சனி, 29 அக்டோபர், 2011

ஆமிக்கும் உனக்கும் என்ன தொடர்படா?” எனக் கத்திக் கூச்சலிட்டான்.

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (20)
20. தென்னம்பாளை அடியுடன் தொடங்கிய முதல் விசாரணை!
LTTE torture camp281011இந்த ‘படப்பிடிப்பு’ நாடகம் பின்னரும் சில தடவைகள் நடந்தது. எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த கைதிகள் எல்லோருக்கும் நடந்தது. அவர்கள் எல்லோரையும் என்னை எடுத்தது போல இங்கு வந்தவுடனேயே படம் எடுத்திருந்தாலும், பின்னரும் எல்லோரையும் எடுத்துக் கொண்டார்கள்.

பின்னர் எடுத்த போது, ஒருமுறை தலையை மொட்டை அடித்துவிட்டு எடுத்தார்கள். இன்னொரு தடவை மீசையை எடுத்துவிட்டு படம் எடுத்தார்கள். (பிரபாகரனும் அவரது கூட்டத்தினரும் 2009 மே மாதம் இலங்கை இராணுவத்தால் முள்ளிவாய்க்காலில் வைத்து கொல்லப்பட்ட பின்னர், தமது ‘நேர்த்திக் கடனை’ நிறைவேற்றுவதற்காக சிலர் தமது தலையை மொட்டை அடித்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அண்மையில்கூட புலம்பெயர் நாடொன்றில்  வசிக்கும் ஒருவர், இந்தியாவுள்ள திருப்பதிக்குச் சென்று தனது ‘நேர்த்திக் கடனை’ நிறைவேற்ற தலையை மொட்டை அடித்துவிட்டு வந்ததை நான் அறிவேன். இந்த நேர்த்திக் கடன் என்னவென்பதை நான் சொல்லத் தேவையில்லை)
இந்தப் படப்பிடிப்புக்கான காரணங்களைப் பின்னர் எனது சிறை வாழ்க்கையின் போது, என்னுடன் ஒன்றாகத் தனது தண்டனையை அனுபவித்த புலி உறுப்பினர் ஒருவர் விளக்கிக் கூறினார். அவரது விளக்கத்தின்படி, புலிகள் தம்மிடம் இருக்கும் ஒரு கைதியின் தகவல் கோவையில் சேர்த்து வைப்பதற்காகவே எம்மைக் கைதுசெய்தவுடன் முதலில் எடுக்கும் படம் எடுக்கிறார்கள். பின்னர் தலையை மொட்டை அடித்துவிட்டு, மீசையை மழித்துவிட்டு எடுப்பது வேறு காரணங்களுக்காக.
அதாவது, கைதி ஒருவர் புலிகளின் பிடியில் இருந்து தப்பி ஓடி, தனது தோற்றத்தை மாற்றுவதற்காக தலையையும் மீசையையும் மழித்துவிட்டு நடமாடினால, அவரைச்; சுலபமாக அடையாளம் பிடிப்பதற்காகவே, பின்னைய வகை மாதிரிப் படங்கள் எடுக்கப்படுவதாக அந்தப் புலி உறுப்பினர் விளக்கிக் கூறினார். அத்துடன் வேறு ஒரு காரணத்துக்காகவும் இந்தப் படங்கள் எடுக்கப்படுவதுண்டு.

அதாவது சில கைதிகள் ஆண்டுக்கணக்காக (அங்கு சிலா 5 ஆண்டுகளைத் தாண்டியும் இருந்தனர்) சிறையில் வைக்கப்பட்டிருப்புதுண்டு. அந்த நேரத்தில் சிறையில் வழங்கப்படும் போசாக்கற்ற உணவு, நோய், மன உளைச்சல் காரணமாக அவர்களது தோற்றங்கள் மாறி விடுவதால், அதற்காகவும் படங்கள் எடுக்கப்படுவதுண்டு. எவ்வளவு முன்யோசனையான பாதுகாப்பு ஏற்பாடுகள் பாருங்கள்! (உலகைப் பேரழிவில் ஆழ்த்திய ஜேர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரின் சிறையிலோ அல்லது இன்று இராணுவ ஆட்சிகள் நடைபெறுகின்ற நாடுகளிலோகூட, இத்தகைய ஏற்பாடுகள் இருந்திருக்குமோ என்னவோ?)

புலிகள் எடுத்த இந்தப் படங்களோ, இதர ஆவணங்களோ, புலிகளுடனான இறுதிப் போரின் போது இராணுவத்திடம் சிக்கியிருந்தால், அந்த ஆவணங்களே பல கதைகளைக் கூறும். உண்மையில் இந்த ஆவணங்கள், புலிகள் கைதிகளைச் சித்திரவதை செய்யப் பயன்படுத்திய கருவிகள் மற்றும் தடயப் பொருட்களைக் கொண்டு ஒரு ஞாபகார்த்தச்சாலை அமைத்து, அதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததிகளுக்கு தமது சொந்தப் பாசிஸ்ட்டுகளின் செயற்பாடுகள் குறித்து விளக்குவது அவசியம். இதுபோன்ற பல காட்சிக் கூடங்களும், நினைவு இடங்களும் ஜேர்மனியில் அமைக்கப்பட்டு, ஹிட்லர் தலைமையிலான ஜேர்மன் நாஜிகளின் பாசிச நடவடிக்கைகள் சந்ததி சந்ததியாக நினைவு கூரப்படுவதை இங்கு குறிப்பிடுவது அவசியம்.

எனது முதலாவது படப்பிடிப்பு முடிந்து, நான் சிறைக்குள் மீண்டும் கூட்டிச் செல்லப்பட்ட போது, அங்கிருந்த எல்லோரும் என்னை மிகவும் உன்னிப்பாக அவதானிப்பதை கண்டேன். ஆனால் எவரும் என்னுடன் எதுவும் கதைக்கவில்லை. அவர்கள் அப்படிப் பார்ப்பது ஏன் என்பதைப் பின்னைய காலங்களில் தெரிந்து கொண்டேன்.

ஒரு கைதி வெளியே கூட்டிச் செல்லப்பட்டு, பின்னா சிறைக்குள் அழைத்து வரப்படும்போது, பல நிலைகளில் அவர் வருவார். சிலர் வெளிப்படையான உடற் காயங்களுடன் - அதாவது கை முறிந்தோ, கால் முறிந்தோ, மண்டை – பல் போன்றன உடைந்தோ வருவதுண்டு. வேறு சிலர் உடல் ஊமைக் காயங்களுடன் வருவார்கள். ஒரு சிலர் மனக் காயங்களுடன் வருவார்கள். எப்படி வந்தாலும் அவர்களது தோற்றங்களை வைத்து, அவர்களுக்கு இன்று புலிகளால் நடாத்தப்பட்ட ‘அபிஷேகம்’ என்ன என்பதை, ‘உள்ளே’ இருப்பவர்கள் அனுமானித்துவிடுவார்கள்.

பழைய கைதிகளாக இருந்தால், அன்று நடந்தது என்னவென்பதைப் பின்னர் விசாரித்து அறிந்து கொள்வார்கள். கைதி புதியவரானால், அவருடன் லேசில் கதைக்காது கவனமாக இருந்து கொள்வார்கள். அவருக்கு இன்னமும் விசாரணை நடைபெறவில்லையானால், மிக மிக அவதானமாக இருப்பார்கள். ஏனெனில், புதிய கைதிக்கு நடைபெறப்போகும் விசாரணைகள் சித்திரவதைகளின் போது, உள்ளே கைதியாக இருப்பவர்கள் யாராவது அந்தப் புதிய கைதியை ‘முன் விசாரணை’ செய்தார்களா என்பதும் உள்ளடங்கி இருக்கும். அவ்வாறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அப்படிக் கதைத்த கைதிக்கு மீண்டும் ஒரு விசாரணை நடாத்தப்பட்டு, அடி உதை கொடுக்கப்படுவதுடன், அவரது தண்டனைக் காலமும் அதிகரிக்கப்படும்.

இதுதவிர, சில வேளைகளில் புலிகளின் உளவாளிகள், கைதிகள் என்ற போர்வையில் சிறைக்குள் அனுப்பபபபட்டு, உள்ளே இருப்பவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள், அவர்கள் தமது விசாரணையின் போது ஏதாவது விடயங்களை மறைத்துள்ளாகளா என்ற விடயங்களை அறியும் முயற்சிகளும், அந்த சிறையில் நடந்து வந்துள்ளன.

உதாரணமாக, புலிகளின் உறுப்பினனான மட்டக்களப்பைச் சேர்ந்த சுமிலன் என்பவர், காவல் கடமையில் இருந்தபோது, பக்கத்து வீட்டிலிருந்தவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு,  இந்தச் சிறையில் வைக்கட்டிருந்தார். பின்னர் அவரது குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில், அவர் தான் விசாரணையின் போது சொல்லாமல் ஒளித்த விடயங்களைத் தன்னுடன் விடுதலை செய்யப்படவிருந்த சக கைதி ஒருவரிடம் உளறிவிட்டார். அந்த சக கைதி புலிகளால் அனுப்பப்பட்ட ஒரு உளவாளி. அதன் பின்னர் அந்த சுமிலன் என்பவர் திருப்பி ‘அழைத்துவரப்பட்டு’ வரணியிலுள்ள ‘மேல்வீட்டு’ விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்!

என்னையும்கூட உளவு பார்ப்பதற்காக புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் இதே சிறையில் நியமிக்கப்பட்டார். அதுபற்றிப் பின்னர் கூறுவேன்.

காலையில் எழுந்ததிலிருந்து தண்ணீரோ உணவோ, எதுவும் அருந்தாததினால் தலை சுற்றுவது போலிருந்தது. இரவும் நான் உணவு எதுவும் உண்டிருக்கவில்லை. உள்ளே சென்று எனது இருக்கையில் இருந்ததும் அருகிலிருந்த பெரியவர் என்னைப் பார்த்து, “சாப்பாடு ஏதும் சாப்பிட்டியளா?” என வினவினார். நான் “இல்லை” எனப் பதிலளித்தேன்.

பின்னர் அவர் “ஏதும் இருக்கோ தெரியல்லை” என முணுமுணுத்துவிட்டு, பின்னால் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமினியக் கிடாரத்தை ஆராய்ந்துவிட்டு, பின்னர் அங்கு நின்ற வாலிபன் ஒருவனிடம் ஏதோ சொன்னார். அதன் பின்னர் அவன் ஒரு கோப்பையை எடுத்துச் சென்று அந்தக் கிடாரத்திலிருந்து விறாண்டி எடுத்து, வெள்ளை அரிசியில் செய்த சீனி போட்ட பொங்கலைக் கொண்டு வந்து தந்தான். அந்த வெண் பொங்கல் அந்த நேரத்தில் எனக்கு ‘அமிர்தமாக’ இருந்தது.

காலைநேர உணவை ஏறத்தாழ மதிய நேரத்தை அண்டிய பின்னரே உண்டதால், சிறிது நேரம் படுக்க விரும்பித் தரையில் சாய்ந்தேன். நினைவுகள் வீட்டைச் சுற்றி வந்தன. ஆனால் அது தொடரவில்லை.

திடீரென வாயிற்காப்போன் வந்து நின்று “R 140 ... மணியம்” என அழைத்தான்.

நான் எழுந்து வாசல் கம்பிகளுக்கு அருகில் சென்றேன். வெளியே அவனுடன் இன்னொருவனும் நின்று கொண்டிருந்தான். அந்த இன்னொருவன் என்னை தலை முதல் கால்வரை வெகு கவனமாகப் பார்த்தான். அவனது பார்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இறைச்சிக் கடை வைத்திருந்த எனது நண்பரான அலியார் என்பவர், வீடுகளுக்குச் சென்று இறைச்சிக்காக ஆடு வாங்கும் போது பார்க்கும் பார்வையை நினைவூட்டியது.

அவர்கள் இருவரும் கதவைத் திறந்து என்னை வெளியே வருமாறு அழைத்தனர். நான் மிகவும் கஸ்டப்பட்டு எனது கால் சங்கிலியுடன் வெளியே வந்ததும், அந்தப் புதியவன் என்னை அழைத்துக்கொண்டு படியிறங்கினான். நான் திரும்பி நின்று கைகளை ஊன்றி இறங்க முற்படுகையில் எனது முதுகில் திடீரென ஒரு வித்தியாசமான அடி விழுந்தது. நான் ஒருவாறு சமாளித்துக்கொண்டு இறங்கித் திரும்பிப் பார்க்கையில், அவனது கையில் ஒரு காய்ந்த தென்னம்பாளை இருப்பதை அவதானித்தேன். அதன் மூலம்தான் அவன் எனக்கு அடித்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன்.

அவன் என்னை அருகிலிருந்த சிறிய கொட்டில் ஒன்றுக்கு அழைத்துக்கொண்டு போனான். போகும்பொழுதே அந்தத் தென்னம்பாளையால் எனது முதுகில் அடித்துக்கொண்டே வந்தான். காய்ந்த தென்னம்பாளையின் விறால்கள் கீறி எனது முதுகு வேதனையெடுத்தது. அந்தக் கொட்டிலுக்குச் சென்றதும், அவன் உள்ளே இருந்த நாற்காலியில் இருந்துகொண்டு, என்னை வெளியே தனக்கு முன்னால் நிலத்தில் அமரும்படி சொன்னான்.

நான் அவன் கூறியபடியே, அவனுக்கு முன்னால் வெளியே நிலத்தில் அமர்ந்ததும், அவன் என்னைக் கைதுசெய்தபோது எனது கடையில் எடுத்த டயறியையும், இலங்கை வரை படத்தையும் எடுத்து மேசையில் வைத்தான். பின்னர் அந்த டயறியை எடுத்துப் பார்த்துவிட்டு, “ஏன் டயறியில் ஒண்டும் எழுதல்லை?” என வினவினான். நான் அதற்கு “நான் அதிகமாக டயறி எழுதுவதில்லை” எனப் பதிலளித்தேன்.

அவன் என்னை வெறித்துப் பார்த்துவிட்டு, “டயறி எழுதிறதில்லையோ அல்லது எங்களை ஏமாத்த எழுதாத டயறியை வைச்சிருக்கிறியோ?” எனக் கேட்டுவிட்டு, தென்னம்பாளையால் எட்டி ஒரு அடி விட்டான். எனக்கு அவனுடைய கதையைக் கேட்க சிரிப்பாக இருந்தது. ‘இவங்கள் என்னைப் பிடிக்க வருவாங்கள் எண்டு நான் சாத்திரம் பார்த்து, எழுதாத டயறியை வைத்திருந்தனானாம். என்னே விவேகமான சிந்தனை’ என எண்ணினேன்.

பின்னர் அவன் அந்த இலங்கை வரைபடத்தை எடுத்துக்காட்டி, “எங்கடை காம்புகள் எங்கையெங்கை இருக்கெண்டு இந்தப் படத்தை வைச்சுத்தானே ஆமிக்கு தகவல் குடுக்கிறனி?” என வினவினான்.

நான் அதற்கு “இது யாரோ வாங்கி வந்த ரோட் மாப். எனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” எனக் கூறினேன்.

உடனே அவன் ஆவேசம் வந்தவன் போல வெளியே வந்து, அந்தத் தென்னம்பாளையால் என்னைச் சரமாரியாக அடிக்கத் தொடங்கினான். இடையிடையே “ஆமிக்கும் உனக்கும் என்ன தொடர்படா?” எனக் கத்திக் கூச்சலிட்டான்.

எனக்குத் தாங்கமுடியாத வேதனையாக இருந்தாலும், ‘என்னடா இது வம்பாக இருக்குது. என்னை இராணுவத்துடன் தொடர்புடையவன் எனப் புதுக்கதையல்லவா சோடிக்கிறாங்கள். பெரிய திட்டம்தான் தீட்டியிருக்கிறாங்கள் போல’ என எண்ணினேன்.

அவன் என்மீது அடித்துக் கொண்டிருக்கையில், அந்த இடத்துக்கு வந்த ஒருவன், “வசீகரன் இவரைக் கொண்டுபோய் உள்ளே விட்டிட்டு தன்னிட்டை வரச்சொல்ல காந்தி அண்ணை சொன்னவர்” என்று கூறினான்.

அவ்வளவுதான், ஒருவாறு நான் அவனிடமிருந்து தப்பிக்கொண்டு, மீண்டும் சிறைச்சாலைக்குள் சென்றேன். இப்போதைக்கு ஒரு சிறு நிம்மதி கிடைத்தது.

தொடரும்

கருத்துகள் இல்லை: