திங்கள், 15 டிசம்பர், 2014

சொத்துகுவிப்பு வழக்கு அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக தடை கேட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முதலில் அரசு வக்கீலாக ஆஜரானவர் ஆச்சாரியா. பிறகு பவானிசிங் அந்த பதவிக்கு வந்தார். இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27ம்தேதி, தீர்ப்பளித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.  இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை, கர்நாடக ஹைகோர்ட்டில் நடைபெற்றது. அதில் அரசு தரப்பு வக்கீலாக பவானிசிங் ஆஜரானார். வாதத்தின் இறுதியில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்க தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பவானிசிங் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும் ஹைகோர்ட் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் வக்கீல் மணி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக செயல்படுவதற்கு மட்டுமே பவானிசிங்கிற்கு அனுமதியுண்டு. அவர் உயர் நீதிமன்றத்திலும் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடுவதற்கு அனுமதி கிடையாது. எனவே வேறு அரசு வக்கீலை நியமிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை மேற்கொண்டு விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: