வெள்ளி, 28 அக்டோபர், 2011

காணிப் பிரச்சினை வவுனியாவில் உண்ணாவிரத நாடகம்

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி சம்பந்தமான பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இந்தப் பிரச்சினையைப் பாவித்து குளிர்காய்வதற்கு வழக்கம் போல சில அரசியல் சக்திகளும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக ‘வெறும் வாயை மென்றவனுக்கு அவல் கிடைத்தது போல’, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையை வைத்து வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கிறது. இந்தப் பிரச்சினையை வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வேறு சில தமிழ் கட்சிகளும் வவுனியாவில் உண்ணாவிரத நாடகமொன்றையும் அரங்கேற்றியுள்ளன்.அடுத்த வருட முற்பகுதியில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படும் என அரச தரப்பிலிருந்து அறிவித்தல் வெளியாகியுள்ளதால், அதை மனதில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையில் தொடர்ந்தும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கும் என்பது நிச்சயம். தமிழ்க் கூட்டமைப்பு நடாத்தும் இந்த நாடகம் பார்த்து இரசிப்பதற்கு இரசனையாகத்தான் இருக்கும். ஆனால் அதனால் இறுதியில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை வரலாற்றை நன்கறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். ஒர் எடுத்துக்காட்டாக திரிகோணமலை மாவட்டத்தின் இன்றைய நிலையைக் குறிப்பிடலாம்.

திரிகோணமலை தமிழர்களின் பாரம்பரியப் பூமி, அதைச் சிங்களவர்கள் ஆக்கிரமிக்கிறார்கள், எனவே வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு என்று தனியரசு அமைக்கப்படும் போது, திரிகோணமலைதான் அதன் தலைநகராக இருக்கும் என தமிழரசுக்கட்சி ஜம்பமடித்து வந்தது. அதுவே சிங்களப் பேரினவாதிகளை உசுப்பிவிட்ட, அவர்கள் படிப்படியாக அந்த மாவட்டத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு, சேருவில என்ற புதிய தேர்தல் தொகுதியொன்றையும் உருவாக்கி, அங்கு முன்னர் இருந்த இன விகிதாசாரத்தையும் மாற்றியமைத்துவிட்டாகள்.

இப்படிச் சொல்வதால் தமிழ் மக்களுக்கு காணி சம்பந்தமான பிரச்சினைகள் எதுவும் இல்லையென்பது அதன் அர்த்தமல்ல. கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாகப் பின்பற்றி வரும் மலட்டுத்தனமான, வங்குரோத்தத்தனமான கொள்கைகளைச் சுட்டிக்காட்டவே, அதை இங்கு குறிப்பிட வேண்டி வந்தது.

ஒரு தேசிய இனத்தின் இருப்புக்கும் வாழ்வுக்கும் நிலம் என்பது அச்சாணியாகும். இலங்கைத் தமிழர்களுக்கும் அது பொருந்தும். இலங்கையில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமென்பது, இன்று நேற்று ஏற்பட்டதல்ல. சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த டி.எஸ். சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே அந்த வகையான குடியேற்ற முயற்சிகளை ஆரம்பித்து வைத்தது. அந்த இனவாத பிற்போக்கு ஐ.தே.கவுடனேயே தமிழ்த் தலைமைகள் அன்றிலிருந்து இன்றுவரை வெளிப்படையாகவும், இரகசியமாகவும் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன.

இங்கு நாங்கள் சிங்கள மக்கள் தாங்களாக விரும்பி தமிழ்ப் பகுதிகளில் குடியேறி வாழ்வதையோ, அதேபோல தமிழ் மக்கள் சிங்கள மக்களின் பகுதிகளில் வாழ்வதையோ திட்டமிட்ட குடியேற்றங்கள் என்று குறிப்பிடவில்லை. அப்படி வாழ்வது இன சௌஜன்யத்துக்கு நல்லதும்கூட. அப்படியில்லாமல் திட்டமிட்ட முறையில், அதுவும் அரச அனுசரணையுடன் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதேசங்களில் குடியேற்றங்களை மேற்கொண்டு, குறிப்பிட்ட ஒர் இனத்தின் தனித்துவத்தை அழிப்பதோ அல்லது அந்தப் பகுதியின் இன விகிதாசாரத்தை மாற்றியமைப்பதோ எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையின் ஆணிவேராக ஆரம்பத்திலிருந்தே நிலப்பிரச்சினை இருந்தும், தமிழ் கட்சிகள் அதைப் புரிந்து கொள்ளாது அல்லது இருட்டடிப்புச் செய்து, சுலபமாக இன வெறியையும் மொழி வெறியையும் மக்கள் மத்தியில் கிளறி, அதன் மூலம்  பாராளுமன்ற ஆசனங்களை வென்றெடுப்பதிலும், அதனால் கிடைக்கும் சுகபோகங்களை அனுபவிப்பதிலுமே கண்ணாய் இருந்தனர்.

இன்றும்கூட தமிழர்களின் நிலத்தை அரசாங்கம் அபகரித்து சிங்களவர்களுக்கு வழங்குகின்றது எனக் கூச்சல் போடுகின்றனரேயொழிய, அது எங்கு நடக்கின்றது, என்ன வகையாக நடைபெறுகின்றது, அது சம்பந்தமாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து பேசினார்களா என்ற விபரம் எதுவும் கிடையாது. கேட்டால் இந்தியாவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம், அமெரிக்காவுக்கு அறிவித்துள்ளோம், நீதிமன்றத்தில் வழக்குப் போடப் போகிறோம் என, வாய்ச்சவடால் மட்டும் அடித்துக் கொள்வார்கள்.

1950களில் அரசாங்கம் நாடு முழுவதும் குடியேற்றத் திட்டங்களை உருவாக்கி நிலமற்ற மக்களுக்குக் காணிகளை வழங்கிய போது, தமிழ் பகுதிகளில் அதைச் சரியாகப் பயன்படுத்தும்படி எந்தவொரு தமிழ்க் கட்சியும் மக்களுக்கு அறிவுறுத்தவில்லை. குடியேற்றத் திட்டங்கள் நிறைந்த கிளிநொச்சியை தனி மாவட்டமாக்கி, அங்குள்ள மக்களுக்கென தனியான நிர்வாகக் காரியாலயங்களை அங்கு அமைக்கும்படி, அப்பொழுது கிளிநொச்சி பட்டினசபைத் தலைவராக இருந்த வீ.ஆனந்தசங்கரியும், கம்யூனினிஸ்ட் கட்சியின் விவசாயிகள் இயக்கமும் தொடர்ச்சியாக வலியுறுத்திய போது, கிளிநொச்சியைத் தனி மாவட்டமாக்கினால், அங்கு சிங்களக் குடியேற்றம் வந்துவிடும் என தமிழரசுக்கட்சி பூச்சாண்டி காட்டி அதை எதிர்த்தது.

அதுமட்டுமல்லாமல, இன்றும்கூட எந்தவொரு அவசியமான வேலையைத் தமிழ்ப் பகுதிகளில் அரசாங்கமோ அல்லது உள்ளுராட்சி சபைகளோ மேற்கொண்டால் அதை இனவாதம் பேசிக்கொண்டு எதிர்ப்பது பிற்போக்கு தமிழ்த் தலைமைகளின் வழக்கமாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி மற்றும் விடயங்களைத் திட்டமிடுவதற்காக குடிசன மதிப்பு எடுத்தால், அது தமிழர்களின் சனத்தொகையைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை எனக் கூச்சல் போட்டு எதிர்ப்பார்கள். வீதிகளை அகலமாக்குவதற்காக தெருவோரங்களில் உள்ள சில கட்டிடங்களை அகற்ற வேண்டி ஏற்பட்டால், தமிழர்களின் சொத்துகளை அரசாங்கம் அழிக்கிறது எனக் கத்துவார்கள். நல்லூரிலிருந்த சங்கிலியன் சிலை புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்ட போது, தமிழர்களின் வீர மன்னனின் சிலையை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ‘துரோகி’ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடைக்கிறார் எனப் பொயப் பிரச்சாரம் செய்தார்கள்.

அண்மையில்கூட, யாழ் கச்சேரியடியில் உள்ள பழைய பூங்காவின் இற்றுப்போன சுவர்களை அகற்றிவிட்டு, புதிதாக வேலி போட முயன்ற போது, தமிழர்களின் பாரம்பரிய சின்னத்தை சிங்கள அரசாங்கம் இடிக்கிறது என்று மூச்சுப்பிடித்துப் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் புலிகளின் காலத்தில், பழமைவாய்ந்த யாழ் கோட்டைச் சுவர்களை அவர்கள் இடித்துக்கொண்டு போய், அதை சுட்டு நீறாக்கி சீமெந்துக்குப் பதிலாக விற்றுப் பணமாக்கிய போது, அது விடுதலைப் போராட்டத்துக்கு அவசியம் என்று வாளாவிருந்தார்களோ அல்லது ‘மாமியார் உடைத்தால் பொன்குடம், மருமகள் உடைத்தால் மண்குடம்’ என்ற கணக்கில் இருந்தார்களோ தெரியவில்லை.

அந்த வகையில் பார்க்கையில் தமிழர்களின் காணிகள் பறிபோகிறது என்ற தமிழ்க் கூட்டமைப்பின் கூச்சலும் உண்மையா அல்லது தேர்தல் ஸ்ரண்டா என்பதைத் தெளிவாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்படவிருக்கும் காணிப்பதிவுத் திட்டத்தை தமிழர்களுக்கு மட்டும் எதிரான, அதுவும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு எதிரான ஒரு விடயமாக தமிழ்க் கட்சிகள் ஒரு புரளியைக் கிளப்பி, புலம்பெயர் தமிழர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து வருவது எல்லோரும் அறிந்த விடயம்.

எனவே அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள பிரச்சாரங்கள் குறித்து கவனம் செலுத்தி, உண்மை நிலைமைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அவசியம். மறுபக்கத்தில், காணிக் கொள்கை சம்பந்தமாக அரசாங்கம் தனது கொள்கையைப் பகிரங்கமான முன்வைப்பதும் அவசியம். குறிப்பாக மாகாணசபைகளுக்கு உள்ள காணி அதிகாரத்தை உயிருள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: