சனி, 20 டிசம்பர், 2014

விகடன் குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் மறைவு !

 விகடன் குழும நிறுவனங்களின் சேர்மன் திரு எஸ்.பாலசுப்ரமணியன் (79), இன்று 19.12.2014 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு காலமானார். சிறிதுகாலமாக உடல் நலிவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், மாரடைப்பால் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்த் திரையுலகிலும், பத்திரிகையுலகிலும் முடிசூடா சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த திரு எஸ்.எஸ். வாசன் அவர்களின் தவப்புதல்வனான திரு எஸ்.பாலசுப்ரமணியன், தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் வகித்து வந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். ஆனந்த விகடனை தமது சீரிய சிந்தனையாலும் நுட்பமான செயல்திறனாலும் இன்னும் இன்னும் வளர்த்து, மேலே உயரே உயர்த்தி தமிழ்ப் பத்திரிகையுலகில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக உச்சம் தொடவைத்தவர் ’எம்.டி.’ என்றும் ‘சேர்மன்’ என்றும் அன்புடன் அழைக்கப்படும் திரு எஸ்.பாலசுப்ரமணியன், தன் அப்பாவைப் போன்று சினிமா உலகிலும் நுழைந்து, வெற்றிப் படங்களை இயக்கியவர். பிறகு, இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்பாமல், ஆனந்த விகடன் மீது மட்டுமே தன் அத்தனை கவனத்தையும் செலுத்தியவர்.


50 ஆண்டு கால தமிழ் இதழியலின் பிதாமகனாகத் திகழ்ந்த திரு எஸ்.பாலசுப்ரமணியன், தமிழ்ப் பத்திரிகையுலகுக்கு செய்த பங்களிப்புகள் ஈடு இணையற்றவை. புலனாய்வு இதழியலின் முன்னோடியான 'ஜூனியர் விகடன்' பத்திரிகையும், ஊடகத் துறைக்குக் கொடையான மாணவப் பத்திரிகையாளர் திட்டமும் இவர் நனவாக்கிய நல்ல கனவுகள். சமூகநலக் காரியங்களுக்காக லட்சக்கணக்கான வாசகர்களை ஒன்று திரட்டி, நிறைய நல்ல விஷயங்களை நிகழ்த்திக் காட்டிய சமூக நல நிர்வாகி.

பாசத்துக்குரிய பண்பாளரை, மிகச்சிறந்த பத்திரிகையாளரை, எங்களின் வழிகாட்டியை இழந்து தவிக்கிறோம்.

அனைவரின் கவனத்துக்கு...

மருத்துவம் படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தன்னுடைய உடலை தானம் தரவேண்டும் என்பதே சேர்மனின் விருப்பம். அதற்கான பணிகள் நடக்கின்றன.
அதனால், வரும் திங்கள் கிழமை 22.12.2014 அன்று காலை 6 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் போயஸ் தோட்டத்து இல்லத்தில் வைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

முகவரி: ஏ1 டிவோலி அப்பார்ட்மென்ட், எண். 11, கஸ்தூரி எஸ்டேட், போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை-18
- விகடன் குழும ஊழியர்கள்

விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு! -செய்திக் குறிப்பு


1935-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிறந்த இவர், தனது 21-வது வயதில், 1956-ம் ஆண்டு பத்திரிகைத் துறையில் பொறுப்பேற்றார். விகடன் இணை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்றவர், பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தினார்.

தமிழ் இதழியலின், முதல் அரசியல், சமூக, புலனாய்வுப் பத்திரிகையான ஜூனியர் விகடனைத் தொடங்கியவர் இவர்தான். மிகத் துணிச்சலான கட்டுரைகளைத் தாங்கி வந்து, ஜூனியர் விகடன் இதழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏராளமான புலனாய்வு இதழ்கள் வெளிவருவதற்கு முன்னோடியாக விளங்குகிறது.

1987-ம் ஆண்டு ஆனந்த விகடனின் அட்டையில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்காக, அன்றைய எம்.ஜி.ஆர். அரசு இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. தன்னைக் கைதுசெய்தது தவறு என வழக்கு தொடுத்து வெற்றிபெற்று, 1000 ரூபாய் அபராதத் தொகையையும் பெற்றார்.

பத்திரிகைகள் சிகரெட் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சட்டம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘விகடனில் சிகரெட் விளம்பரங்களை வெளியிடுவது இல்லை’ எனக் கொள்கை முடிவு எடுத்து உறுதியுடன் அமல்படுத்தினார். இன்றளவும் அந்தக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழ் இதழியலில் மிகப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’, விகடன் நிறுவனர் அமரர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களால் துவங்கப்பட்டது. எனினும், அதற்கு முழுமையான வடிவம் கொடுத்து திட்டத்தை மேலும் மெருகூட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான முயற்சியாக இப்போதும் பேசப்படும் ‘முத்திரைக் கதைகள்’ திட்டத்தைத் துவங்கியவர் இவர்தான். ஜெயகாந்தன், சுஜாதா உள்ளிட்ட மிகப் பிரபலமான எழுத்தாளர்களுக்கு முதல் களம் அமைத்துத் தந்தவர். திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவித்த பண்பாளர். இவரும் ஓர் எழுத்தாளரே. ‘சேவற்கொடியோன்’ என்ற புனைப்பெயரில் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

தந்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களின் வழியைப் பின்பற்றி திரைத்துறையிலும் முத்திரை பதித்த திரு எஸ்.பாலசுப்ரமணியன் தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, முத்துராமன் நடித்த ‘எல்லோரும் நல்லவரே’ போன்றவை இவர் இயக்கிய சில படங்களாகும்.

விவசாயத்தின் மீதும், பறவைகள் மீதும் தீராத காதல்கொண்ட இவர், ஏராளமான அரியவகை வெளிநாட்டுப் பறவைகளை வளர்த்து வந்தார்.

இவருக்கு ஆறு மகள்கள், ஒரு மகன். இவரது மகன் பா.சீனிவாசன் தற்போது விகடன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். vikatan.com

கருத்துகள் இல்லை: