வியாழன், 27 அக்டோபர், 2011

கடாபியின் இறுதி தினங்களில், எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்?

Viruvirupu
கொல்லப்பட்ட கடாபியின் இறுதி தினங்கள் எப்படி இருந்தன? அவர் என்னவெல்லாம் செய்தார்? என்ன பேசினார்? இந்த விபரங்கள் தற்போது விலாவாரியாக வெளியாகி உள்ளன.
தலைநகர் ட்ரிபோலியை போராளிப் படைகள் கைப்பற்றியபோது, ஆகஸ்ட் 21ம் தேதி அங்கிருந்து தப்பி ஓடினார் கடாபி. தனது நம்பிக்கைக்கு உரிய பாதுகாவலர்கள், நெருங்கிய உறவினர்கள், விசுவாசிகள், மற்றும் ஒரு சமையல்காரர் ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழு ஒன்றுடன் சிறிய வாகனத் தொடர் ஒன்றில் அவர் இரவோடு இரவாக ட்ரிபோலியை விட்டு தப்பிச் சென்றார்.
கடாபியுடன் சென்ற குழுவில் ஒருவர், தாவோ. இவர் கடாபியின் நெருங்கிய உறவினரும்கூட.
தற்போது கைது செய்யப்பட்டு, மத்திய உளவுத்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ள தாவோதான், கடாபியின் இறுதி நாட்கள் பற்றிய விபரங்களை வெளியுலகுக்கு முதன்முதலில் தெரிவித்துள்ளார்.  வெளிநாட்டு மீடியாக்கள் அடங்கிய பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் பேசுவதற்கு இவர் அனுமதிக்கப்பட்டார்.   அப்போது தாவோ கூறிய விபரங்கள்தான் கடாபியின் இறுதித் தினங்கள் பற்றி தற்போது உள்ள ஒரேயொரு பதிவு.


1975-ல் கர்னல் கடாபி
கடாபிக்கு நெருக்கமானவர்கள், லிபியாவை விட்டு தப்பிச் செல்லும்படி பல தடவைகள் கடாபியை வற்புறுத்தினார்கள் என்கிறார் தாவோ. ஆனால், கடாபியும் அவரது மகனும் அதை ஒரு ஆப்ஷனாகவே முதலில் எடுக்கவில்லை. லிபியாவுக்குள் இருக்கும்வரை தம்மை ஏதும் செய்ய முடியாது என்று நம்பியதே அதற்கு காரணம் என்றும் கூறுகிறார் தாவோ.
கடாபி, தலைநகர் ட்ரிபோலியில் இருந்து தப்பிச் சென்றபோது, எங்கே செல்வது என்பதில் முதலில் அவருக்கு ஒரு குழப்பம் இருந்தது. கடாபியின் மகன் முவடாசிம், சூர்ட் நகரைத் தேர்ந்தெடுத்தார். காரணம், கடாபிக்கு ஆதரவான மக்கள் அதிகளவில் வசிக்கும் நகரம் அது.
தாவோ கூறிய மற்றைய விபரங்கள்:
கடாபி 42 ஆண்டுகள் லிபியாவின் அசைக்க முடியாத சக்தியாக ஆட்சி செய்தபின்னரே, தலைநகரை விட்டுத் தப்பியோட நேர்ந்தது. ஆடம்பரமான மாளிகைகளில் வாழ்ந்த கடாபி, தப்பியோடிய பின் சூர்ட் நகரில் வெவ்வேறு வீடுகளில் தலைமறைவாக தங்க வேண்டியிருந்தது.
“ஏன் இந்த வீட்டில் மின்சாரம் இல்லை? ஏன் தண்ணீர் சப்ளை 24 மணி நேரமும் இல்லை?” என்று கோபம் கலந்த ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

சிரியா, உகண்டா, எகிப்து ஜனாதிபதிகளுடன் கடாபி, 1972-ல்
“கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக ராணுவத்தின் தாக்குதல்கள், கடாபியின் நேரடி வழிநடத்தலில் நடைபெற்றன” என்று வந்த செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது என்கிறார் தாவோ.  “யுத்தம் நடைபெற்ற நேரங்களில் கடாபி தனது மறைவிடத்தைவிட்டு வெளியே வந்ததே கிடையாது.  துப்பாக்கிகளுடன் அவர் காணப்படுவதாக வெளியான போட்டோக்கள் யாவும், இன்-டோரில் எடுக்கப்பட்டவை”
தாவோவின் கூற்றுப்படி, யுத்தம் நடைபெற்றபோது, தனது துப்பாக்கியில் இருந்து ஒரு சிங்கிள் தோட்டாவைக்கூட கடாபி சுட்டதில்லை. அவரது மறைவிடத்தில் இருந்து சட்டலைட் செல்போன்களில் பேசுவதிலேயே அவரது நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
யுத்தம் தோல்வியில் முடிகின்றது என்பதை அவர் அறிந்தே இருந்தார். ஆனாலும், யுத்தம் நடைபெற்ற இடத்திலிருந்து அவர் வெளியேற விரும்பவில்லை.

யாசிர் அரபாத் ட்ரிபோலி வந்தபோது கடாபி, 1976-ல்
சலிப்புற்று இருந்த சமயத்தில், “நிறையவே வீர வசனங்களைப் பேசிவிட்டேன். அவ்வளவு பேசிவிட்டு, உயிர் தப்பி ஓடினால் நன்றாகவா இருக்கும்? எனது பேச்சுக்களே என்னை இங்கிருந்து தப்பி ஓட விடாமல் செய்துவிட்டன” என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.
மக்களுக்காக போராடுகிறேன் என்று அவர் சொல்லிக் கொண்டாலும், தாம் உயிர் தப்புவதற்காக மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டார். அவரைச் சுற்றி பொதுமக்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.
பொதுமக்கள் இருப்பதால் போராளி படையினர் அவரது மறைவிடங்கள் மீது ராக்கெட் தாக்குதல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடாத்த முடிந்தது. இதனால்தான் கடாபியால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் உயிர் தப்ப முடிந்தது.
ஆனால், இவரைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்கள் ராக்கெட் ஷெல்கள் அவ்வப்போது வந்து வீழ்ந்ததில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் கடாபிக்கு ஆதரவானவர்கள் என்று கூறப்பட்ட இந்த மக்கள், கடாபியை வெறுக்கத் தொடங்கினார்கள்.

ஆரம்ப நாட்களில், மகத்தான மக்கள் ஆதரவுடன்...
மனிதக் கேடயமாக இருந்த பொதுமக்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதிலேயே குறியாக இருந்தனர்.
அவர்களை தனது ஆட்களின் உதவியுடன் துப்பாக்கி முனையில் மிரட்டியே தன்னைச் சுற்றி நிறுத்தி வைத்திருந்தார் கடாபி.
அப்படியிருந்தும், இரவோடு இரவாக பொதுமக்கள் தப்பிச் செல்வது அன்றாடம் நடக்கத் தொடங்கியது. தப்பிச் செல்ல முயலும் பொதுமக்கள் கடாபியின் காவலர்களால் பிடிக்கப்பட்டால் தண்டனையாக சவுக்கடி வழங்கப்பட்டது. வாக்குவாதம் செய்ய முயல்பவர்கள் கொல்லப்பட்டார்கள்.
கொல்லப்பட்டவர்களின் உடல்களை மற்றைய பொதுமக்களின் பார்வையில் படும் வகையில் வீசி எறிந்துவிட்டுச் சென்றனர் கடாபியின் காவலர்கள். அதற்கு காரணமும் இருந்தது.
“நீங்களும் தப்பிச் செல்ல முயன்றால், இது போலவே உயிரிழக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுவதே அந்தக் காரணம்.

1986-ல் தனது கூடாரத்தில் தங்கியிருந்த கடாபி
காவலர்கள் எப்படி ரோந்து வந்து தடுத்தாலும், சூர்ட் நகருக்குள் இருந்த பொதுமக்கள் காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பித்துச் செல்வது தொடர்ந்தது. உயிர் போனாலும் பரவாயில்லை என்று ரிஸ்க் எடுத்து குடும்பத்துடன் தப்பி ஓடத் தொடங்கினார்கள்.
இப்படியே பொதுமக்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டால், போராளிப் படையினர் கடாபியின் மறைவிடத்தை முற்றாக தாக்குவதற்கு எந்தத் தடையும் கிடையாது என்பதை புரிந்து கொண்டார் கடாபி. “தப்பி ஓடும் மக்களை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்” என்று தனது காவலர்களுக்கு உத்தரவு கொடுத்தார்.
இந்த உத்தரவை காவலர்கள் எப்படி நிறைவேற்றினார்கள்?
சூர்ட் நகருக்கு உள்ளே இருந்த குடும்பங்களில் உள்ள இளம் பெண்கள் அனைவரையும் பிடித்துச் சென்று ஓர் இடத்தில் தங்க வைத்து, அதைச் சுற்றி கடுமையான காவல் வைத்து விட்டார்கள். தமது மகள்களையும், தங்கைகளையும் விட்டுவிட்டு யாரும் வெளியேற மாட்டார்கள் என்ற லாஜிக் இது.

2005-ல் எகிப்திய ஜனாதிபதி முபாரக்குடன் கடாபி. தற்போது இருவருமே பதவியில் இல்லை.
“எனது மக்கள்.. எனது மக்கள் என்று அடிக்கடி சொல்கிறீர்களே. அந்த மக்களை இப்படி துப்பாக்கி முனையில் மனிதக் கேடயமாக வைத்திருக்கிறீர்களே” என்று தாவோ கேட்டபோது தலைவரின் பதில், “இதை வெளியே யாரும் நம்ப மாட்டார்கள். எனது பிரச்சார சக்திகள் வெளிநாடுகளில் உள்ளன.  அவர்கள் இதையெல்லாம் பொய் பிரச்சாரம் என்று சொல்லி விடுவார்கள்”
அவரது கையில் இருந்ததெல்லாம் ஒரு சட்டலைட் போன் மாத்திரமே. கம்ப்யூட்டரோ, இன்டர்-நெட்டோ கிடையாது. அப்படி இருந்திருந்தாலும் பலனில்லை. காரணம், மின்சார வசதி பெரிதாக இருக்கவில்லை. போன் சார்ஜ் பண்ணுவதற்கு தன்னிடமிருந்த வாகனங்களை உபயோகித்துக் கொண்டிருந்தார்.
தனது சட்டலைட் போனில் அவர் தொடர்பு கொள்ளும் ஆட்களைத் தவிர, வேறு வெளித் தொடர்புகள் ஏதும் அவருக்கு கடைசி நாட்களில் இருக்கவி்லை. சுருக்கமாகச் சொன்னால், வெளி உலகில் இருந்து அவர் துண்டிக்கப்பட்டு இருந்தார்.
என்னதான் பொதுமக்களை சுற்றி நிறுத்திவிட்டு நடுவே மறைந்து இருந்தாலும், சூர்ட் நகரின்மீது போராளிப் படையினரின் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மோட்டார் ஷெல்கள் எந்த நேரத்திலும் நகருக்குள் வந்து வீழ்ந்து கொண்டுதான் இருந்தன.

கடாபியின் உடலை போட்டோ எடுக்கும் மக்கள்.
இதனால், கடாபி அடிக்கடி தனது மறைவிடத்தை வெவ்வேறு வீடுகளுக்கு மாற்றிக் கொண்டு இருந்தார்.
ஒரு தடவை அவர் தங்கியிருந்த வீட்டின்மீது ஷெல் வந்து வீழ்ந்து வெடித்தது. அதில் கடாபியின் மெய்பாதுகாவலர்கள் மூவர் படுகாயம் அடைந்தனர். “இந்தத் தாக்குதலோடுதான் அவர் பயந்து விட்டார் என்று சொல்லலாம்” என்கிறார் தாவோ.
மற்றொரு தடவை, அவருடன் கூடவே சென்று கொண்டிருந்த அவரது சமையல்காரர் படுகாயம் அடைந்தார். அதன்பின் அவரது குழுவில் இருந்த மற்றையவர்கள் மாறிமாறி சமையல் வேலை செய்ய வேண்டியிருந்தது.
கொல்லப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒருநாள், கடாபி தனது மறைவிடத்தை ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு மாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த ஏரியாவே போராளிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. அவர்கள் எந்திரத் துப்பாக்கிகளால் சாராமாரியாகச் சுட்டவண்ணம் இருந்தனர். கடாபி உயிர் தப்பியதே பெரிய விஷயம்.
வாழ்வா சாவா என்று கடாபி பரிதவித்த அந்த சந்தர்ப்பத்தின் பின்னர்தான், அவர் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார்.

ரகசிய இடத்தில் புதைப்பதற்காக மூடப்பட்ட நிலையில் கடாபியின் உடல்
கடாபி கொல்லப்பட்ட வியாழக்கிழமை, 40 கார்கள் அடங்கிய அணியுடன் அவர் கிளம்ப முடிவு செய்தார்.  யாரும் அறியாமல் கிளம்ப வேண்டும் என்பதற்காக, இந்தப் பயணம் அதிகாலை 3 மணிக்கு தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தன்னுடன் இருந்தவர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆனால், இந்த இறுதி நாட்களில் அவருடன் கூட இருந்தவர்களே அவரது உத்தரவை உடனடியான நிறைவேற்றும் அளவுக்கு விசுவாசமாக இல்லை. அநேகருக்கு உயிர் பயம் ஏற்பட்டிருந்தது. அவர்களில் சிலரும் அங்கிருந்து தப்பியோட முயன்று கொண்டிருந்தார்கள்.
இதனால், கடாபி உத்தரவிட்டபடி முன்னேற்பாடுகள் துரிதமாக நடைபெறவில்லை.
அதிகாலையில் இருளோடு இருளாக கிளம்பும் திட்டம் தாமதமாகி, ஒரு வழியாக  இவர்கள் கிளம்பும்போது, வியாழக்கிழமை  காலை 8 மணியாகி விட்டது.
கடாபி ஒரு டொயோட்டா லேன்ட் குரூசர் வாகனத்தில் ஏறிக்கொண்டார். அவருடன் அவருடைய பாதுகாவலர், உறவினர் ஒருவர், டிரைவர் ஆகியோருடன் தாவோவும் பயணித்தனர்.

கொல்லப்பட்டபின் 4 நாட்களாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து உடல் அகற்றப்பட்டு விட்டது
இந்த பயணத்தின்போது, கடாபி அதிகம் பேசவில்லை. பலத்த சிந்தனையில் இருந்தார். அதுதான் தமது இறுதிப் பயணம் என்பதை அவரது உள்ளுணர்வு கூறியதோ என்னவோ!
இவர்கள் பயணம் தொடங்கி சிறிது நேரத்திலேயே வானில் நேட்டோ யுத்த விமானங்கள் வட்டமிடத் தொடங்கிவிட்டன. வானில் இருந்து ஏவுகணைகளை ஏவத் தொடங்கின நேட்டோ விமானங்கள். ஒரு ஏவுகணை கடாபி சென்ற காரின் அருகே வீழ்ந்து வெடித்ததில், காரின் ஏர்-பேக் வெடித்து வெளியே வந்தது.
அதன்பின் அந்த கார் பயன்படுத்தப்பட முடியாத நிலையை அடைந்தது.
வேறு வழியில்லாமல் கடாபியும் மற்றையவர்களும் காரில் இருந்து இறங்கி, பண்ணை நிலம் ஒன்றின் ஊடாக ஓடத் தொடங்கினார்கள். பண்ணையின் முடிவில் மற்றொரு மெயின் ரோடு இருந்தது. அதை அடைவதே இவர்களது திட்டமாக இருந்தது.
இவர்கள் ஓடிக்கொண்டிருந்த பண்ணை நிலத்தை நோக்கியும் ஏவுகணைகள் தொடர்ந்து வந்து வீழ்ந்து கொண்டிருந்தன.
அப்படி வந்து வீழ்ந்த ஏவுகணை ஒன்றிலிருந்து பறந்துவந்த கூர்மையான பொருள் ஒன்று, கடாபியுடன் ஓடிக்கொண்டிருந்த தாவோவை தாக்கியது. அவர் நினைவிழந்து வீழ்ந்தார். மீண்டும் நினைவு திரும்பியபோது, வைத்தியசாலையில் பலத்த காவலுக்கு மத்தியில் இருந்தார்.
இதுவரைதான் தாவோவால் கூற முடிந்தது. தாவோ நினைவிழந்து வீழ்ந்த போது, கடாபி தொடர்ந்தும் பண்ணை நிலத்தின் ஊடாக ஓடியபடி இருந்திருக்கின்றார். பண்ணை நிலத்தைக் கடந்து, மற்றொரு வீதியை அவரால் அடையவும் முடிந்திருக்கின்றது.
பண்ணை நிலம் முடிந்த அந்த வீதியில் வைத்து, அவரது விதியும் முடிந்திருக்கிறது!
-ட்ரிபோலி, லிபியாவில் இருந்து  ஜவாத் ஹிரோகியின் குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: