புதன், 3 ஏப்ரல், 2019

சேலம்: கல்லூரி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கென்யா மாணவருக்கு ஆயுள் தண்டனை!

snakkheeran.in - elayaraja : சேலத்தில், தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கென்யா நாட்டு மாணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் அம்மாபேட்டையில் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கென்யா நாட்டைச் சேர்ந்த எரிக் (27) என்ற மாணவர், கடந்த 2016ம் ஆண்டு எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கென்யாவைச் சேர்ந்த 22 வயதான மாணவி ஒருவரும், அப்போது இதே கல்லூரியில் பயோ டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அந்த மாணவி, கல்லூரி செல்வதற்கு வசதியாக அதிகாரிப்பட்டி என்ற பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். மாணவர் எரிக்கும், அந்த மாணவியும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் எரிக், ஒரு நாள் இரவில் அந்த மாணவி தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று தங்கி இருந்தார். அப்போது எரிக், அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக புகார் எழுந்தது.


இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, எரிக்கை கைது செய்தனர். அவருக்கு இப்போது வரை ஜாமின் கிடைக்கவில்லை. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு விசாரணை, சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் நடந்து வந்தது.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மாணவர் எரிக்குக்கு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம், பாலியல் பலாத்கார குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் உள்பட மேலும் சில பிரிவுகளின் கீழ் தண்டனைகள் விதித்து தீர்ப்பு அளித்தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார். 

குற்றவாளி, வெளிநாட்டு மாணவர் என்பதால் அவரை சென்னை புழல் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் எரிக், புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

கருத்துகள் இல்லை: