செவ்வாய், 25 அக்டோபர், 2011

102 வயது பாட்டியிடமிருந்து சான்றிதழைப் பறித்து வேறொருவர் வென்றதாக அறிவித்த அதிகாரிகள்


Thadahathi
மதுரை: உளாட்சித் தேர்தலில் மதுரை அருகே உள்ள புதுக்குளம் 184வது வார்டில் 102 வயது மூதாட்டி ஒருவர் வென்றதாக அறிவித்த அதிகாரிகள், பின்னர் அவரை ஒரு காரில் ஏற்றிச் சென்று சான்றிதழை திரும்ப வாங்கிக் கொண்டு ஆட்டோவுக்கு ரூ. 100 காசு கொடுத்து அனுப்பி விட்டு, வேறு ஒருவர் வென்றதாக அறிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தி்ல் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. கடந்த 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.மதுரை அருகே உள்ள புதுக்குளம் 184வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 102 வயது மூதாட்டி தடகத்தி அம்மாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கடந்த 22ம் தேதி மாலை அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் அது தவறுதலாக வழங்கப்பட்டது என்று கூறி அதை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

இது குறித்து மண்டல வளர்ச்சி அலுவலர் எஸ். சரஸ்வதி கூறியதாவது,

மதுரை அருகே உள்ள புதுக்குளம் 184வது வார்டு உறுப்பினராக தடகத்தி வெற்றி பெற்றார் என்று எங்கள் ஊழியர்கள் தவறுதலாக அறிவித்துவிட்டனர். அதற்காக நாங்கள் வருந்துகிறோம். பக்கத்து கிராமத்தில் வாக்கு எண்ணும் பணி நடந்து கொண்டிருக்கையில் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் எங்கள் ஊழியர்களை வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழை வழங்குமாறு கூறிவிட்டு நான் அங்கு சென்றுவிட்டேன்.

ஆனால் அவர்கள் தவறுதலாக மூதாட்டியின் பெயரை சான்றிதழில் எழுதிவிட்டனர். பதிவான 176 வாக்குகளில் மணிமாறன் 72 வாக்குகளும், தடகத்தி 43ம், வெள்ளைச்சாமி என்பவர் 50 வாக்குகளும் பெற்றிருந்தனர். 11 வாக்குகள் செல்லாதவை ஆகும் என்றார்.

தேர்தல் முடிவகள் அறிவிக்கப்பட்டவுடன் மணிமாறன் தரப்பினர் முடிவில் ஏதோ குளறுபடி நடந்துள்ளதாகவும், அதை சரிபார்க்குமாறும் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். அதன் பிறகு தான் தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மணிமாறனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாம.

இது குறித்து பஞ்சாயத்து தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், தடகத்தி அம்மாளின் ஆதரவாளருமான பி. முத்துராமலிங்கம் கூறியதாவது,

மண்டல வளர்ச்சி அலுவர்கள் வந்து தடகத்தியிடம் சான்றிதழை திரும்பப் பெற்றுக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் வந்து மீண்டும் வழங்குவார் என்று கூறிச் சென்றனர். நாங்களும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் காத்திருந்தோம், எந்த தகவலும் இல்லை. திங்கட்கிழமை காலையில் தான் மணிமாறன் தான் வெற்றியாளர் என்பதும், அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதும் தெரிய வந்தது என்றார்.

முன்னதாக, தடகத்தி அம்மாளின் வீட்டுக்கு வந்த அதிகாரிகள் அவரை வெற்றிச் சான்றிதழை எடுத்துக் கொண்டு தங்களுடன் வருமாறு கூறி காரில் ஏற்றிச் சென்றனர். அங்கு போன பின்னர் சான்றிதழை வாங்கிக் கொண்டு கைக் காசாக 100 ரூபாயைக் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த செயல் குறித்து தடகத்தி அம்மாள் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அக்டோபர் 21ம் தேதி நான் ஜெயித்ததாக சொன்னார்கள். 22ம் தேதி வந்து சான்றிதழை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்கள். நானும் போய் வாங்கி வந்தேன். ஆனால் மறுபடியும் அதிகாரிகள் வந்து காரில் அழைத்துச் சென்று சான்றிதழை திரும்ப வாங்கிக் கொண்டார்கள். போக்குவரத்து செலவுக்கு வச்சுக்குங்க பாட்டி என்று கூறி 100 ரூபாயைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டனர்.

எனக்குக் கட்டில் சின்னம் கொடுத்தாங்க. மணிமாறனுக்கு சாவி சின்னம் கொடுத்தாங்க. இப்ப ஓட்டு மாறிப் போச்சுன்னு சொல்லிட்டாங்க என்றார் ஏமாற்றத்துடன்.

தடகத்தி தோற்று விட்டதாக அதிகாரிகள் கூறுவதை ஏற்க கிராமத்தினர் மறுக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தடகத்திக்குத்தான் ஓட்டுப் போட்டனராம்.

தடகத்தி அம்மாளின் ஒரிஜினல் பெயர் நட்டாத்தி அம்மாள். கிராமத்தினர் இவரை அன்புடன் தடகத்தி அம்மாள் என்றுதான் கூப்பிடுகிறார்கள். படு சுறுசுறுப்பாக இந்த வயதிலும் செயல்படுகிறார் இவர். வயல் வேலைக்குப் போய் வருகிறார். ஊர் மக்களுக்கு ஏதாவது என்றால் முதல் ஆளாக போய் நிற்பாராம். மேலும் ஊரில் எந்தப் பெண்ணுக்காவது பிரசவ வலி என்றால் இவரைத்தான் நாடுகிறார்கள். இவர் மூலம் தான் இங்குள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் பிரசவிக்கின்றனராம். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பிரசவம் பார்த்துள்ளாராம்.

உதவி செய்யும் குணம் கொண்ட, ஊர் மக்களிடம் நல்ல பெயரைப் பெற்ற காரணத்தால்தான் இந்த முறை தேர்தலில் நிறுத்தினர். ஆனால் வெற்றி பெற்றதாக கூறி விட்டு இப்போது இல்லை என்று கூறி விட்டதால் ஊர் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: