ஞாயிறு, 23 அக்டோபர், 2011

கனிமொழிக்கு நாளை ஜாமீன் நிச்சயம்” எப்படி சொல்கிறார் கருணாநிதி?


டில்லி, இந்தியா: சி.பி.ஐ. தனிக் கோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரவுள்ள கனிமொழி ஜாமீன் மனு தொடர்பாக டில்லி வந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி, நேற்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்துவிட்டு கருணாநிதி புறப்பட்டபோது, சி.பி.ஐ. தனி கோர்ட்டில் கனிமொழி ஆஜராக வேண்டிய நேரம் நெருங்கியிருந்தது. அவரது வாகனம் சோனியா இல்லத்திலிருந்து நேரே பாட்டியாலா நீதிமன்றம் நோக்கிச் சென்றது.
நேற்று நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளவை கனிமொழிக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பது கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததோ என்னவோ, அவர் நீதிமன்றத்துக்கு உள்ளே செல்லவில்லை.
நீதிமன்றத்தின் மெயின் என்ட்ரன்ஸ் வரை வந்த அவர், இங்கே வாகனத்தை நிறுத்தச் சொல்லி, ராசாத்தி அம்மாளை அங்கே இறக்கி விட்டுப் புறப்பட்டுவிட்டார். ராசாத்தி அம்மாள் மட்டும் நீதிமன்றத்துக்கு உள்ளே சென்றார்.

கோர்ட்டில் நடைபெற்றவை இவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விஷயமல்ல என்ற நிலையில், நேற்று மாலை 4.50 மணிக்கு கருணாநிதி திகார் சிறைக்குள் பிரவேசித்தார். கனிமொழியைச் சந்தித்து தைரியம் சொல்வதே அவரது விசிட்டின் நோக்கம் என்றார் தி.மு.க. எம்.பி. ஒருவர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி திகார் சிறைக்குச் சென்று கனிமொழியைச் சந்திப்பது இது மூன்றாவது முறை. அடிக்கடி டில்லி வந்து கனிமொழியைச் சந்திக்க அவர் விரும்பினாலும், கனிமொழி அவரைத் தடுத்து விட்டதாக கூறுகின்றார்கள்.
இம்முறை, கனிமொழி கேஸ் முக்கிய கட்டத்துக்கு வந்திருப்பதால், டில்லியில் நேரடியாக சில அலுவல்களை கவனிக்க கலைஞர் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கனிமொழியை சந்தித்து, வெளியே இருந்து தாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி கூறி தைரியம் கொடுக்க அவர் சென்றிருந்தார் என்று கூறப்படுகின்றது.
சிறைக்கு சென்ற கருணாநிதி, கனிமொழியைச் சந்தித்தபின், இதே வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராசா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரையும் சந்தித்தார். இவர்களுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றையவர்களை அவர் சந்திக்கவில்லை. (அதற்கு அவசியமும் இல்லை)
ராசாத்தி அம்மாள் சகிதம் வந்திருந்த கருணாநிதியிடம் கனிமொழி, கடந்த வாரம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தது பற்றிப் பேச்சை எடுத்தபோது, “நீ அதைப் பற்றி கவலைப்படாதே” என்று கலைஞர் சொல்லி விட்டதாக தெரிகின்றது.
தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. பிரமுகர்கள் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொன்னதுடன் நிறுத்திக் கொண்டாராம் கலைஞர்.
“திங்கட்கிழமை எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும். நான் திரும்பவும் சென்னைக்குச் செல்லும்போது, சேர்ந்தே செல்லலாம்” என்று கலைஞர் தைரியம் சொன்னதாகத் தெரியவருகின்றது. கருணாநிதியுடன் அவரது துணைவியார் ராஜாத்தியும் திகார் ஜெயிலுக்கு உடன் சென்றிருந்தார். மாலை 6 மணிக்கு விசிட்டர்ஸ் அவர்ஸ் முடியும்வரை அவர்கள் அங்கிருந்தனர்.

நாளைக்கு ஜாமீன் கிடைக்கும் என்று கலைஞர் கூறியது வெறும் ஆறுதல் வார்த்தைகளா, அல்லது நிஜமாகவே ஏதாவது ஏற்பாடு உள்ளதா என்பது தெரியவில்லை.
-டில்லியிலிருந்து சம்பத் குமாரின் குறிப்புகளுடன், ரிஷி. “விறுவிறுப்பு.காம்” வித்தியாசமாக இருக்கிறதா? உங்கள் ஆதரவு தேவை – நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை: