ஞாயிறு, 23 அக்டோபர், 2011

டில்லிக்கு சென்றும், கனிமொழி வசமாகச் சிக்கிக் கொண்டார்!

புதுடில்லி, இந்தியா: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த திருப்பம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது. இந்த விழக்கு விசாரணை நடைபெறும் பாட்டியாலா சிறப்பு கோர்ட், இன்று (சனிக்கிழமை) குற்றப் பத்திரிகை தொடர்பான முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இந்த உத்தரவு, இதில் சிக்கி இப்போது சிறையில் உள்ள ராசா, கனிமொழி உட்பட பலருக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில் அமைந்துள்ளது.
இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கோர்ட் ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சி.பி.ஐ.யால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரங்களுடன் இருப்பதாக நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இங்குள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், பிரிவு 409-ல் வழக்கு பதிவு செய்யப்படுவதை கோர்ட் ஏற்றுக்கொண்டு உள்ளது. இந்தப் பிரிவு, அரசுக்கு நம்பிக்கை மோசடி என்ற வகையில் உள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கடுமையாக (சில சமயங்களில் ஆயுள் தண்டனை என்ற அளவுக்கு) இருக்கும். மற்றொரு விஷயம், இந்தப் பிரிவில் குற்றம் சுமத்தப்பட்டால், ஜாமீன் பெறுவது சுலபமல்ல.
கனிமொழி சம்மந்தப்பட்ட இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு கோர்ட்டால் பிறப்பிக்கப்படும் விஷயத்தை தெரிந்துகொண்ட கலைஞர் கருணாநிதி, டில்லிக்கு விரைந்தார். இன்று காலை காங்கிரஸ் தலைவி சோனியாவைச் சந்தித்துப் பேசினார்.
அப்படியிருந்தும், கனிமொழியை இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விலத்திக் கொள்ளவோ, கனிமொழிமீது பிரிவு 409-ல் வழக்கு பதிவு செய்யப்படுவதை தடுக்கவோ, அவரால் முடியவில்லை.
கனிமொழியுடன் சேர்த்து, பிரிவு 409-ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட மற்றையவர்களில், தி.மு.க.வைச் சேர்ந்த ஒரேயொரு நபர், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாதான். இவரும், ஸ்பெக்ட்ரம் முன்பைவிட அதிகமாக சிக்கிக் கொண்டுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கு விவகாரத்தில் அதிக அக்கறை காட்டிவரும் ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, “இந்த நாள் ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஒரு முக்கியமான நாள். இந்த வழக்கில் வேகமான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்”  என்றார். ஆனால், இந்த உத்தரவு, தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கும் நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கப் போவதில்லை.

• படித்தது, பிடித்திருக்கிறதா? நண்பர்களிடம் “விறுவிறுப்பு.காம்” பற்றி கூறுங்களேன்!

கருத்துகள் இல்லை: