பட்டுகோட்டையாரின் மகனும் மனைவியும் |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிறு வயதில் பாட்டுக்கட்ட தொடங்கிய போது அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதனால் தான் எழுதிய பாடல்களை சிறு சிறு புத்தகங்களாக அச்சிட்டு திருவிழாக்களில் விற்றார். அப்படித் தான் ஒரு முறை பாட்டுப்புத்தகங்கள் அச்சிட்ட நிலையில் அதை வாங்க அச்சுக் கூலி கொடுக்க பணம் இல்லை. அதனால் அச்சகத்தார் புத்தகத்தை கொடுக்கவில்லை. ஆனாலும் அந்த இளைஞர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அந்த வழியாக வந்த தோழர் எம்.எம். என்கிற மாசிலாமணி என்ன என்று கேட்க பாட்டுப்புத்தகம் கொடுத்தால் திருவிழாவில் விற்று அச்சகத்திற்கு பணம் கொடுப்பேன் என்று சொல்ல.. அந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்த எம்.எம். புரட்சிப் பாடல்களாக இருக்கிறதே என்று புத்தகத்தை கொடுக்கச் சொன்னார். திருவிழாவில் புத்தகம் விற்று பணம் கொடுத்தார் கல்யாணசுந்தரம். அதன் பிறகு சென்னை சென்றார். சென்னை சென்று சினிமாவுக்கு பாட்டு எழுதி ஓரளவு சம்பாதிக்கும் நிலையில் எம்.எம்.க்கு சைக்கிள் வாங்கி கொடுக்க நினைத்தார் அதற்குள் மறைந்து போனார்.
இவர் எழுதிய அத்தனை பாடல்களும் ஏதாவது
சூழ்நிலைகளை கொண்டே அமைக்கப்பட்டிருந்தது. செங்கப்படுத்தான்காட்டி சின்ன
சின்ன குழந்தைகள் ஓடியாடி விளையாடச் செல்லும் போது வேப்பமர உச்சியில் முனி
இருக்கிறது என்று பயமுறுத்தி வைத்ததை பார்த்து தான் வேப்ப மர உள்ளிசியில்
நின்று பேய் ஒன்னு ஆடுதுன்னு நீ விளையாடப் போகும் போது சொல்லி வப்பாங்க..
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வப்பாங்க.. என்ற மூடநம்பிக்கை ஒழிப்பு
பாடலை பாடினார்.
அதே போல சென்னைக்கு போய் பாட்டு எழுத
வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த போது.. பசி கையில் காசில்லை. ஒரு ஓட்டலில்
சாப்பிட்டவர் மாவு ஆட்டத் தொடங்கிய போது எதிரே ஒரு கோயில் அதைப் பார்த்து
அம்பிகையே முத்துமாரியம்மா.. உன்னை நம்பி வந்தேன் காளியம்மா என்று தன் நிலை
குறித்து பாட அதைக் கேட்ட ஓட்டல் முதலாளி அவரை அழைத்து வாய்ப்பு
கிடைக்கும் வரை தங்கி இருந்துக்க என்று துணிகளையும் கொடுத்தாராம்.
சினிமாவில் பாட்டு எழுத வாய்ப்பு கிடைத்த
பிறகே ஊருக்கு வந்தவருக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்று உறவினர்கள்
கட்டாயப்படுத்தினார்கள். அப்ப தான் ஆத்திக்கோட்டை கிராமத்திற்கு பொண்ணு
பார்க்கச் சென்ற போது பால் கறந்து கொண்டிருந்த பெண்ணைப் பார்த்துட்டு அவங்க
கல்யாணம் செஞ்சுகிறேன் என்று கவிஞர் சொல்ல மறு பேச்சு இல்லை. அந்த பெண்
தான் கௌரவம்பாள். கவிஞர் கல்யாணத்துக்கு நிறைய பேர் வருவார்கள் என்று
ஆற்றங்கரையில் 4 கி.மீ புது ரோடு போட்டார்கள். கவிஞர் பாரதிதாசன் கல்யாணம்
செய்து வைத்தார்.
மனைவிக்கு வளைகாப்பு நடக்கும் போது மச்சான்
மறைந்திருந்து பார்த்து சிரித்தாராம். அதற்காக அக்காளுக்கு வளைகாப்பு
அத்தான் முகத்தில் புன்சிரிப்பு என்று பாடினார். இப்படி அவர் எதற்கும்
கூழ்நிலை அமையும் போதெல்லாம் பாடினார்.
ஆனால் அவரது ஆயுட்காலம் 1957 ல் திருமணம்.
1959 மரணம். 29 ஆண்டுகளே அவர் வாழ்ந்த வாழ்க்கை. கௌரவம்பாளின்
மண வாழ்க்கையே 20 மாதங்கள் தான். கவிஞரின் மறைவுக்கு பிறகு மணிமண்டபம்
கட்டப்பட்டது.
கடந்த 2014 ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம்
பேராசிரியர் சரோன் கவிஞரின் ஆவணப்படத்தை பட்டுக்கோட்டையில் படத்தை நடிகர்
பாக்கியராஜ் தலைமையில் கௌரவம்பாள் வெளியிட்டார். அந்த விழாவில் கலந்து
கொண்ட அனைவரும் கவிஞரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அந்த நினைவுகளை
மீண்டும் வாசகர்களுக்காக..
20 மாதங்களே இல்வாழ்க்கை.. – கௌரவம்மாள் நெகிழ்ச்சி.
என்னை கவிஞர் சின்னப்புள்ள என்று தான்
அழைப்பார். அடிக்கடி சின்ன சின்ன கோபம் வரும் அது கொஞ்ச நேரம் தான்.
எங்களுக்கு 1957 ல் கல்யாணமாகி 1959 ல் இறந்துவிட்டார். 20 மாதங்கள் தான்
அவர் என்னுடன் இருந்தது. சில நேரங்கள் சினிமா கம்பெனிகளுக்கு போயிட்டு
ரொம்ப பாதி ஜாமத்தில் வருவார். அதற்குள் நான் தூங்கிவிடுவேன். சென்னையில்
நாங்கள் இருக்கும் போது காலையில் ஒரு பையன் “பேப்பய“..“பேப்பய“ ன்னு
சொல்லிக்கிட்டே வருவான். ஒரு நாள் கவிஞர்கிட்ட கேட்டேன் என்னங்க அந்த பையன்
தினமும் “பேப்பய“ ன்னு சொல்றானே.. என்றேன். அவன் பேப்பரு பேப்பருன்னு
சொல்றான் என்றார். சென்னை தமிழ் அப்படி இருக்கிறது. தமிழை கெடுக்கிறார்கள்.
அவரைப் பற்றி யார் பேசினாலும் அழுதுடுவேன். அவ்வளவு அன்பா இருந்தவரு கவிஞர். என்று நெகிழ்ந்தார்.
மக்கள் கவிஞராகி 50 வது நாளில் இறந்தார் பட்டுக்கோட்டை.. – ஸ்டாலின் குணசேகரன்.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆவணப்பட குறுந்தகட்டை பெற்றுக் கொண்டு தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேசும்
போது.. ஒரு முறை பட்டுக்கோட்டையும், வ.கே.பாலச்சந்தரும் கோவைக்கு சென்றனர்.
அதை அறிந்த வடிவேல், எழுத்தாளர் மு.பழனியப்பன் ஆகிய இருவரும் வந்து
தொழிலாளர் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைத்தார்கள். கூட்டத்தில்
பேச பட்டுக்கோட்டை எழுந்த போது மக்கள் கவிஞர் என்று பாட்டாளி மக்கள் குரல்
உயர்ந்தது. மறுபடியும் எழும் போதும் அதே குரல்கள் உயர்ந்தது. அங்கு தான்
பாட்டாளி மக்கள் வைத்த பெயர் தான் “மக்கள் கவிஞர்“ அந்த பெயர் வைத்த 50
வது நாளில் கவிஞர் இறந்துவிட்டார். இந்த தகவலை மு.பழனியப்பன் ஒவ்வொரு
தொழிற்சாலையாக சென்று தொழிலாளர்களிடம் சொல்கிறார். ஒட்டு மொத்த பாட்டாளி
மக்களும் யாரும் அழைக்காமல் ஒன்று கூடி அமைதி ஊர்வலம் நடத்தி கதறி
அழுதார்கள் என்றார். அந்த காட்சிகளும் ஆவணப்படத்தில் இருந்தது.
180 மணி நேரம் எடுத்து 2.30 மணி நேரமாக்கி இருக்கிறேன். – இயக்குநர் சரோன்..
பட்டுக்கோட்டையின் பாட்டை எனக்கு
பாடிக்காட்டி என் தந்தை என்னை வளர்த்தார். அதனால இந்த தூண்டுதல் வந்து
ஆவணமாக்க நினைத்து அலைந்தேன். பல நாட்கள் பட்டினி கிடந்து தகவல்களை
தேடினேன். படாத அவமானமில்லை அத்தனையும் பட்டேன். இப்போது உழைப்பு வீண்
போகவில்லை.
மொத்தம் 180 மணி நேரம் காட்சிகளாக்கி அதை
2.30 மணி நேரமாக குறைத்து இருக்கிறேன். முழு ஒத்துழைப்பு
கொடுத்திருக்கிறார் ஓவியர் ராமச்சந்திரன். ஏதாவது காட்சி எடுக்க வேண்டும்
என்றால் அதை ஓவியமாக வரைந்து கொண்டு பெங்களுரில் இருந்து சென்னை
வந்துவிடுவார்.
கவிஞர் தங்கிய அறை, முதல் நாடக கொட்டகை
எல்லாம் நான் படம் எடுக்கும் வரை இருந்தது. இப்போது அது எதுவும் இல்லை.
கௌரவம்பாளை பெண் பார்த்துவிட்டு மாட்டு வண்டியில் வீடு திரும்பும் போது
கவிஞர் ஒரு பாட்டு பாடி இருக்கிறார். “ என் அருமை காதலியாம் வெண்ணிலாவே”
என்ற பாடல் தான் அது.
ஒரு முறை கவிஞர் பட்டுக்கோட்டை அரியலூர்
வழியாக ரயிலில் அரியலூர் சுலைமானுடன் சென்னை செல்கிறார். அப்போது
அரியலூரில் சுலைமான் கவிஞரை இறங்கி தன் வீட்டுக்கு போயிட்டு போகலாம் என்று
அழைத்துச் செல்கிறார். அதனால் அவர் செல்ல வேண்டிய ரயில் சென்றுவிட்டது.
ஆனால் அந்த ரயில் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகி பெரும் சேதம்
எற்பட்டது. சுலைமான் வீட்டிற்கு செல்லவில்லை என்றால் கவிஞரும் அந்த ரயிலில்
சென்று
இருப்பார்.
கோயம்பேடு பூ கடையில் ஒரு சிறு படம்
இருந்தது. அதை உற்றுப்பார்த்தேன். அது கவிஞரின் அரிய படம். அதை அந்த
கடைகார்ரின் அப்பா வைத்திருப்பதாக சொன்னார். அதை அவர் கொடுக்க மறுத்தார்.
கெஞ்சி வாங்கி வந்து அந்த படத்தை சேகரித்தேன். அந்த படம் அந்த பூ கடையில்
மட்டுமே உள்ளது என்பது தான் அபூர்வம்.
மண்ணையும் மாண்பையும் திரையில் உலா வர
வைத்தவர் பட்டுக்கோட்டை மட்டுமே.. அவருக்கு உற்ற துணையார் இருந்தது
கௌரவம்பாள் தான். நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான்..
.இயக்குநர் பாக்கியராஜ்.
வாலியை கூட கவிஞராக்கியது பட்டுக்கோட்டை
தான். ஒருமுறை பட்டுக்கோட்டையின் உதவியாளர்கள் அவர் எழுதிய பாடல்களை விற்று
சாப்பிட்டனர். கவிஞருக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்தார்கள். எப்படி காசு
வந்தது என்று கவிஞர் கேட்கும் போது தான் சொன்னார்கள் நீங்கள் எழுதி
வைத்திருந்த பாட்டு பேப்பர்களை பழை பேப்பருக்கு விற்றோம் என்றனர். அதற்கு
கவிஞர் கோபப்படவில்லை என்றார்.
பின்னாளில் அவர் எழுதிய பல பாடல்கள் வேறு பாடலாசிரியர்கள் பெயரில் திரையில் பார்த்த போது தான் அந்த கோபத்தை வெளிக்காட்ட..
ஆத்திலே மீன் பிடிக்க அதில் ஒருவன் காத்திருக்க.. காத்திருந்த கொக்கு அதை கவ்விக் கொண்டு போனது ஏன் கண்ணம்மா.. என்று பாடினார்.
இப்படி கவிஞருக்கு உற்ற துணையாக இருந்த கௌரவம்பாள் தான் தனது 80 வது வயதில் மரணம் அவரை அழைத்துக் கொண்டது. அந்த கிராம மக்கள் மட்டுமின்றி அத்தனை கிராம மக்களும் கண்ணீர் வடிக்கிறார்கள்
இப்படி கவிஞருக்கு உற்ற துணையாக இருந்த கௌரவம்பாள் தான் தனது 80 வது வயதில் மரணம் அவரை அழைத்துக் கொண்டது. அந்த கிராம மக்கள் மட்டுமின்றி அத்தனை கிராம மக்களும் கண்ணீர் வடிக்கிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக