புதுச்சேரி, டிச.17– மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சகோதரிகள் அருணா பிரசாத், ராஜஸ்ரீபிரசாத், நிவேதிதா பிரசாத், ஜெயஸ்ரீபிரசாத், ஹேமலதா பிரசாத். இவர்கள் புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வருகின்றனர்.
குருசுகுப்பத்தில் உள்ள ஆசிரம குடியிருப்பில் தங்கியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரம நிர்வாகத்தினர் சிலர் தங்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக போலீசில் புகார் தெரிவித்தனர். பத்திரிகைகளுக்கும் நேரடியாக பேட்டி அளித்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து கோர்ட்டிற்கு சென்று வழக்கை பதிவு செய்ய உத்தரவு பெற்றனர்.
இதற்கிடையில் ஆசிரம விதிமுறைகளை மீறி போலீசில் புகார் அளித்ததால் 5 சகோதரிகளையும் குடியிருப்பில் இருந்து வெளியேற ஆசிரம நிர்வாகம் உத்தரவிட்டது.
ஆனால் குடியிருப்பில் இருந்து வெளியேற அவர்கள் மறுத்தனர். அதோடு ஆசிரம உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஆசிரம நிர்வாகத்துக்கு சாதமாக தீர்ப்பளித்தது. இதையடுத்து சுப்ரீம்கோர்ட்டில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் 6 மாத கால அவகாசம் அளித்து குடியிருப்புகளை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.
தற்போது 6 மாதம் முடிந்த நிலையில் அவர்கள் காலி செய்யாமல் இருந்தனர். இதையடுத்து ஆசிரம நிர்வாகம் கோர்ட்டு உத்தரவைக்காட்டி போலீசார் மூலம் சகோதரிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இதையறிந்த சகோதரிகள் அனைவரும் இன்று காலை தங்களை வெளியேற்றினால், தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்தனர். 5 பேரில் இளைய சகோதரியான ஹேமலதா குடியிருப்பின் 4–வது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதிக்கப் போவதாக மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும், ஆசிரமவாசிகளும், பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டனர். தகவலறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவர்களை தடுக்க முயன்றனர்.
ஆனால் ஹேமலதா கீழே இறங்க மறுத்தார். இந்த நிலையில் சில நிருபர்கள் மாடிக்குச் சென்று பேட்டி எடுக்க முயன்றனர். போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் சஜீத் பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து மாடிக்கு சென்றார். பேட்டி அளிக்க ஹேமலதா முன்வந்தபோது அவரைப் பாதுகாப்பாக பிடித்துக்கொண்டார். இதன்பின் பெண் போலீசார் விரைந்து வந்து அவரை கீழே அழைத்து வந்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவைக் காட்டி அவர்கள் வெளியேற வேண்டும் என போலீசார் கூறினர்.
ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 5 சகோதரிகளையும் ஜீப்பில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக