திங்கள், 15 டிசம்பர், 2014

கீதை புனித நூல் அல்ல - பூணூல் நூல்! இந்துஸ்தானத்தைக் கட்ட நினைத்தால்......

இந்து சட்டத்திலேயே அறம் என்றால் பிராமணனுக்கு அன்னதானம் வழங்குவது என்று இருந்தது.கடமையைச் செய் என்றால், ஜாதிக்கான செயல் என்று கூறியுள்ளது. ஜாதி தர்மம் என்கிறது கீதை. பகுத்தறிவுக்கு முரண்பாடான நூல், கொலைக் குற்றத்தை நியாயப்படுத்தும் நூல் கீதை. தர்மம் கெட்டு அதர்மம் தலை தூக்கும்போது நான் அவதாரம் எடுப்பேன் என்று கிருஷ்ணன் சொன்னாராம்; அது புருடா? மதவாதம் தலை தூக்கும் பொழுது பெரியார் திடலில் தமிழர் தலைவர் தலைமை தாங்கி மக்களை வழி நடத்துவார் என்பதுதான் உண்மை 
சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (12.12.2014) 7 மணி முதல் இரவு 10 மணி வரை திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டம் என்றும் நினைவில் நிற்கக் கூடியது.
மன்றம் நிரம்பி வழிந்தது மட்டுமல்ல - பால்கனியிலும் அமர்ந்தனர். அலை அலையாக வந்து கொண்டிருந்தனர். நாற்காலிகளை போட்ட வண்ணமே இருந்தனர் தோழர்கள்.
புதுமுகங்களை ஏராளம் பார்க்க முடிந்தது - இளைஞர்கள் எதிர்பார்ப்புடன் வந்ததைக் காண முடிந்தது.
இந்திய நாடாளுமன்றத்தையே உலுக்கிக் கொண்டிருந்த பிரச்சினை; இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் - டில்லியிலே பேசினார் - பகவத் கீதையை இந்திய தேசியப் புனித நூலாக அறிவிக்க இருக்கிறோம்! என்று சொன்னாலும் சொன்னார்.
நாடாளுமன்றத்தில் பெரும் பூகம்பத்தைஏற்படுத்தியது. மக்கள் குரல் என்ற எழுச்சி எரிமலை சென்னைப் பெரியார் திடலிலிருந்து வெடித்தது - அதுதான் நேற்றைய கூட்டம்.
திராவிடர் கழகம் கூட்டிய அந்தச் சிறப்புக் கூட்டத்தில் இடதுசாரி அமைப்புத் தலைவர்களும், திராவிட இயக்கத் தலைவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முரசாக ஒலிக்கும் எழுச்சித் தமிழரும் பங்கேற்கின்றனர் என்றதும் நீண்ட இடைவெளிக்குப்பின் சேர வேண்டியவர்கள்  ஒரே மேடையில் - இதையல்லவா நாங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம் என்ற உணர்ச்சியோடு தமிழர்கள் அலை அலையாக வந்தார்கள் - கூட்டம் முடிந்தும்கூட மக்கள் கழகத் தலைவரைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சி யையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள்;  இன்னும் இந்த மேடைக்கு வர வேண்டியவர்கள் - இருக்கிறார்கள் அவர்களையும் ஒன்று சேருங்கள்.
அது திராவிடர் கழகத்தால்தான் முடியும், உங்களால் தான் முடியும். இத்தகு கூட்டங்களை மற்ற மற்ற மாவட் டங்களுக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுங்கள் என்று அன்பு வேண்டுகோள் வைத்தனர்.
கூட்டம் முடிந்து சென்ற பலரும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள்.
தர்மம் கெட்டு அதர்மம் தலை தூக்கும்போது நான் அவதாரம் எடுப்பேன் என்று கிருஷ்ணன் சொன்னாராம்; அது புருடா? மதவாதம் தலை தூக்கும் பொழுது பெரியார் திடலில் தமிழர் தலைவர் தலைமை தாங்கி மக்களை வழி நடத்துவார் என்பதுதான் உண்மை  - அதுதான் நேற்று நடந்தது. (வரும் 20ஆம் தேதி தஞ்சையிலும் இதே தலைப்பில் கூட்டம் நடைபெற உள்ளது.)
இது  தந்தை பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண். இங்கு ஆரியம் விளையாட நினைத்தால், மண்ணும் மண்ணடி வேரோடும் ஒழிக்கப்படும் என்பது நினை விருக்கட்டும்! நீறு பூத்த நெருப்பு என்பதை மறக்க வேண்டாம் என்று சொல்லாமல் சொன்னது நேற்றையக் கூட்டம்.
சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ராதா. மன்றத்தில் நேற்று (12.12.2014) மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? எனும் தலைப்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் வரவேற்றார். புத்த மார்க்கத்தின் எழுச்சியைத் தொடர்ந்து அதனை முறியடிக்கக் கற்பிக்கப்பட்டதுதான் கிருஷ்ண அவதாரம் என்று அவர் தன் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் கருத்துரை
9.30 மணிக்கு முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. இன்னும் 15 மணித்துளிகளே உள்ளன. நான் எப்போதுமே கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டவன். உங்களின் அனுமதியுடன் மேலும் 15 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறேன்.
கனடாவில் நம்முடைய திருமாவளவன் ஈழத்தமிழர் களிடம் யார் உண்மையான நண்பர்கள் என்பதை எடுத்துச்சொல்லி உள்ளார். விடுதலைப் பேரொளி என்ற சுவராஜ் புனித நூல் என்று கூறினாலும் மோடி மறுக்கவில்லை. அத்வானி பேசும்போது வெள்ளைக்காரனை வெளியேற்றிவிட்டோம். அவனுக்கு முன் வந்த முகலாயர்கள் இங்கேயே தங்கிவிட்டனர் என்றார்.
இராபர்ட் கிளைவ் வந்தபோது உங்கள் கண்ணன் எங்கே போனான்?  ஒரு அர்ச்சுனன் வேண்டாம். உன் வயிற்றில் கண்ணன் அவதரிக்கவில்லையே ஏன்?
சூத்திரர்கள் போராடிய காரணத்தால் சுதந்திரம் பெற்றோம். இசுரேலிடம் ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்? 7 சக்கரம் குதிரைகள், வில் அம்பு கொடுத்து உபதேசம் செய்ய வேண்டியதுதானே?
47 வருடங்களாக பாகிஸ்தான் இந்தியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவருகிறான். கண்ணன் என்ன செய்கிறான்? அப்போதும் அதிகாரம் இருந்த இடத்தில் இருந்தவன் நீதானே?
வெறும் ஆட்சி மாற்றத்துக்காக மற்றவர்கள் எதிர்க்கிறார்கள். சித்தாந்தப்படி கொள்கைப்படி எதிர்ப்பவர்கள் வெளியில் இருக்கிறோம். நம்மை நுழையவிடாமல் தடுப்பதற்கு தனியார் மயம். கங்கையை சுத்தம் செய்ய ஆயிரம் கோடி, இந்திய நதிகளை இணைக்க 100 கோடி.  ரூபாயாம்! கங்கை யாரால் தூய்மை கெடுகிறது? பண்டாரங்கள் ஆண்டால் சங்குதான்.
10 பேரோடு கங்கையில் படகில் சென்றோம். அப்போது படகில்லாமல் கட்டப்பட்டு மிதந்து சென்ற சிலவற்றைக் கண்டோம், என்ன என்று கேட்டோம். கங்கையில் வீசப்பட்ட பிணம் என்றார்கள். கங்கோத்திரியிலிருந்து கங்கையின் பாதைகளில் பிணத்தைக் கொளுத்தாதே என்று சொல்லிப்பார். தொகாடியா சூலத்தை எடுத்துக்கொண்டு வருவார். மனித மலம் அள்ளும் தொழிலில் பிறவி பேதம். உச்ச ஜாதியினர் அந்தப் பணியை செய்யுங்கள். சமஸ்கிருதம் பிராமணர்கள் மட்டும் படிக்கட்டும். மருத்துவம் படிக்கக்கூடாது. தேவ பாஷை நீ படி!
எழ வேண்டிய நேரம் வந்துவிட்டது. நேரம் கடந்து விட்டது புல்லர்களை வீழ்த்த. நம்மை அடிமை யாக்கும் தத்துவம் பகவத்கீதை!
விஞ்ஞானத்தில் மனித இனம் முன்னேறுகிறது. நவீன முலாம் பூசி அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். முன்னோர்களைப்போல இப்போது நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை. புனிதப்போரில் ஒன்றிணைந்து செயல்படுவோம். தொடர்வோம். இவ்வாறு தா.பாண்டியன் தம் பேச்சில் குறிப்பிட்டார்.
தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுததைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும் போது குறிப்பிட்டடதாவது:
ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பது திராவிடர் கழகம். தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை மிகச்சிறப்பாக செய்து வரும் தமிழர் தலைவர் அவர்கள் பெரியாரைக் காட்டிலும் நீண்டகாலம் வாழவேண்டும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தோமோ அதை யெல்லாம் செய்கிறார்கள். எச்சரிக்கையாக இருந்து எதிர்கொள்ள வேண்டும். இராமாயணம், மகாபாரதம் கற்பனை, உண்மை அல்ல என்பது மோடிக்கும், சுஷ்மா சுவராஜூக்கும் தெரியும். ராமன் பாலம் கட்டப்படவில்லை என்பதும் தெரியும். மக்களின் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு செய்துவருகிறார்கள். எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.
ஜாதி, பெண், மதம், புனிதம் என்பவைகளை உணர்ச்சிபூர்வ விவாதமாக்கி ஆளுமை செய்கிறார்கள். பவுத்தத்துக்கு எதிர்ப்பாக இந்து மதம் செயல்பட்டது. பவுத்தம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. மகாயானத்தில் புத்தரை விஷ்ணு அவதாரம் என்று கூறிவிட்டார்கள். திருப்பதியில் நாமத்தை எடுத்துவிட்டால் அங்கே புத்தர் தெரிவார். புத்த விகாரங்களை வைணவ கோயில்களாக ஆக்கிவிட்டார்கள்.
மதமும், அரசியலும் இரட்டைக்குழந்தைகளாக உள்ளன.
இந்தியாவை இந்துஸ்தான் என்று அறிவிப்பதே ஆர்.எஸ்.எஸ். திட்டம்.தாழ்த்தப்பட்டவர்களைக் குறிவைத்து அம்பேத்கர் ஜெயந்தி என்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
-இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.
நிறைவுரையாக தலைமை உரையை தமிழர் தலைவர் ஆசிரியர் நிகழ்த்தினார்.
கண்டனக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
சமூகநீதிப் பேரவை பேராயர் எஸ்றா.சற்குணம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன்,  செயலாளர் சத்தியநாராயணசிங், கு.தென்னவன்,  மேனாள் சட்டமன்ற உறுப்பினர் காங்கிரசு பலராமன், மத்திய அரசின் மேனாள் மருத்துவத் தேர்வுத்துறைத் தலைவர் மருத்துவர் ஏ.இராஜசேகரன், பிற்படுத்தப்பட்டோர் பணியாளர்கள் நலச்சங்கப் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, பேராசிரியர் பெரியாரடியான், வடக்கு மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி,  செயலாளர் பேராசிரியர் மங்களமுருகேசன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, பத்திரிகையாளர் குமரேசன், பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், திராவிடர் இயக்க எழுத்தாளர் மஞ்சை வசந்தன், வழக்குரைஞர் வீரமர்த்தினி, சைதை தென்றல், பேராசிரியர் இசையமுது, ஏழுகிணறு கதிரவன், செந்துறை இராசேந்திரன், சி.வெற்றிச்செல்வி, சி.காமராசு,  சென்னை மண்டல கழகச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், செயற்குழு உறுப்பினர் பார்வதி, பெரியார் களம் இறைவி, வடசென்னை மாவட்டத் தலைவர் திருவள்ளுவன், செயலாளர் மோகன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணை செயலாளர்கள் கோ.வீ.ராகவன், அரும்பாக்கம் தாமோதரன், மயிலை சேதுராமன், தரமணி மஞ்சுநாதன், மருத்துவர் க.வீரமுத்து, இராஜன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், பொழிசை கண்ணன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, உள்பட பலரும் கலந்துகொண்டனர். அரங்கமே மக்கள் கடலால் நிறைந்திருந்தது. கூட்ட முடிவில் மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி கூறினார்.

viduthalai.in/

கருத்துகள் இல்லை: