வியாழன், 4 ஏப்ரல், 2019

கேரளா ராகுல் பேரணி! சும்மா அதிருதில்ல? ... இடதுசாரிகளுக்கு எதிராக ஒருவார்த்தை பேசமாட்டேன் .. வீடியோ


மின்னம்பலம் : வயநாடு தொகுதியில் இடது சாரிகளை எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் அமேதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, இன்னொரு தொகுதியாக கேரளாவில் இருக்கும் வயநாட்டை தேர்வு செய்தார். இன்று (ஏப்ரல் 4) தனது தங்கை பிரியங்கா காந்தியோடு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். குட்டியானையில் ஏறி தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்த அடுத்த நிமிடமே பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில், “என் அண்ணன், என் உண்மையான நண்பன், அதையெல்லாம் தாண்டி உறுதிமிக்க மனிதனை வயநாட்டிடம் ஒப்படைக்கிறேன். அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை ஒருபோதும் தாழவிடமாட்டார்” என்று பதிவு செய்திருக்கிறார்.
ராகுல் காந்தி வயநாட்டுக்கு மற்றும் ஒரு தொகுதி அல்ல... வயநாட்டுக்கும் ராகுலுக்கு உணர்வுபூர்வமான பந்தம் இருக்கிறது.

1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித குண்டு தாக்குதலால் கொல்லப்பட்ட பின், ராஜீவ் காந்தியின் அஸ்தி இந்தியாவின் பல இடங்களில் கரைக்கப்பட்டது. அந்த வகையில் ராஜீவ் காந்தியின் அஸ்தி வயநாட்டில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருநெல்லி என்னும் இடத்தில் பாபநாசினி ஆற்றில் கரைக்கப்பட்டது. அப்போது மூத்த காங்கிரஸ் தலைவர்களான கே.கருணாகரன், ஏ.கே.அந்தோணி ஆகியோரோடு ராகுல் காந்தியும் அஸ்திரையைக் கரைக்க வயநாட்டுக்கு சென்றார். அப்போது திருநெல்லி கோயிலில் ராகுல் காந்தி பூஜைகளையும் செய்தார்.
இந்த சம்பவத்தை நினைவுகூரும் காங்கிரஸார், வயநாடு என்பது ராகுல் காந்திக்கு வெறும் இன்னொரு தொகுதி அல்ல, அது அவருடைய கர்மபூமி என்கிறார்கள் உணர்ச்சிப் பெருக்கோடு.
இந்நிலையில் ராகுல் வயநாட்டில் போட்டியிடுகிறார் என்ற செய்தி வெளியானதுமே இடது சாரிகள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். “ராகுல் காந்தி தனது எதிரியாக யாரை நினைக்கிறார்? பாஜகவையா, இடதுசாரிகளையா?” என்ற கேள்விகள் இடது சாரிகள் தரப்பில் இருந்து எழுந்தன.,
வேட்புமனு தாக்கல் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இங்கே (கேரளாவில்) காங்கிரஸும் இடது சாரிகளும் எதிர் நிலை அரசியல் நடத்தி வருவதை நான் அறிவேன். மாநில அளவில் அது தொடரும். அந்த வகையில் எனது இடது சாரி சகோதகளும், சகோதரிகளும் என்னோடு சண்டையிடுகிறார்கள். ஆனால் இங்கே வயநாட்டில் என்னுடைய பிரச்சாரத்தில் நான் இடது சாரிகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன். நாட்டின் ஒற்றுமை, அமைதிக்கான தூதுவர் என்ற வகையில்தான் நான் வயநாட்டில் போட்டியிடுகிறேன்” என்று விளக்கம் அளித்துள்ளார் ராகுல்.

கருத்துகள் இல்லை: