ஞாயிறு, 23 அக்டோபர், 2011

லூஸ்' மோகனுடன் சமரசமானது மகன் குடும்பம்!


Loose Mohan
பழம் பெரும் காமெடி நடிகர் லூஸ் மோகனுடன், அவரது மகன் குடும்பம் சமரசமாக போயுள்ளது. இதையடுத்து மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று லூஸ் மோகன் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளார். புகாரையும் அவர் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது 84 வயதாகும் காமெடி நடிகர் லூஸ் மோகன் சமீபத்தில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். கூடுதல் ஆணையர் அபய் குமார் சிங்கை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனக்கு அத்தனை வசதிகளும் இருந்தும் தனது மகன் தனக்கு சாப்பாடு போடாமல் மனைவி பேச்சைக் கேட்டு புறக்கணிப்பதாக கூறியிருந்தார். ஒரு வேளை சாப்பிடக் கூட வழியில்லாத நிலையில் தான் இருப்பதாகவும், மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மருமகள் மீதும் அவர் சட்ட நடவடிக்கை கோரியிருந்தார்.இதையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் அவருக்கு டீ, பிஸ்கட் உள்ளிட்டவற்றைக் கொடுத்து உபசரித்து ஆயாசப்படுத்தினர். அதன் பிறகுதான் லூஸ் மோகன் பசியமர்ந்தார். மேலும் அவர் கொடுத்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மயிலாப்பூர் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பறந்தது.

இதையடுத்து மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் உடனடி விசாரணையில் இறங்கினார். லூஸ் மோகன், அவரது மகன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், லூஸ் மோகன் ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதில், கடந்த 20ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் என் மகன் மீது புகார் கொடுத்திருந்தேன். இன்று நான் என் குடும்பத்தினருடன் சுமூகமாக சேர்ந்து விட்டேன். எனவே, அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மயிலாப்பூர் இன்ஸ்பெக்டரிடம் புகாரை வாபஸ் பெற்றுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இத்தனை காலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு வலிக்க சிரிக்க வைத்து ஆயுளின் நாளை கூட்ட உதவிய லூஸ் மோகனை இனிமேலாவது அவரது குடும்பத்தினர், ஒரு குழந்தையைப் போல கருதி பத்திரமாக பார்த்துக் கொள்ளட்டும்.

கருத்துகள் இல்லை: