சனி, 29 அக்டோபர், 2011

மனித வெடிகுண்டு மலிவு விற்பனை!!பகீர் தகவல்


உயிரை எடுக்க ஆள் வேண்டுமா? மனித வெடிகுண்டு மலிவு விற்பனை!!Viruvirupu.com

காபுல், ஆப்கானிஸ்தான்: உளவு வட்டாரங்களில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் ஒன்று பகீர் ரகமானது. “மனித வெடிகுண்டுகள் விற்பனைக்கு” என்பதே பகீர் தகவலின் சுருக்கம். விரிவாகச் சொன்னால், “தற்கொலைத் தாக்குதல்களை நடாத்துவதற்காக ஆட்கள் தேவையா? உயிரை விடுவதற்கு ஆட்களை விலைக்குத் தருகிறோம்” என்ற பிசினஸ், ஆப்கானில் தொடங்கியுள்ளது!

விறுவிறுப்பு.காமுக்காக நாம் விசாரித்த ஆப்கான் தேசிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் இதை ஒப்புக் கொள்கிறார். “இது கடந்த சில மாதங்களாகவே ரகசியமாக நடைபெறுகின்றது என்ற சந்தேகம் எமக்கு இருந்தது. இப்போதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்கிறார் அவர்.
ஆப்கான் உளவுத்துறைக்கு கிடைத்த இன்பர்மேஷன் ஒன்றின்படி, ஜாஜி-மைடன் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை ஒரு ரெயிடு நடாத்தப்பட்டது. அப்போது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், தனது உயிரைக் கொடுத்து தற்கொலைத் தாக்குதல் நடாத்த தயாராக இருந்த 17 வயது நபர்.
உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடாத்தியபோது, இந்த நபருக்கு தீவிரவாத அமைப்புகள் பற்றிய எந்த அறிவும் கிடையாது என்பதைப் புரிந்து கொண்டார்கள் . தீவிரவாத அமைப்பினர் எதற்காக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதே இந்த 17 வயது நபருக்கு தெரிந்திருக்கவில்லை. யார்மீது யார் போர் தொடுத்துள்ளனர் என்றுகூட தெரியவில்லை
அப்படியிருந்தும், தீவிரவாத அமைப்பினரின் சார்பில் மனித வெடிகுண்டாக மாற ஏன் இந்த நபர் முன்வந்தார்? அதை விசாரித்த போதுதான் உண்மை வெளியானது.
பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் சீனியர் தளபதி ஒருவர், ஆப்கான் தீவிரவாத அமைப்பு ஒன்றுக்கு இந்த 17 வயது நபரை தற்கொலைப் போராளியாக விற்பனை செய்துள்ளார்! ஆப்கான் அமைப்பு, இந்த தற்கொலைப் போராளியை விலை கொடுத்து வாங்கியதன் நோக்கம், கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஆப்கான் ராணுவ அதிகாரி ஒருவரை தற்கொலைத் தாக்குதலில் கொல்வதற்காக!!
ஆப்கானிஸ்தானின் தேசிய உளவுத்துறையான என்.டி.எஸ் (The National Directorate of Security – NDS) நடாத்திய ரெயிடு இது. இதில் அகப்பட்டுக்கொண்ட ‘தற்கொலைப் போராளி’ பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்கான் கிழக்கில், பாக்தியா மாகாணத்தில் உள்ள ஜாஜி-மைடன் மாவட்டத்துக்கு இந்த 17 வயதான பாகிஸ்தான் பிரஜை எப்படி வந்து சேர்ந்தார்?
ஆப்கானில் தற்போது அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஹக்கானி குரூப்பைச் சேர்ந்த ஆட்களே இவரை பாகிஸ்தான் எல்லையில் இருந்து கடத்தி வந்துள்ளனர். எல்லைக்கு மறுபுறத்தில் வைத்து பாக். தலிபான்களின் குழு ஒன்று இவரை ஹக்கானி குரூப்பிடம் ஒப்படைத்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த 17 வயது நபரின் பெயரை ஹசன் என்று மாத்திரம் கூறுகின்றனர் ஆப்கான் உளவுத் துறையினர். ஹசன் தருவிக்கப்பட்டது, ஆப்கான் ராணுவத்தில் ‘அஸிசுல்லா’ என்ற சங்கேதப் பெயருடைய தளபதி ஒருவரைக் கொல்வதற்காக என்பது விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறி வைக்கப்பட்ட ‘அஸிசுல்லா’வின் நிஜப் பெயர் என்ன, ஆப்கான் ராணுவத்தில் அவரது பதவி என்ன என்பதுபோன்ற விஷயங்களை ஆப்கானிஸ்தானின் தேசிய உளவுத்துறையான என்.டி.எஸ் வெளியிடவில்லை. இந்த ஹசன் பாக்தியா மாகாணத்தில் வைத்து அகப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் செயற்படும் ஆப்கான ராணுவத் தளபதியாக அவர் இருக்கலாம்.
தற்போது சிக்கியுள்ள ஹசன், சுமார் ஒரு மாதத்துக்கு முன்னரே இப்பகுதிக்கு கடத்தி வரப்பட்டுள்ளார் என்று தெரிகின்றது. இந்த ஒரு மாத காலப்பகுதியில் ஹக்கானி குழுவினர், தற்கொலைத் தாக்குதலை நடாத்துவதற்கு கொடுக்கப்படும் பயிற்சிகளை அவருக்கு கொடுக்கத் தொடங்கியிருந்தனர் என்பதையும் தெரிந்து கொண்டுள்ளனர் ஆப்கான் உளவுத் துறையினர்.
உளவுத்துறை வட்டாரங்களில் “மனித வெடிகுண்டு விற்பனை” பற்றிய மேலதிக தகவல்கள் உள்ளன.
பாகிஸ்தான் தலிபானில் தளபதி ஹகிமுல்லா மேசுத்தின் தலைமையின் கீழ் இயங்கும் இரண்டாம் நிலைத் தளபதி ஒருவரே, ஹக்கானி குழுவினருக்கு தற்கொலைப் போராளிகளை விற்பனை செய்கிறார் என்று தெரிகிறது. 6 லட்சத்தில் இருந்து 8 லட்சம் பாகிஸ்தானிய ரூபா பணத்துக்கு இந்த விற்பனை நடைபெற்றுள்ளது (கிட்டத்தட்ட 7,000 டாலர்)
இவர்கள் குறிப்பிடும் தளபதி ஹகிமுல்லா மேசுத் என்பவர், டெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர். பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கு இந்த அமைப்பு உரிமை கோரியுள்ளது. இந்த அமைப்பின் தலைமைக்கு தெரிந்துதான் இப்படி ஒரு விற்பனை நடைபெறுகின்றதா, அல்லது கீழ்மட்ட தளபதி ஒருவர் சொந்தமாக இந்த வியாபாரத்தில் ஈடுபடுகிறாரா என்பது தெளிவாக இல்லை.
கிழக்கு ஆப்கானில், பாகிஸ்தான் – ஆப்கான் உறவுகள் ஏற்கனவே சீர்கெட்ட நிலையில் உள்ளன. கடந்த இரு வாரங்களாக, பாகிஸ்தான் எல்லையைக் கடந்து ஆப்கானுக்குள் வந்து தாக்குதல்கள் நடாத்தப்படுவது அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் எல்லையோடு இணைக்கப்பட்ட ஆப்கானின் பல பகுதிகள், எல்லை கடந்த தாக்குதல்களுக்கு எப்போதும் இலக்காக உள்ளன.
இந்த எல்லைப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு அவ்வளவாக பேணப்படுவதில்லை. சில பகுதிகள் முற்று முழுதாக தீவிரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளே தீவிரவாத அமைப்பினருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு ஆயுதங்களுடன் ஆப்கானுக்குள் அனுப்பி வைப்பதில், பாகிஸ்தானிய உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.க்கு பெரிய பங்கு இருப்பதாக நீண்ட காலமாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. (இந்திய எல்லைக்கு உள்ளேயும் தீவிரவாதிகளை அனுப்புவது ஐ.எஸ்.ஐ.தான் என்பது நீண்ட காலமாக இந்தியாவின் குற்றச்சாட்டு)
ஐ.எஸ்.ஐ. அதை மறுத்து வருவதும், மற்றொரு நீண்டகால நடைமுறை!
தற்கொலைப் போராளிகள் விற்பனை செய்யப்படும் விஷயத்திலும் ஐ.எஸ்.ஐ. தொடர்புகள் உள்ளனவா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்தப் பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.க்கு தெரியாமல் ஏதும் நடக்க முடியாது என்பது மாத்திரம் தெரியும்!
-காபுல், ஆப்கானிஸ்தானிலிருந்து ஃபரீஸ் சபாஸ்டாவின் குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: