல்லாம் நில அதிகாரம் இருக்கிறதோ யாரெல்லாம் சமூகக் குழுக்களாக சேர்ந்து வாழ முடிகிறதோ அவர்கள் தஙக்ள் சாதி வெறியை தீவிரமாக அமுல்படுத்துகிறார்கள். இந்த நில அதிகாரம் சாதி அதிகாரமாக மாறுவது இடை நிலை சாதிகளில் மட்டுமல்ல, தாழ்த்தபட்ட சமூகத்தில் சில பிரிவுகளிலும் உண்டு என்பதுதான் எதார்த்தம். பிராமணர்கள் நில அதிகாரத்தை விட்டு வெளியேறி நவீன மயமாக்கல் சார்ந்த புதிய அதிகார மையங்களை நோக்கி நகரும்போது அவர்கள் தங்கள் சாதிய பிடிமானத்தை தளrத்திக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். அப்படி தளர்த்திக்கொள்ளாவிட்டால் நவீன அதிகார மையங்களுக்குள் அவர்கள் தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ள இயலாது. அதனால்தான் சாதி வெறியில் அவர்கள் மற்ற இடைநிலை சாதிகளை விட நீக்குப்போக்கான மென் அணுகுமுறை கொண்டவர்களாக காட்சியளிக்கிறார்கள். இது சிந்தனை மாற்றம் அல்ல. சர்வைவலுக்கான சமரசம்.
பிரச்சினை எளிமையானது. பிராமணர்கள் இட ஒதுக்கீடு தங்களுக்கு ஏறடுத்திய உளவியல் காயத்தை இன்னும் ஆற்றிகொள்ள இயலவில்லை. அதை வெளிபடையாக சொல்ல முடியாமல் எங்களை வாழவிடாமல் துரத்துகிறார்கள் என்றெல்லாம் கண்ணீர் சிந்துகிறார்கள். புதிய பொருளாதார சூழலில் பிராமணர்xபிராமணர் அல்லாதவர் என்ற எதிர்நிலைக்கு எந்த அர்த்தமும் இல்லை. அது இப்போது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே திட்டமிட்டு உருவாக்கப்படும் ஒரு பேச்சு.
ஜெயலலிதா ஒரு குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி இழந்ததும் பிராமணர்களுக்கு எதிரான வன்முறை குறித்த பேச்சுக்கள் துவங்குவதில் ஒரு உளவியல் பின்புலம் உள்ளது. அந்த வகையில் மட்டுமே பிராமணர்கள் அதிகாரத்தை இழந்தார்கள் என்று சொல்வதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது.

”திராவிட இயக்க அரசியலை தமிழகத்தில் காலி செய்வதற்கு செய்யப்படும் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று. இந்த ஒரு காரணத்துக்காகவே இந்த முயற்சியை கைவிட கூடாது என்று தோன்றுகிறது!

கருத்துகள் இல்லை: