திங்கள், 24 அக்டோபர், 2011
எதற்கெல்லாம் கலைஞர் தலையாட்டினார் என்பது இப்போது தெரியாது.
மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. கொடுத்த ஆதரவுக்கு விலையாக அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. (ஆட்சியில் பங்கு என்று கௌரவமாகக் குறிப்பிடுவார்கள்) அப்படிக் கிடைத்த இரு மத்திய கபினெட் அந்தஸ்து அமைச்சர் பதவிகளை தி.மு.க. ஏற்கனவே இழந்துள்ளது. இழந்தது ஒன்றும் அரசியல் காரணங்களுக்காக அல்ல. ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதில், தி.மு.க. மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட கழுத்தில் பிடித்து வெளியே தள்ளப்பட்டார்கள். ஊழலோ, ஊழ்வினைப் பயனோ, அந்த இரு மினிஸ்ட்ரி ஸ்பாட்களுக்கும் தமக்கு உரியவை என்று தி.மு.க. கூறி வந்தது. சில மாதங்களுக்குமுன் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது பிரதமர்கூட, “எமது தோழமைக் கட்சியான தி.மு.க.வுக்கு என்று அமைச்சுகளை பாதுகாத்து வைத்திருக்கின்றோம். அவர்கள் கேட்கும்போது கொடுக்க வேண்டியது கூட்டணி தர்மம்” என்று கூறியிருந்தார். ஆனால், டில்லி தர்மவானுக்கு அமைச்சுப் பதவி எதையும் சென்னைக்கு கொடுக்கும் உத்தேசம் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. சென்னைக்கும் கேட்டு வாங்கும் திட்டம் ஏதும் இருந்ததில்லை. அதற்கு காரணம், இவர்களது சூப்பர் ஸ்டார் அமைச்சர் அழகிரி, அமைச்சு நடவடிக்கைகளில் விரல் சூப்பும் பாப்பா அளவில் விபரம் தெரியாத ஆளாகப் போய் அமைந்து விட்டார். “இந்த ஆளை திரும்ப எடுத்துக் கொண்டு, கையெழுத்தாவது எழுத்துப் பிழை இல்லாமல் போடக்கூடிய ஒரு ஆளை அனுப்புங்கள்” என்று பிரதமர் கதறிக் கொண்டிருந்தார். அமைச்சரவை மாற்றம் செய்த நாட்களில் டில்லி, கோபாலபுரத்துக்கு கொடுத்த பேக்கேஜே, அழகிரியையும் தூக்கிவிட்டு புதிதாக இரு அமைச்சுகள் கொடுக்கிறோம் என்பதுதான். அழகிரியை சென்னைக்கு வடக்கே தூக்கினால், சென்னைக்கு தெற்கே தி.மு.க. காலைத் தூக்கிவிடும். அந்த அச்சத்தில், “எக்ஸ்ட்ரா அமைச்சு வேண்டாம். அழகிரி இருந்தாலே போதும்” என்று கோபாலபுரத்தில் இருந்து ஓலை போய்விட்டது. அதோடு அந்த விஷயம் முடிவுக்கு வந்தது. அது அப்போது முடிவுக்கு வந்துவிட்டாலும், ஏதோ ஒரு இனிய கார்காலத்தில் தி.மு.க., “நமது அமைச்சர் பதவிகளைத் தாருங்கள்” என்று கேட்கக்கூடிய சாத்தியம், மத்திய அரசுக்கு தொண்டையில் சிக்கிய முள் போல இருந்து வந்தது. அந்த சாத்தியத்தையே இல்லாது செய்துவிட மத்திய அரசு விரும்புவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தற்போது தி.மு.க.வின் தலையாய பிரச்சினையாக உள்ளது கனிமொழி விவகாரம் அல்லவா? மகள் கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பதற்காக எதையும் செய்யும் நிலையில் உள்ளார் தி.மு.க. தந்தை. “உங்கள் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் வரிசையாக நாடாளுமன்றத்துக்கு முன்னால் நின்று தோப்புக்கரணம் போட வேண்டும்” என்று காங்கிரஸ் கண்டிஷன் போட்டால், குட்டிக்கரணமே போடச் சொல்லும் கையறு நிலை! இப்படியான சூழ்நிலையில்தான், கனிமொழி ஜாமீனுக்காக சில டீல்களை மேக் பண்ண இரு தினங்களுக்குமுன் டில்லி வந்திறங்கினார் கருணாநிதி. அப்படி மேக் பண்ணிய டீல்களில் ஒன்றுதான், மேலதிக அமைச்சர் பதவிகளை எக்காரணம் கொண்டும் கோருவதில்லை என்ற உடன்பாடாம்! இது வெளியே கசிந்துள்ள கதை. வேறு எதற்கெல்லாம் கலைஞர் தலையாட்டினார் என்பது இப்போது தெரியாது. தமிழகத்தில் ஏதோ ஒரு வேகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு, தேர்தல் கமிஷனுக்கு டிப்பாசிட் வாரிக் கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க.வின் தயவு நிச்சயம் தேவை. அது தொடர்பான வாக்குறுதிகள் எதையாவது கலைஞர் கொடுத்திருக்கலாம். ஓரிரு நாட்களாகும் அவை வெளியே தெரியவருவதற்கு! எப்படியோ, இன்று கனிமொழியின் ஜாமீன் மனு மீதான ஹியரிங், டில்லி பாட்டியாலா சிறப்பு கோர்ட்டில் நடந்தபோது, சி.பி.ஐ. எதிர்க்கவில்லை. கையில காசு, வாயில தோசை! தி.மு.க.வுக்கு மேலதிக அமைச்சர் பதவிகள் இல்லை என்பதில் எமக்கு சிக்கல் ஏதுமில்லை. ஆனால் வேறு ஒருவருக்கு இருக்கிறதே. நம்ம டி.ஆர்.பாலுதான் அந்த நபர்! இந்த டீல் உண்மையானால், பாலுவின் அமைச்சர் நாற்காலி ஆசைக்கு பால் தெளிக்க வேண்டியதுதானா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக